என் எண்ணங்கள்

Post Reply
grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

என் எண்ணங்கள்

Post by grsastrigal »

நான் படித்ததில் பிடித்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

1) நஞ்சுண்ட நீலகண்டன்

ஆதி சங்கரர் “சிவ பாதாதி கேசாந்த்ர ஸ்தோத்ரம்” என்று ஒன்று எழுதி இருக்கிறார். அதில் சிவனுடைய ஒவ்வொரு அங்கத்தையும் பற்றி ஒரு நான்கு வரிகள். முடியும் போது, அந்த அங்கம் என்னை/நம்மை காக்கட்டும் என்று முடிக்கிறார்.

இந்த புத்தகம், காஞ்சி பெரியவர் முன்னுரை எழுதி ஒரு புத்தகமும், ஸ்ருங்ககிரி சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் முன்னுரை எழுதிய புத்தகமும் கிடைத்தது.

இதில் நீலகண்டத்தைப் பற்றி ஆச்சர்யமான ஒரு ஸ்லோகம் உண்டு. இதற்க்கு முன்பு, அபிராமி பட்டர் எழுதிய ஒரு அற்புதமான செய்யுளில், “அம்மா, நான் எவ்வளவோ நல்லது கெட்டது எடுத்துச் சொன்னாலும் நான் தவறு செய்து கொண்டு தான் இருக்கிறேன். தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகள். அதற்க்காக என்னைக் கை விட்டு விடாதே. பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் அள்ளி உண்டான். அந்த நஞ்சையே அவன் கழுத்தில் நிறுத்தி அவரை காத்தாய். ஆல கால விஷத்தின் தன்மையயே மாற்ற வல்லவள் நீ. நான் செய்யும் பிழைகள் எல்லாம் ஜூஜூபி. “ என்கிறார்.

“புது நஞ்சை உண்டு, கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே” என்கிறார்

ஆதி சங்கரர், இந்த சீரியஸ் ஆன விஷயத்தை கொஞ்சம் நகைச்சுவை நகைச்சுவை கலந்து சொல்கிறார்.

“பார்வதி தேவி, தன் பதியான பரமேஸ்வரனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து கழுத்துக்கு கீழே பிடிக்க, மகா விஷ்ணு உலகத்துக்கு ஆபத்து வந்து விடுமோ என்று கழுத்தை மேலே பிடிக்கிறார்.”
(சப்ராந்தாயா: சிவயாஹா: என்று ஆரம்பிக்கிறது இந்த ஸ்லோகம்)

மேலும் சொல்கிறார். “இந்த இருவரும் கோபத்துடன் (சரபசம்) முன்னும் பின்னும் இழுக்க, எந்த ஹால கால விஷம், திரிசங்கு போல ஒரு அவஸ்தையை அனுபவிக்கிறதோ, அந்த நீலகண்டனின் நாபி, எங்களின் (வ:) பாபக் கூட்டங்களை அடியோடு நாசம் செய்யட்டும்.” என்று முடிக்கிறார்.

"சோயம் சர்வாபதாம் வ: ஷமயது நிசயம் நீலகண்டஸ்ய கண்டஹ" என்று அந்த சம்ஶ்க்ருத ஸ்லோகம் முடிகிறது

எவ்வளவு அழகு.....
Last edited by grsastrigal on 10 Jan 2022, 12:06, edited 1 time in total.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: என் எண்ணங்கள்

Post by grsastrigal »

2. நாராயணா என்னா நாவென்ன நாவே !

சிலப்பதிகாரத்தில் உள்ள ஒரு வரி இது. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட இந்த காவியத்தில், கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்த நாராயணனைப் போற்றி பாடும் மகாபாரததின் சிறப்பு சொல்லப்பட்டிருக்கிறது. திருமாலின் புகழ் இரண்டாம் நூற்றாண்டிலேயே பரவி இருந்தது என்பதற்\க்கு, சிலப்பதிகாரம் சாட்சி.

கீரன் சொல்கிறார்- “மதுராபுரி சங்கம் வைத்தும் மா பாரதம் தமிழ் படுத்தியும் என்று ஒரு வாசகம் உண்டு. பாரதம் பாடிய பெரும் தேவனார் என்று ஒருத்தர் இருந்தாராம். இதெல்லாம் 2000 வருடத்திற்க்கு முந்தைய கதை.

“வடவரையை மத்தாக்கி” என்ற ஒரு அருமையான பாடலில் உள்ள மடந்தாழு நெஞ்சத்து” என்று தொடங்கும் (இந்தப் பாடலை “கோகிலா கான” என்று 1940 களிலேயே பட்டம் பெற்ற எம்.எஸ். அம்மா அவர்களில் குரலில் பலர் கேட்டு ரசித்திருக்கலாம்) பாடலில் உள்ள ஒரு வரி தான் தலைப்பு.

கிருஷ்ண பரமாத்மா அவதாரம் எடுத்து பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. ராம அவதாரத்தில் தன்னை மனிதனாக காட்டிக்கொண்ட பெருமாள், வட்டியும் முதலுமாக கிருஷ்ணாவதாரதில், ததிபாண்டன் முதல் போற வரவனையெல்லாம் ஸ்வர்க்கம் அனுப்பிக்கொண்டிருந்தார்.
மனத்தாலும், உடலாலும் பல கஷ்டங்கள். தான் தாய் தந்தையரை பிரிந்து வாழ்ந்தது, அப்ப அப்ப கம்ஸன் கொடுத்த “பூதனை” போன்ற “அரக்க அலப்பறைகளை” ஜெயித்தது. பிறகு கம்ஸனை ஜெயித்தது. பிறகு பாண்டவர்கள், தன்னோடு இருக்குமாறு சொன்ன ஒரே காரணத்துக்காக, தூது நடந்தது, திரௌபதி மானம் காத்தது. ஆயுதத்தை தொடமாட்டேன் என்று சபதம் செய்து, பீஷ்மர் என்ற ஒரு பக்தனுக்காக, சபதத்தை துறந்தது, குரு சாந்தீபணிக்காக, கடலில் காணாமல் போன குழந்தையை அதே வயதில் திருப்பி கொடுத்தது, காளிங்கன், மழை குடை இத்யாதி.
நாயகன் படத்தில் கமல் “வாக்கு கொடுத்துட்டேன்” என்று சொல்வது போல் சொல்லி, பரமாத்மா பட்ட அல்லல்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

“இப்படி பக்தனுக்காக பாடுபட்ட பரமாத்மாவை நினைக்காத நாக்கு என்ன நாக்கு” என்று இளங்கோ அடிகள் புலம்புகிறார்.

பிடுக்கு மண் சுமந்து பக்தனுக்காக, பிரம்படி பட்டது அங்கே என்றால், இங்கே மண்ணுக்காக, அடி மேல் அடி வைத்து தூது சென்றது.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அது என்ன “நாவென்ன நாவே”. எல்லா நாக்கும் ஒரே நாக்கு தானே. இதில் நாராயணனை சொல்லும் நாக்கு, சொல்லாத நாக்கு என்று ஏதாவது வரையறை யோ அல்லது காரணமோ இருக்கிறதா என்ன ? என்ற கேள்விக்கு, அருமையான விளக்கத்தை புலவர் கீரன் தருகிறார்.
“அடகு கடை வைத்திருக்கும் என் நண்பர், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சாப்பாட்டில், கல் இருக்க, மனைவியிடம், “ஒழுங்காக அரிசி களைய வேண்டாமா ஒரே கல்” என்று சொல்லிவிட்டு, அந்தக் கல்லை தூர எறிந்து விட்டு சாப்பிடுகிறார். வெளியிலே வரும்போது, குழந்தைகள் சின்ன சின்ன கற்களை வைத்து விளையாடி விட்டுச் செல்ல, அது காலில் குத்த, கோபம் கொண்டு, குழந்தைகளை திட்டி விட்டு, காலால் உதைத்து தள்ளி விடுகிறார்.
பிறகு தான் அடகு கடைக்கு வந்து பார்க்க, அங்கே கடையைப் பெருக்காமல் அங்கே இங்கே கிடக்க, கையால் பொறுக்கித் தூர எரிகிறார்.

