கன்றின்பின் போக்கினேன் எல்லே பாவமே!
Author: மீனாக்ஷி பாலகணேஷ்
சொல்வனம் | இதழ் 322 |
14 ஜூலை2024
...
அண்ணா பலராமன், இன்னும் மற்ற இடைச்சிறுவர்களுடன் இன்று நானும் மாடுமேய்க்கச் செல்கிறேன் அம்மா,” என்றான்.
கண்முன் உலகமே இருண்டுவிடுகிறது யசோதைக்கு. என்னவெல்லாமோ கூறி அவனிடம், ‘போகவேண்டாம்,’ என்று தடுக்கப்பார்க்கிறாள்.
‘
ஆனால் கிருஷ்ணன் அன்னையிடம் கொஞ்சிக்கெஞ்சி அண்ணன் பலராமனுடன் செல்ல எப்படியோ அனுமதிபெற்று விடுகிறான்.
யசோதையும், கட்டித்தயிர் விட்டுப் பிசைந்த தயிரன்னத்தினையும், இன்னும் அப்பம், முறுக்கு எல்லாம் கட்டிக்கொடுத்து, நூறுமுறை புத்திமதிகூறி, தன் ஆசைமகனை மாடுமேய்க்க அனுப்பிவைக்கிறாள்.
‘அவனும்தான் வளர்ந்து வருகிறான். அவன் ஆசையைக் கெடுப்பானேன், ஒருநாளில்லாவிடினும் மற்றொருநாள் மாடுமேய்க்கப் போகவேண்டியவன் தானே’ எனும் தாயுள்ளம்.
மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த* வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள்.
அஞ்சன வண்ணனை ஆயர்குலக் கொழுந்தினை
மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே,
கஞ்சனைக் காய்ந்த கழலடிநோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே!
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து- 2)
..