பின்னர் கடையில் வந்து உட்கார்ந்த பின்னர், ஒருவர் தங்க நகையை கொண்டு வந்து கொடுக்க, ஒரு கல்லை எடுத்து, அந்த நகையை உரசிப் பார்க்கிறார். பிறகு அந்தக் கல்லை பத்திரமாக உள்ளே வைக்கிறார். அது என்ன கல். உறை கல்.

“எல்லாக் கல்லும் கல்லு தானே, சாப்பாட்டில் இருந்த கல், வீதியில் இருந்த கல், கடையில் குப்பையில் இருந்த கல். எல்லாமும் கல்தான். அதை தூக்கி எறிந்தோம், உறை கல்லை மட்டும் ஏன் உள்ளே வைத்தோம் என்றால், அது நாராயணன் என்ற அந்த தங்கத்தோடு சேருவதால்”...
என்று முடிக்கிறார்.

ஒரு கல்லுக்குப் பின்னே இத்தனை சொல்லா ?

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: என் எண்ணங்கள்

Post by grsastrigal »

அனுமான்

அனுமான் முதன் முதலாக ராம லக்ஷமணர்களை சந்திக்க வருகிறார். இந்த நிகழ்ச்சியை சற்று சிந்திப்போம்.
அனுமான் நமக்கு management கிளாஸ் எடுக்கிறார் !!!!

நாம் முதலில் ஒருவரை, முதல் தடவையாக சந்திக்கும்போது என்ன செய்வோம்:

• அவர்களை பற்றி யாராவது நமக்கு முன்பு சொல்லி இருப்பார். அதை மனதில் வைத்து அவரைப் பற்றி நமது மனதில் ஒரு ஐடியா கிடைக்கும்.

• அவரை பார்த்த ஐந்து நிமிடத்திலேயே அவரைப் பற்றி ஒரு ஐடியா கிடைக்கும்.

• அவருடைய நண்பர்களின் மூலமும் அவரை பற்றித் தெரியும்.

இப்படி ஒரு preparation உடன் செல்லும்போதே, சில சமயங்களில் சொதப்புவோம். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்போம். அவருக்கு குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்.... இப்படி பல சத்திய சோதனைகள் !!!!

ஆஞ்சநேயரைப் பற்றி, எவ்வளவு எழுதினாலும், இன்று முழுவதும், என்றும் ரசிக்கலாம். அவர் சத்குருநாதர். ஒரு குரு தான், நம்மையும், இறைவனையும் இணைக்கிறார். அவர் ஒரு பாலம். சீதா என்ற ஜீவாத்மாவை, ராமன் என்ற பரமாத்மாவுடன் இணைத்தவர் அவர்தானே. அதால் தான் அந்த காண்டத்திற்க்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார்கள் !!!! வீட்டில் சுந்தர காண்டம் பாராயணம் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். ஆஞ்சநேயர் நம் கூடவே இருப்பார்.

நாமும், நித்யம் பரமாத்மாவுடன் இணைவதற்க்கு படாத பாடு படுகிறோம். குருவைத்தேடி துவண்டு போகிறோம். சுந்தர காண்டம் படித்தால், ஆஞ்சநேயர் வந்து நம்மை குருநாதரிடம் அழைத்துப் போவார். அவரே குருநாதராகவும் வருவார்.

கமபன் சொல்லும்போது- சீதை, அனுமானை, “அருளின் வாழ்வே” என்கிறாள். இதற்க்கு “அருளை வாழ வைப்பவனே (அ) அருளே வாழாக இருப்பவனே (அ) அருளுக்கு வாழ்வு தருபவனே- என்று பல பொருள்களை கூறலாம்.
செய்யுள் நடை - “அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே, அருளின் வாழ்வே” என்று போகிறது.
சீதை தற்கொலைக்கு முயன்றால். அதை தடுத்து நிறுத்தியதால், அனுமன் தாய் தந்தை ஆனான்- என்றும் கொள்ளலாம்.

சீதை- “நீ சிரஞ்சீவியாக இருப்பாய்.” என்கிறாள். “நான் குற்றமற்ற குணம் உள்ளவள் என்பது உண்மையானால். ஒர் ஊழிக்காலம் பகலாக மாறி, இந்த உலகம் அத்தனையும் அழிந்த போதிலும், இன்று போல் நீ இருப்பாய்” என்கிறாள்.
இங்கு குரு பரமாத்மாவை தேடி வரும் அறிய காட்சியை, வால்மீகி எப்படி எடுத்துக் காட்டுகிறார் என்பதைப் பார்ப்போம்.

சொல்லின் செல்வன் என்று கம்பன் காட்டும் அனுமான் (கிஷ்கிந்தா காண்டம் ஆரம்பம்) எப்படி ஒரு அந்தணர் வேஷம் பூண்டு ராம லக்ஷ்மணர்களிடம் வந்து பேச ஆராம்பிக்கிறார். (முதலில் முன் பின் தெரியாதவர்களிடம் பேசும்போது எப்படி “பாசிடிவ்” ஆக பேச வேண்டும் என்பதை ஒரு வானரம் நமக்குக் காட்டுகிறது)
வால்மீகி சொல்கிறார்- “அனுஷ்டானத்தில் உள்ளபடி வரவேற்று பிறகு பேசுகிறார். (பிராமணர் வேஷம் பூண்டு இருக்கிறார் இல்லையா) – அதனால் வேதம் இங்கு வருகிறது.

முதலில் அவர்களுடைய குணாதிசயங்களை புகழ்ந்து பேசுகிறான், பிறகு அவர்களின் நோக்கத்தைக் கேட்கிறான் ....

• அபூர்வமான உடல் வண்ணம் பெற்றுள்ள தாங்கள் இருவரும் இந்த இடத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் ?

• மிகவும் மன உறுதி படைத்தவர்கள் போல காணப் படுகிறீர்கள். சிங்கத்தைப் போன்ற பார்வை. சிங்கத்தைக் காட்டிலும் அதிக பாராக்ரமம். இந்திரனுடைய வில்லைப் போன்ற ஒரு வில் வைத்திருக்கிறீர்கள். இதிலிருந்து நீங்கள் எதிரிகளை அடக்க வல்லவர்கள் என்று தெரிகிறது.

• தாமரையிதழ் போன்ற கண்களை உடையவர்கள், தற்செயலாக தேவ லோகத்தில் இருந்து இந்தப் பிரதேசத்திற்க்கு வந்து விட்டவர்கள் போலத் தோன்றுகிறீர்கள்.

• எதிர் பாராத விதமாக பூமிக்குள் வந்துவிட்ட சூரிய சந்திரர் போல இருக்கிறீர்கள்.

• எல்லா அணிகலன்கள் அணியத்தக்க உடல் உறுப்புகளை கொண்ட நீங்கள் ஒரு அணிகலன் கூட அணியவில்லை !!

• அம்பு, வில் இவர்களைப் பற்றியும் அனுமான் புகழ்ந்து தள்ளுகிறார்.

அனுமனின் முதல் சந்திப்பில், அவன் சொன்ன வார்தைகளை கவனித்தால் தெரியும். ஒரு பெரிய அறிவு ஜீவி,

ஆனால் அதை எவ்வளவு அடக்கமாக பேசுகிறான் என்று மேலே பார்த்தோம்.

இதற்க்கு ராமன், இலக்குவனிடம் சொல்லும் பதில் “இவன் மகாபலம் பொருந்திய சுக்ரீவனின் அமைச்சன். தங்களுக்கு க்ஷேமம் உண்டாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் வந்திருக்கிறான். சுமித்திரை செல்வனே, இனிய நட்பு தோன்றும் சொற்களால் பதில் கூறுவாயாக ! ரிக் வேதம் படிக்காத, யஜுர் வேதம் பயிற்சி பெறாத, சாம வேதம் பயிலாத ஒருவனால், இவ்வளவு உயர்தரமான சொற்களை கொண்டு பேச முடியாது”

ராமனின் கணிப்பைப் பாருங்கள்.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: என் எண்ணங்கள்

Post by grsastrigal »

கடாக்ஷ வீக்ஷண்யம்

அம்பாளின் பார்வையைப் பற்றி, பாட்டு எழுதி தள்ளி இருக்கிறார்கள். கடைக்கண் வைத்தென்னை ஆளம்மா, கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே... .என்று.

கடாக்ஷ சாதகம் என்று, நூறு செய்யுள் அங்கே மூக கவி எழுதி இருக்கிறார்.

ஒரே ஒரு ஸ்லோகம். மூக கவியை பார்ப்போம். கடாக்ஷ சாதகம் – 5 வது ஸ்லோகம்- “காமக்ஷியே, அடிக்கடி வெண்ணிறமுடைய புன் முறுவலின் உதவியைப் பெற்றதாகியும், பயங்கர மூர்த்தியாகிய பரமசிவனுடைய மனதை களிப்பிப்பதாகியுமுள்ள உம்முடையதான கடைக்கண்களின் ஒளியானது அடிக்கடி புன் முறுவலையுடைய அர்ஜுனனுடைய உதவியைப் பெற்றதாகியும், பீமசேனனுடைய மனதைக் களிப்பிப்பதாகியுமுள்ள பாண்டவர்களின் சேனையைப் போன்றதாகியும், ஐயோ கர்ணனுடைய பக்கத்திலேயே போய்ச் சேர்வதைப் போல காதுகளின் அருகே செல்கின்றதே !!

என்ன ஒரு கற்பனை ?!

இது ஒரு சிலேடையான வார்த்தை, கண் காதுவரை நீண்டு, விரோதியான காதை அடைகிறது. என்பதை குறிக்கிறது. கர்ணன் (காது) என்ற விரோதியை அடையும் கண் என்பது போல்....

காஞ்சிப் பெரியவா கூட கோவிலில் ஸ்வாமிக்கு நேரே நின்று, பார்க்கக் கூடாது. ஸ்வாமிக்கு வலது புறமோ, இடது புறமோ நின்று பார்க்க வேண்டும்., என்று சொல்லுவார். கடைக்கண் பார்வைக்காக.

அபிராம் பட்டர் என்ன கிடைக்காது (எல்லாம் கிடைக்கும்) என்ற ஒரு அர்த்தத்தில். நாலு வரியில் எல்லா பலன்களையும் எழுதித் தள்ளி விட்டார்.

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-- கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

என்று சொல்கிறார்

பகவத் பாதாள் அருளிய ஸ்தோத்ரத்தில் சௌந்தர்ய லஹரி மிகவும் விசேஷமானது. அதனாலோ என்னவோ, பகவத் பாதாளின் அஷ்டோத்தர நாமாவளியில் ஒரு நாமா ““சௌந்தர்ய லஹரி பஹூ ஸ்தோத்ர விதாயகாயா நமஹ” என்று இருக்கிறது

மஹா பெரியவாள் சொன்ன விளக்கத்தை கீழே கொடுத்து இருக்கிறேன்:

ஆச்சார்யாள் அவர்களிடம் அம்பாளுடைய கடாக்ஷம் பூரணமாக ஸ்புரித்துக் கொண்டிருந்தபோது வந்த ஸ்லோகம் இது. 57 வது ஸ்லோகம் இது.

அதன் அர்த்தம் கீழே:

அம்பாளின் கடாக்ஷமானது வெகு தூரம் விழக்கூடியவை. பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாப் பிராணிகளும் குழந்தைகள். எல்லாவற்றிற்க்கும் தாயாக இருப்பவள் ஜகன்மாதாதான். அவளுடைய கண்கள் கொஞ்சம் திறந்து கொஞ்சம் மூடிக் கொண்டு இருக்கிறது. நீலோத்பல புஷ்பம் எப்படி இருக்குமோ அதே மாதிரி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அப்படி அம்பாளுடைய பார்வை நீண்டு, குளிர்ச்சியாக பிரபஞ்சத்தில் இருக்கும் வஸ்துக்களின் மீது விழுகிறது.

அப்படி விழும் உன் கடாக்ஷமானது எல்லோரையும் காப்பற்றட்டும் என்கிறார். மேலும்

“என்னையும் உன் கிருபையால் உன் கடாக்ஷ பிரவாகத்திலே மூழ்கும்படியாகச் செய். அதாவது மிக எளியவனான என்னையும் உன்னுடைய கிருபையிலே மூழ்கும்படியாக செய்து பவித்ரமாக்கு” என்று பிரார்தித்துக் கொள்கிறார்.. (ஸ்நபயா கிருபயா மாமபி ஷிவே).

ஆசார்யாள் என்ன சொல்ல வருகிறார் என்றால், “எனக்குக் கிடைக்கிறதில் நியாயமே இல்லை. இருந்தாலும் உன்னுடைய கடாக்ஷத்தில் பிறந்தவன் தானே நானும். நானும் உன் குழந்தைத்தான். அதனால் எல்லோருக்கும் கடைசியில் இருப்பவனான என்னையும் கிருபையினாலே உன்னுடைய கடாக்ஷப் பிரவாகத்தில் மூழ்கும்படிச் செய்.” என்கிறார்.

இதனாலே உனக்கு ஏதாவது சிரமம் இருக்குமோ ? அதெல்லாம் ஒன்றும் கிடையாது, ஆனால் எனக்கு பெரிய பாக்யம் கிடைக்கும். உன் கருணா கடாக்ஷம் பட்டவுடன் நான் கிருதார்தனாவேன்” என்கிறார்.

இதற்க்கு ஒரு திஷ்டாந்தம் வேறு சொல்கிறார் ஆதி சங்கரர். “பூர்ண சந்திரன் பிரகாசிக்கிறான். ஒரே மூட் புதர் காடாக இருந்தாலும், பூந்தோட்டமோ, மாட மாளிகையோ, உப்பரிகையோ இருந்தாலும், சந்திரனின் கிரகணங்கள் தாமே விழுகின்றன. முட்புதரில் விழும்போது ஸ்ரமமோ, தோட்டதில் விழும்போது சுகமோ இல்லை.”

அதே போல் தீனனான என் மேல் உன் கடாக்ஷம் விழுந்தால் உனக்கு எந்த குறையும் வராது.” என்று முடிக்கிறார்.

என்ன ஒரு விநயம். பக்தி.
அம்பாள் ஸ்வரூபம் வேறு. ஈஸ்வர ஸ்வரூபம் வேறு இல்லை எல்லாம் ஒன்றுதான். அப்படியே ஆசார்யாள் ஸ்வரூபம் வேறு, அவர்கள் ஸ்வரூபம் வேறு என்றில்லை. எல்லாம் ஒன்றுதான்.

சாக்ஷாத் ஈஸ்வரனுடைய அவதாரமதான் ஆசார்யாள். பரம கருணையால் நமக்காக அவரும் நம்மோடு சேர்ந்து கொண்டு இந்த ஸ்தோத்திரத்தை நமக்காக செய்து கொடுத்து இருக்கிறார்.

இதை நாம் படிக்கும்போது, நம்மை தீனனாக நினைத்துக் கொண்டு படிக்கிறார்ப் போல இருக்கும்.

இதைத்தான், மாணிக்க வாசகர் “தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா ஆர் கொலோ சதுரர், அத்தமில்லா ஆனந்தம் ஒன்று பெற்றேன், யாது நீ பெற்றது என்பால்” என்று கேட்கிறார்.

சத்குரு ஸ்ரீ நாராயண தீர்த்தர், கிருஷ்ண லீலா தரங்கினி என்று கிருஷ்ணன் ஜனனம் முதல் ருக்மணி கல்யாணம் வரை பாடல்கள் எழுதி இருக்கிறார். அதற்க்கு தரங்கம் என்று பெயர். அதில் ஒரு பாட்டு இருக்கிறார்..

“க்ஷேமம் குரு கோபாலா, சந்ததம் மம க்ஷேமம் குரு கோபால” என்ற பாட்டு. இதன் அர்த்தம், “கோபாலனே, எனக்கு எப்பவும் க்ஷேமத்தை அருள்வீராக” குரு என்பது முதல் க, (ஆச்சார்யாள் என்ற அர்த்தமுள்ள குரு இல்லை).

இதை ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்துக் கொண்டு சொல்வதாக இருக்கிறது. நாராயண தீர்த்தர் தரங்கத்துக்கு உரை எழுதிய ஸ்ரீ. குருஸ்வாமி சாஸ்த்ரிகள், “என் உள்ளத்திலும் வாக்கிலும் தான் கணவனாக அடைந்து இருக்கும் கோபாலனை உடலிலும் ரத்தத்திலும் கணவனாக இருக்கச் செய்ய வேண்டும். என்பது ருக்மணி தேவியின் வேண்டுகோள் – என்பதை விளக்க use பண்ணிய வார்த்தை இது. க்ஷேமம் என்பதற்க்கு பல அர்த்தங்களும் இருக்கின்றன. கிட்டும் பொருள் கை கூடுவதற்க்கு இங்கு பிரயோகப் படுக்கிறது.

இந்தப் பாடலை தினமும் நாம் படிக்கலாம். பாடலாம். நமக்கு க்ஷேமம் நிச்சயம்.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: என் எண்ணங்கள்

Post by grsastrigal »

உயிர்ப்பான காவியம் – வில்லி பாரதம்
புலவர் கீரன் சொற்பொழிவு, தமிழ் மீது நான் கொண்டிருந்த பற்றுக்கு ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. அவரது தமிழ் வீச்சு அலாதியானது.

அவர் ஒரு தடவை சொல்லிய வில்லி பாரத சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள் கீழே. இப்போதும் அந்த கதை நம் வாழ்க்கைக்குப் பொருந்தும்.

வி.பா தில் இன்றும் நாம் வாழ்க்கைக்கு ஏற்றதான சில பாத்திரங்கள் இருக்கிறது. நாம் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டுவதற்க்காக ஓர் சில கதாபாத்திரங்கள்:
அவர் இப்படி ஆரம்பிக்கிறார். நம் வாழ்க்கையில் இரண்டு துருவங்கள் இருக்கிறது.

ஒன்று, உலகத்து சுகங்களில் நாட்டம் இல்லை என்று “பொய்” சொல்லி ஒரு வாழ்க்கை வாழாதே.

இரண்டாவது, இன்பமே வாழ்க்கை என்று இருந்து விடாதே !

கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்:

ஒன்று. உலகத்து இன்பங்களில் நாட்டம் இல்லை என்று பொய் சொல்லாதே. என் உள்ளம் எல்லாம் துறந்த உள்ளம் என்று சொல்லாதே. உலகத்து இன்பங்கள் வேண்டாம் என்று தள்ளி விடக் கூடாது. அது எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பது கிடையாது. ஏதோ 100 வருஷங்களுக்கு ஒரு முறை புலன்களை அடக்கும் மனிதர்கள் இந்த தேசத்தில் பிறக்கிறார்கள். அவர்கள் ஞானிகள் அவதார புருஷர்கள். அதனால் தான் திருமூலர் சொல்கிறார்

அஞ்சும் அஞ்சும் அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கும் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே
என்கிறார்

அதாவது ஐம்புலங்களையும் அடக்கு என்று அறிவில்லாதவர்கள் சொல்லுவார்கள். அப்படி அடக்கியவர்கள் யாருமில்லை. ஐம்புலங்களையும் அனுபவித்து மெதுவாக சிவ சிந்தனையில் திருப்பி ஞானம் பெற வேண்டும்” என்று முடிக்கிறார்.

அதனால், அந்த அந்த வயதில் உள்ள இன்பங்களை அனுபவித்து இறை உணர்வோடு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் உண்மையான வாழ்க்கை.

திருவள்ளுவர் ஒரு அருமையான குறள் ஒன்று சொன்னார். தெய்வத்திடம் நீ என்ன வேண்டுவாய் ? நாம் நாம் சிக்கல்கள், கவலைகள் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். இது போல பல பிரார்தனைகள்.

ஆனால் நாம் நாம் கடமைகளை ஒரு அளவு முடித்துவிட்டு எஞ்சி இருக்கிற வாழ்க்கையை இறைவனுக்காக ஒதுக்க வேண்டும். எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் கோவிலுக்குச் சென்று, பிறவாமை வேண்டும் என்று கேட்க வேண்டும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை – மற்றவை
வேண்டாமை வேண்டா வரும்

வேண்டிக்கொண்டால் மட்டும் போறாது. அதை உறுதி படுத்தி கொள்ள ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்.
அதை விட்டு விட்டு, குடும்ப பந்தத்திலேயே உழன்று, பேரன், பேரனுக்கு பிள்ளை, அவர்களை வளர்ப்பது என்று ஸம்ஸாரக் கடலிலே உழன்று கொண்டு இருந்தால் எப்போது இறை வழிபாடை முழுமையாக செய்வது ? அர்ப்பணம் என்று ஒரு இருக்கிறதல்லவா ? பரமபரை பரம்பரையாகவே பாசத்தில் ஈடுபடக்கூடாது.

அப்படி வாழாவிட்டால் என்ன ஆகும் என்பது தான் இந்தப் பகுதி: முதல் துருவத்தில் வாழ்ந்த ஒரு ராஜா வின் வாழ்க்கை என்ன ஆனது என்பது கீழே:

நகுஷன்:

நகுஷன் என்ற ஒரு ராஜா இருந்தான். மிகப் பெரிய அரசனாக இருந்து, எல்லா போகங்களையும் அனுபவிக்கக் கூடிய நிலையில் இருந்த போதிலும், எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தான். அமைச்சர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், கேட்பதாக இல்லை. ராஜாங்கத்தை கவனிக்காமல், போகங்களை அனுபவிக்காமல் வாழ்ந்து கொண்டு இருந்தான்.

“எனக்கு பிறவியே இருக்கக் கூடாது” என்றான். அதனால் எந்தப் பொருளின் மேல் நாட்டம் இல்லை என்று முடிவு செய்து, ஒரு சாமியார் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான்.
வேறு வழியில்லாமல், நகுஷனிடம், அமைச்சர்கள் சொன்னார்கள். “நீங்கள் நிறைய புண்ணிய காரியங்கள் செய்து இருக்கிறீர்கள். அதற்க்கு உண்டான இந்திரப் பதவியை பெற்ற பிறகு, நீங்கள் மறு பிறவி இல்லாத உலகத்திற்க்குச் செல்லலாம்” என்றார்கள்.

நகுஷன் “அந்த இந்திரப் பதவி பெற்ற பிறகுதான் எனக்கு மறு பிறவி இல்லாமல் போகும் என்றால், அந்தப் பிறவி பெறுவதற்க்கு என்ன செய்ய வேண்டும். ?” என்று கேட்டான்.
அமைச்சர்கள். “100 அசுவ மேத யாகம் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள். உடனே செய்வதற்க்கு உத்தரவு பிறப்பித்தான்.

நகுஷன் அசுவமேத யாகம் செய்து முடித்தான். அவனை இந்திர லோகத்திற்க்கு அழைத்துப் போவதற்க்கு பல்லக்கு வந்து நிற்கிறது. பல்லக்கில் அழைத்துப் போவதற்க்கு சப்த ரிஷிகள் (7 ரிஷிகள்) வந்து நிற்கிறார்கள். அவன் கையில் ஒரு பிரம்பை எடுத்துக் கொண்டுன் பல்லக்கில் மெதுவாக ஏறி உட்கார்ந்து கொண்டு இந்திர லோகம் நோக்கிப் போகிறான். பல்லக்கை தூக்கிக் கொண்டு போகும் ரிஷிகளின் மேல் மிகுந்த மரியாதை கொண்டு, அவர்களை மெதுவாகப் போகச் சொல்கிறான்.

முனிவர்கள் சொன்னார்கள் “100 அசுவமேத யாகங்கள் செய்த உன்னை சுமந்து செல்வது, எங்களுக்குப் பெருமை. அதனால் அந்தப் புண்ணியத்தை எங்களுக்குக் கொடுங்கள்” என்றார்கள்.

இருந்தாலும், மரியாதை காரணமாக ‘மெதுவா, மெதுவா செல்லுங்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தான் நகுஷன். அவனைத் தூக்கிக் கொண்டு வந்த முனிவர்களுடன் மிகுந்த மரியாதையுடன் தூக்கிக் கொண்டு வந்தனர்.

இந்திர உலகத்தில் வாயிலுக்குச் சென்ற நகுஷன் அங்கே பிரமாண்டமான இந்திர உலகத்தை நிமிர்ந்து பார்த்தான். அங்கே உப்பரிகையில், இந்திராணி தான் தலை முடியைக் கோதிக்கொண்டு இருப்பதைப் பார்த்தான். அதுவரை, மெய், வாய், கண் என்ற ஐம்புலங்களின் மேல் நாட்டமில்லை என்று கூறிக் கொண்டிருந்தவன், இந்திராணியைப் பார்த்த மாத்திரத்தில், அவள் மேல் சொல்ல முடியாத ஆசை கொண்டான். இதுதான் “twist”

இதுவரை அவன் கொண்ட “சாமியார்” கொள்கை காற்றில் பறந்தது. அவளை உடனே அடைய ஆசை கொண்டான்.
இதுவரை, வேகமாக சென்று கொண்டிருந்தது என்று நினைத்துக்கொண்டு, மெதுவா மெதுவா என்று சொல்லிக் கொண்டிருந்த நகுஷன், இப்போது இந்த பல்லக்கு, இப்போது மெதுவாக செல்கிறது என்று நினைத்து, வேகமாக செல்ல வேண்டும் என்று (அவளை அடைய) என்று முடிவு செய்து, பல்லக்கை விரைவாக செல்லச் சொன்னான்.
உடனே பல்லக்கை சுமந்து சென்ற முனிவர்களிடம் “வேகமாக செல்லுங்கள்” என்று சொன்னான். தான் கொண்டு வந்திருந்த “தடியால்” அவர்களை தட்டி “வேகமா” என்று சொன்னான்

இப்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது

வேகமா என்பதற்க்கு சம்ஸ்கிரிதத்தில் “ஸற்ப” என்று சொல்லுவோம்.

பல்லக்கை சுமந்து சென்றவர்களில் ஒருவர் மகாமுனி அகத்தியர். அவர் கொஞ்சம் குட்டை. அதனால் அவர் பல்லக்கை சமமாகத் தூக்க முடியாததால், கொஞ்சம் முட்டுக் கொடுத்து, சிரமமாக தூக்கிக் கொண்டு சென்றார். நகுஷன் அவரால் தான் பல்லக்கு மெதுவாகச் செல்கிறது என்று நினைத்து, தடியால் அவரை தட்டி “சர்ப, சர்ப என்றான்.

அகத்தியர்க்கு கோபம் வந்து விட்டது. என்னை “சர்ப” என்று சொல்லி அடித்ததால், நீ சர்ப்பமாக (பாம்பாக போகக் கடவது” என்று சாபம் இட்டார். இந்திரா உலகம் வரைக்கும் போன நகுஷன், பாம்பாகிப் போனான்.

இந்தக் கதையில் இருந்து தெரிவது என்ன என்றால்,

முதல் பகுதியில் சொன்ன விஷயங்களை தவிர, எல்லாவற்றிர்க்கும் மனது தான் காரணம். உலகம் என்றும் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி பல்லக்கு வேகமாகப் போவதோ, மெதுவாகப் போவதோ நகுஷன் மனதில் இருந்ததோ, அப்படித்தான் இருக்கிறது,

கணியன் பூங்குன்றானார் அன்றே சொன்னார் – “நன்றும் தீதும் பிறர் தர வாரா” அதான் மனம் போல மாங்கல்யம் என்பார்கள்.
அடுத்த துருவம் பின்பு பார்ப்போம்:

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

சௌந்தர்ய லஹரியும் மீனாக்ஷியும்

Post by grsastrigal »

ஸ்ரீ சங்கர ஜயந்தி தினமான இன்று, கொஞ்சம் அம்பாள் தியானம். பகவத் பாதாளின் அற்புதமான சௌந்தர்ய லஹரியில் இருந்து சில வரிகள்.

ஆதி சங்கரரின் படைப்புகளில் எனக்கு சுப்ரமண்ய புஜங்கம் மிகவும் பிடித்தது. முருகன் தமிழ் கடவுள் என்பதாலோ, அந்தக் காலத்தில் ஒரு பழ மொழி உண்டு, சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமண்யர்க்கு மிஞ்சின தெய்வம் இல்லை” என்பதாலோ – தெரியாது.

அவர் நமக்கு அளித்த ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள். நாம் அவரை தினமும் ஸ்‌மரித்தாலே போதும்.

லலிதா சகஸ்ரநாமத்தில் மீனாக்ஷி பெயர் வரவில்லை என்பது அதை ஊன்று படித்து, கவனித்து இருப்பவர்களுக்குப் புரியும். ஆனால் மறை முகமாக, “அபர்ணா சண்டிகா” என்ற ஸ்லோகத்திலும், “வக்த்ர லக்ஷ்மி பரீ வாஹ சலன் மீனாப லோசனா” என்ற வரிகளிலும் காண்பித்து இருக்கிறார். (jUST FOR COMPARISON)

சௌ.ல – யில் மீனாக்ஷி யின் பெயர் வரவில்லை என்பதும் அதை படித்தவர்களுக்கு தெரியும். ஊன்று படிதவர்களுக்கு 56 வது ஸ்லோகத்தில் மீனாக்ஷியின் கண்களை வர்ணிப்பதன் மூலம், மதுரைத் தாயை மறை முகமாக வர்ணிக்கிறார், பகவத்பாதர்.

முதலில் “தவ அபர்ணே” என்று ஆரம்பிக்கிறார். அபர்ணா என்பதன் அர்த்தம் “எவர்க்கும் கடன் படாதவள்”, பார்வதியாக தவம் செய்த போது, இலைகலைக் கூட உண்ணாமல் தவம் செய்தவள்” என்றும் பொருள். பகவத்பாதர், மிக அருமையாக ஒரு சிலேடை மூலம், இந்த ஸ்லோகத்தை அருமையாக கொண்டு போகிறார்.

கொஞ்சம் விலகி ஒரு விஷயத்தைப் பேசலாம். ஒரு அழகில்லாத பொருள், அழகான பொருளுடன் சேரும்போது அதுவும் அழகாகி, மிளிரும். அதை நாம் எப்படி காட்டுகிறோம் என்பது பொருள். இரண்டு உதாரணம் இப்போது பார்ப்போம்:

குருக்ஷேத்ர போரில், கிருஷ்ண பரமாத்மா, மிகவும் லாவகமாக தேரை ஒட்டிச்சென்று, அர்ஜுனன் போர் செய்வதற்க்கு உதவியாக இருக்கிறார். அப்படி ஓடும்போது வரும் சிரமத்தால், அவர் உடல் முழுவதும் முத்து முத்தாக வேர்த்து விட்டு இருக்கிறது. அந்த வேர்வையில், குதிரை குளம்பு மண்ணில் பட்டு, அந்த மண் துகள்கள், மேலே கிளம்பி, கிருஷ்ணணின் வேர்வைத் துளிகளில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அதை பார்க்கும்போது, மண்ணின் நிறத்தை ஒத்து, பகவானுக்கு முத்தங்கி சேவை, ஸ்ரீ ரங்கத்தில் செய்வார்களே, அது போல இருக்கிறது.

இதை காளிதாசன் ஒரு உவமையுடன் அருமையாக விளக்குகிறார். குளத்தில் பாசி இருக்கிறது. அது ஒரு அருவருப்பான வஸ்து. குளத்தில் இறங்கி அது நம் காலில் பட்டால் உடனே பிடிக்காமல் தள்ளி விடுவோம். அந்த பாசி குளத்தில் ஏற்படும் அலையால் தள்ளப்பட்டு, குளத்தில் நடுவே உள்ள தாமரையின் கீழே தண்டோடு ஒட்டிக் கொண்டுவிடும். அப்பாது அது பாக்கும்போது, தாமரை மலருக்குக் கீழே இலை போன்று அழகாக இருக்கும். இதுதான் அழகில்லாத..... அழகான....சேரும்போது...வரும் அழகு.

இங்கே சங்கரர். அம்பாளின் கண்கள், காது வரை நீண்டு, காதிடம் கோள் சொல்கிறது. போட்டுக் குடுக்கிறது என்று இன்றைய புது மொழியில் சொல்வதுண்டு. இதை லக்ஷ்மிதரர், தன் வியாக்யானத்தில், இப்படிக் கூறுகிறார்.
அபர்ணே, பார்வதி, உன் கண்கள், காதுகளிடம் சென்று ரகஸ்யம் பேசி, தன் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை மறைத்து கோள் சொல்லுகின்றன.

என்ன கோள் சொல்கின்றன என்பதை அருணா மோதினீ இன்னும் விளக்குகிறது:

“தேவி, ஈடிணை அற்ற அழகியான உன்னைச்சார்ந்த எங்களுடைய அழகை இந்த மீன்கள் பரிகசிக்கின்றன. எம்மை விட இதுதான் அழகாம். எங்களுக்கு துரோகம் செய்கின்றன. எங்களுக்கு துரோகியான தாமரைகளில் எப்போதும் லக்ஷ்மி வசிப்பதால், தாமரையும் எங்களுடன் போட்டி போடுகின்றன. உன்னைச் சார்ந்தவர்களுக்கு. துரோகம் விளைவிக்கின்ற அவர்களுக்கு நீதான் தண்டனை தர வேண்டும். இனி இதை கவனியாதிருப்பது தவறு” எனக் கோள் சொல்கின்றன.

இதை மீன்கள் கவனிக்கின்றன. இப்படி கோள் சொல்லுவாளோ (கண்) என பயந்து மீன்கள் நீரின் அடியில் வளைய வருகின்றன. லக்ஷ்மியும் விடியும் வரை பொறுத்து இருக்க விரும்பாமல் தாமரை மொட்டின் மீதமர்வதை விட்டு பயந்து இரவில் எவரும் அறியாதபடி, அல்லியின் மொட்டைப் பிளந்து, அதில் இரவு முழுவதும் தங்கி, காலையில் அதனை விட்டகன்று, தாமரையிடம் பயந்தே செல்கிறாள்.

இதை “ஆனந்தக்ரியா” இன்னும் அழகாக வர்ணிக்கிறது.

அரசரின் காதுகள் அருகே நின்று, ஒருவனைப் பற்றி தவறாகக் படும்படி கோள் சொல்பவரிடம், பயந்து, நீர் மடுவில், மூழ்கி மறைந்து, வாழ்பவரின் நிலை, பெண் மீனுக்கு நேர்ந்துள்ளது.

தாத்பர்ய தீபிணி இப்படி சொல்லி முடிக்க்றது:

“தேவி, அபர்ணே, உனது காதுகளில் கோள் சொல்லுகின்ற கண்கள் கூறுகிற ரகசிய செய்தியில் பயந்த மீன்கள் கண்கள் மூடுவதில்லை. கண்கள் விரும்பிகின்ற அழகு அல்லிப் பூக்களிடமும் உள்ளது. அல்லீயும் இரவில் மலர்ந்து, பகலில் மூடிக் கொள்கிறது.

மீனாக்ஷியின் கண்கள், மீன்கள் இவற்றின் காரணமாக, பொற்றாமரை குளத்தில் மீன்கள் இருப்பதில்லை என்றும் ஒரு செய்தி உண்டு.

இன்று ஆதி சங்கரரின் நினைவாக அவரின் சௌந்தர்ய லஹரியின் ஸ்லோகத்தை எடுத்து எழுவது எனக்கு பெரும் பாக்யம். சௌ. ல ஆதி சங்கரரின் முக்கியமான ஒரு படைப்பு. அதனால் தான் அவர் அஷ்டோத்தர நாமத்தில். “சௌந்தர லஹரி முக்ய பஹூ ஸ்தோத்ர விதாயகாய நம:” என்று இருக்கிறது போலும்.
சிருங்கேரி பெரியவா சொன்னது போல் ஆதி சங்கரர் இல்லை என்றால் இன்று நாம் படிக்கும் பல ஸ்லோகங்கள் இல்லாமல் போய் இருக்கும்.

அதுவும் கடந்த 2 வருடங்களாக, கொரொனா போட்ட போடில், நம் மனதிற்க்கு அரு மருந்தாக இருந்தது, பகவத் பாதாளின் “ஆயி கிரி நந்தினியும், கனகதாரா ஸ்தோத்ரமும், சுப்ரமண்ய புஜங்கமும், மற்றும் இது போன்ற ஸ்லோகங்கள் தான்.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

திருப்பைஞ்சீலி

Post by grsastrigal »

ஒரு கோவிலைப் பற்றி எழுதலாம் என்று’ -

திருச்சியில் மேற் படிப்பு படித்தும், 6 வருடங்கள் இருந்த போதிலும், திருச்சியைச் சுற்றியுள்ள பல கோவில்களைப் பார்ததில்லை. வயதானபிறகு, கொஞ்சம் புத்தி வந்து, ஒரு பிரார்த்தனைக்காக, திருப்பைஞ்சீலி என்ற ஒரு க்ஷேத்ரத்திர்க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கோவில் பெருமமையைச் சொல்லும்போது “அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே” என்கிறார் திருநாவுக்கரசர்
ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இப்பவும் வாழை மரத்தையோ, கன்றையோ கொடுத்து, பரிகார நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், தல விருட்சம் என்போம். மருந்துக்கு ஒரு மரம் இருக்கும். இந்த இடம் வளமாக இருந்தது என்போம் ! இப்போது, கட்டிடங்கள், மக்கள், என்று அங்கலாய்ப்போம் !!
ஆனால் இதற்க்கு மாறாக, மண்ணச்ச்நல்லூரில் இருந்து, திருப்பைஞ்சீலி செல்லும் அந்த 1 கிலோமீட்டர் முழுவதும் வாழை மரங்கள் தான். ஒரு 10 தோப்பு பார்த்திருப்பேன். ஒரு 5000 மரங்கள. பச்சை பசேலென்று, குலை தள்ளி எத்தனை மரங்கள். இப்படி ஒரு இயற்க்கை சூழலை, திருச்சிக்கு மிக அருகே எதிர்பார்க்க வில்லை.
தாதாசார்யார் தோட்டமாக இருந்து இப்போது கட்டிடங்களாக இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பக்கத்தில் இப்படியும் ஒரு இடம் !!!

ஸ்தல புராணத்தில், நாவுக்கரசர், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரரையும், தாய்மானஸ்வாமியையும், தரிசனம் செய்து விட்டு, நடந்து வர, களைப்பால் பசியெடுத்து, ஒரு மரத்தின் கீழ் அமர, வயோதிக வேடத்தில், சிவ பெருமான், கட்டுச் சோறு, கொண்டு கொடுத்தாராம். அதை சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் ஞீலீஸ்வரர் கோவிலைப் பற்றி, வினவ, அவரை அழைத்துக் கொண்டு சென்று, ரிஷபரூடராக, ஊமையம்மையுடன் காக்ஷி கொடுத்தாராம்.
இப்பவும் இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது, இடது புறத்தில், சிவன், நாவுக்கரசருக்கு, ஒரு மூட்டையில் சாப்பாடு கொடுப்பதுபோல், விக்ரகம், அதன் எதிரில், பெரிய நந்தி தான் ஆச்சர்யம். ஏனெனில் உள்ளே இருக்கும் ஞீலீஸ்வரருக்குக் கூட அவ்வளவு பெரிய நந்தி இல்லை. பக்தனோடு சேர்ந்து இருக்கும் ஸ்வாமிக்கு “ஸ்பெஷல்” நந்தி.

மூன்றாம் திருமுறை- தேவாரத்தில்

“தொத்தின தோள் முடியுடைய வன்றலை பத்தினை நெறித்த பைஞ்சீலி மேவலான்” என்கிறார்.
““கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்” என்று அர்த்தம்.
ராமன் ராவணனை அழிப்பதற்க்கு முன்பு, சிவனும், கொஞ்சம் பயம் காட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.
சேக்கிழார், தனது பெரிய புராணத்தில், நாவுக்கரசர், பைஞ்சீலியில், தொண்டு செய்து காலத்தைக் கழித்ததை, எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்: !!!!

பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும்பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ்ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ்ஞீலிர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள்பாடிக் கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் 5.1.31

இதை ஒரு முறை, தவறில்லாமல் பார்த்துப் படித்தாலே, அவருக்கு, சிவபெருமானை விட்டு, இன்னொரு மூட்டை சாப்பாடு கொடுக்கச் சொல்லலாம் !!!!!

சிவ பெருமான், நாவுக்கரசரை, கூட்டிக்கொண்டு போய் இந்தக் கோவிலில் சென்று மறைந்து போக, உள்ளம் உருகுகிறார். தன்னுடன் வந்து நீயா ? என்று

“அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் பாடல் புரிந்து, விழுந்து விழுந்து, கண்ணீர் மாரி பயில் வித்தார்” என்கிறார்.

திருப்பள்ளி எழுச்சியில் – “தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒரு பால்” (பால் என்றால் புறம்) என்கிறார் மணி வாசகப் பெருமான். கடவுளை நேரில் பார்க்காத பக்தனே இப்படி துவளும்போது, கூட இருந்தவர்- அந்த பெருமான் என்று அறிந்த பின் உள்ளம் எவ்வளவு பூரிக்கும் !!!

என்ன ஒரு அற்புதமான் தமிழ். அந்தக் காலத்தில் எப்படி தமிழின் மூலம் இறையை அனுபவித்து இருக்கிறார்கள் ?

விசாலாக்ஷி தாயார் சன்னதி தனியே இருக்கிறது. இதிலும் ஒரு ஆச்சர்யம் உண்டு. இங்கே நீல நெடுங் கண் நாயகி என்ற பெயரிலும் ஒரு அம்பாள் விக்ரஹம் இங்கு உண்டு. கும்பகோணம் மங்களாம்ம்பாள் மாதிரி கொஞ்சம் பெரிய விக்ரஹமாக இருக்கும், விசாலக்ஷி க்குத் தான் அர்ச்சனை, அபிஷேகம் நடக்கிறது. நீல.நாயகிக்குக் கிடையாது. ஆனால் த்வஜஸ்தம்பம் நீல. நாயகிக்குத்தான் இருக்கிறது.

இந்த ஆச்சர்யத்தை, அங்கு இருத ஷண்முக குருக்களிடம் கேட்டபோது, அவர் “விசாலக்ஷி” அம்மன் சற்று “பின்னப்பட்டு விட்ட படியால், தோஷ நிவர்த்திக்காக, நீல நெடுங்கண் நாயகியை “பிரதிஷ்டை பண்ணினோம்”. ஆனால் புராதானமாக இருக்கிற அம்பாளைத் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற ஆகமப்படி, பூஜை நடந்து கொண்டு இருக்கிறது” என்றார்.

அடுத்தது, நாம் இந்த்க் கோவிலில் முக்கியமான எமன் சன்னதிக்கு வருவோம். திருக்கடையூரில், மார்க்கண்டேயனுக்காக எமன் சம்ஹாரம் பண்ணப் பட்ட பிறகு, அழிக்கும் தொழில் ஸ்தம்பித்துப் போக, ப்ரம்மா, விஷ்ணு எல்லோரும் சென்று முறையிட, திருப்பைஞ்சீலி வந்து பல ரிஷிகள், கடும் தவம் புரிய, மனமிரங்கி,
சிவன், எம தர்மராஜரை உயிர்பித்த இடம் இது.

இது பூமி மட்டத்தின் கீழே இருக்கிறது, குடவரை கோவில் போல். பூமியில் இருந்து உயிர்பித்தார் என்பதை காட்டுவது போலே. சோமாஸ்கந்தர் என்று சொல்வது போல், தாக்ஷயானி யோடு, மிருத்யுஞ்சய மூர்த்தியும் மடியில் முருகனும், கீழே காலுக்கடியில் எமன், - ஸ்வ்யும்பாக தோன்றிய உருவம்.

சட்டென்று, ஸ்வயம்புவாகத் தோன்றியது, என்றால் எனக்கு உடனே ஞாபகம் வருவது, வேதாரண்யத்தில், திருமறைக்காடர் என்று போற்றப்படும் சிவனின் பின்னால், திருமணக் கோலத்தில், பார்வதி சிவனோடு அற்புதமாகக் காட்சி அளிப்பார். இது அகத்தியருக்காக காண்பிக்கப்பட்ட கல்யாண கோலம். அற்புதமான ஸ்வயம்பு மூர்த்தி.

இங்கு திருக்கடையூரில் சென்று 60 வது 80 வது கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள், இங்கு செய்து கொள்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு, இப்படி பல பரிகாரங்கள் இந்தக் கோவிலில் செய்து வருகிறார்கள்.

நவக்ரஹத்துக்கு சன்னதி இல்லை, எமன் சனீஸ்வரருக்கு அதிபதி என்பதால். ஆனால் நவக்ரஹம், 9 படிகளாக இருக்கிறது, நாம் இறங்கி ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும்.

வேறு கோவில்:

கும்பகோணம் செல்லும் வழியில், திருக்கோடீஸ்வரர் என்று ஒரு ஸ்தலமும் உண்டு. அங்கே ஒரு பக்தனுக்கு இரங்கி, சிவன் கட்டளையிட, எமன் இந்தக் கோவிலுக்கு வருபவர்களை எமன் துன்புறுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டார் - என்பது.

கும்பகோணத்தின் அருகில் இருக்கும் ஸ்ரீ வாஞ்சியத்திலும் எமனுக்கு ஒரு சன்னதி உண்டு.

அற்புதமான கோவில், அழகான தரிசனம், அமைதியானது மனசு.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

ஆனந்த நடன பிரகாஸம்.......

Post by grsastrigal »

இன்று ஆனித் திருமஞ்சனம், சிதம்பரம் தேர். கொஞ்சம் நடராஜர் பாடல்களை அலசுவோம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பற்றி நிறைய பேர் பாட்டு எழுதி இருக்கிறார்கள். எனக்கு என்னவோ மத்த கோவிலை விட, சிதம்பரத்தில் தான் நிறைய பேர் நிறைய பாட்டுகள் எழுதி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தவிர, தேவாரம், நடராஜர் பத்து போன்ற பல.

கோபால கிருஷ்ண பாரதி, மாரி முத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், பாபநாசம் சிவன், நீலகண்ட சிவன், பாப விநாச முதலியார் போன்ற பலர்- (நான் தமிழ் பாடல்களை மட்டும் சொல்கிறேன்.)

இவர்கள் மூன்று விதமான ‘ரசனையுடன்” பாடல்களைக் கொடுத்து இருக்கிறார்கள்:

முதல் வகை - ஸ்வாமியின் வர்ணனை மற்றும் அடியார்களின் பெருமை

இரண்டாம் வகை- கேலியும், நையாண்டியுமாக – உரிமையுடன் பாடிய பாடல்கள்.

கொஞ்சம் கடுமையாக- மானிடர்களை, மிரட்டும் தொனியில..

முதலாவது:

மாரிமுத்தாப் பிள்ளையின் இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. எல்லா வரிகளின் முடிவில் “தூக்கி என்பதால் கூட இருக்கலாம்”

முதல் சரணத்தில், நடராஜரின் ரூப வர்ணனை. அடுத்த சரணத்தில் அவருடைய பக்தர்களின் வர்ணனை. இந்தப் பாடலை முழுவதும் கேட்டால், ஸ்வாமி தரிசனம் பண்ணிய புண்ணியமும், அடியார்களின் தரிசனமும் கிடைத்துவிடும்

ஆரம்பத்தில் பல்லவியில், “வேலைத்தூக்கும் பிள்ளை, தனைப் பெற்ற தெய்வமே” என்று முருகனையும் கூப்பிடுகிறார்.

காலைத் தூக்கி, பாட்டில் உள்ள வரிகளை கொஞ்சம் பார்ப்போம்

செங்கையில் மான் தூக்கி
சிவந்த மழுவும் தூக்கி
அங்கத்தில் ஒரு பெண்ணை அனு தினமும் தூக்கி
திங்களை, கங்கையை, கதித்த சடையில் தூக்கி

அடுத்த சரணம்”

நந்தி மத்தளம் தூக்க
நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று அய்யன் ஸ்ருதியும் தாளமும் தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க

இந்த சரணம், பக்தர்களின் உணர்ச்சி பெருக்கான நிலை.

இந்தப் பாடல், எம். எஸ். அம்மா பாடி, அந்தக் காலத்தில், வெகு பிரசித்தம், என் பாட்டி, கொள்ளு பாட்டி முதற்கொண்டு, அனுபவித்துப் பாடுவார்கள். பின்பு சஞ்சயின் நேயர் விருப்பம் ஆனது

இதே மாதிரி, பாபநாசம் சிவன் பாட்டு ஒன்று இருக்கிறது

முதல் சரணம்

“மானும் மழுவும் பிஞ்சு, மதியும் நதியும் தவழ்
செவ்வானம் நிகர் சடையாட, இள நாகை தழுவும்
மதி முகமும் திரு விழி அழகுமாய் – (ஞான சபை)

இரண்டாவது சரணம்:\
நேமியுடன் முழங்காழி அணி, சாரங்கபாணி மிருதங்கமும்,
நி ச த நி ப ம ரி க ம ரி ஸ்வர நாரதர் வீணையும்.

முத்து தாண்டவர் என்பவரும் நடராஜரைப் பற்றி பல பாடல்கள் இயற்றி இருக்கிறார். அதில் ஒரு பாட்டு – “காணாமல் வீணிலே காலம் கழிதோமே” – இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தால், சிதம்பரத்தை முழுவதும் பார்த்து விடலாம், கோவில் மதகு முதற்கொண்டு.....விவரித்து இருப்பார்.

சேரன், சோழன், ஹிரண்யவர்மன் கோபுரமும்
சூர வீரப்பன் செய்த திரு மதில்களும்
பாருலகும் போற்றுகின்ற பஞ்சாக்ஷர படிகளும்,
ஹாரங்கள் சூழ்ந்த திரு ஆயிரங்கால் மண்டபமும்
இன்னும் இரண்டு அற்புத சரணங்கள் உண்டு இந்தப் பாட்டில்

சேவிக்க வேண்டுமையா” என்ற இன்னொரு “ஆந்தோளிகா” ராக கீர்த்தனையில், கடைசி சரணம் இப்படி முடிகிறது.

“நல்ல திருவிழா ஆனித் தேரும், நாடெங்குமே புகழ் நற்கோபுரம் நான்கும்,
தில்லை மூவாயிரவர் வளர் வீதியும், திருமஞ்சனமும், மார்கழி தரிசனமும்”

இன்னொரு இடத்தில், இதே பாடலில் - சிற்றம்பலம் என்னும் பேரம்பலத்தானை” என்கிறார்

இதே மாதிரி, கோபால கிருஷ்ண பாரதியின், “எந்நேரமும் உன் சன்னதியில்” என்ற பாட்டும், கோவிலின் வர்ணனை,

உள் பிராகாரத்தில் உள்ள, பஞ்சாக்ஷர படி, குளம், கொடிக்கம்பம், சிவகாமி தரிசனம்- என்று. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், முழு கோவிலை வலம் வரலாம்.
சிதம்பரத்தில் உற்சவ நாள், கிழமையெல்லாம் சரியாகச் சொல்கிறார் கோ.கி.பாரதி.
‘நாடும் தைப்பூரண பூசத்திலே, தில்லை நாயகனார் குரு வாரத்திலே-மன்றுள் – ஆடிய பாதத்தைக் காணாரே, ஆனந்தம் பூணாரே” என்கிறார் கோ.கி.பாரதி.

இவர்களெல்லாம், தில்லை அம்பலத்தானை அணு அணுவாக ரசித்து இருக்கிறார்கள். அந்த இன்பத்தை அவர்கள் மட்டும் அனுபவிக்காமல், நமக்கும் பாடல்கள் மூலம் வாரி வழங்கி இருக்கிறார்கள். !!
நமக்கு மிகவும் தெரிந்த = “கிருபாநிதி, இவரை போல கிடைக்குமோ” பாடல்

இரண்டாவது

மாரி முத்தாப் பிள்ளை யின் பல பாடல்களில் நகைச்சுவை ததும்பும் பக்தி இருக்கும்:

ஒரு பாடலில் சரணம் இப்படிப் போகிறது”

“என் மேல் உனக்கு என்ன கோபம்-
“ஆட்டுக் காலேடுத்து, அம்பலத்தில் நின்றீர்
அதனை சொன்னேனா.
ஒற்றை மாட்டுக் காரனென்று யாருடனாகிலும், வாய் மதனஞ்ச் சொன்னேனா..
தலை ஓட்டை வைத்து பிச்சை எடுத்தீர் என்று யாரிடமாவது சொன்னேனா
பல்லை காட்டி முப்புரத்தார் முன்னே நின்ற கதையைச் சொன்னேனா
எச்சிலுண்டதைச் சொன்னேனா (கண்ணப்ப நாயனார் கதை)
சாதி, தாய், தந்தையார் இல்லாதவர் என்று சொன்னேனா
இப்படிப் போகிறது, .....

பாப விநாச முதலியாரின், மிகவும் பிரசித்தமான – நடமாடித் திரிந்த+ பாடலில் இப்படி வரியின் அர்த்தம் இப்படிப் போகிறது.

“திருநீறைப் பூசியதால் வாதம் வந்துடுத்தா ?
மார்கண்டேயனுக்காக, யமனை உதைத்ததில், கால் சுளுக்கிண்டுடுத்தா..!
சுந்தரருக்காக, பரவை நாச்சியாருக்காக, தூது நடந்தாயே – அதனாலோ, . என்று சொல்லிவிட்டு

“நான் பண்ணின பாபம், இப்படியெல்லாம் எனக்கு மனக் கஷ்டம் தர வேண்டும் என்று காலை முடமாக்கிக் கொண்டாயோ” – என்கிறார்.

மூன்றாவது:

அழியும் இந்த உடலை, மெய் என்று நினைக்காதே. உடம்பை வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே” என்று இருக்காமல், உடனே இறைவனை நினைத்துக் கொண்டே இரு.

பாபநாசம் சிவன் பற்றி கேட்கவே வேண்டாம்.

“வையத்திலே கருப்பையுள் கிடந்துள்ளம், நையப் பிறவாமல்
அய்யன் திரு நடம் காண வேண்டாமோ.

ஓடைச் சடலம் ஒடுங்க் வெற்றுடம்பு, கூட்டினில் இருந்து உயிர் ஓட்டம் பிடிக்குமுன் காண வேண்டாமோ”
என்று, கிறு கிறுக்க வைக்கிறார்.

கோபால கிருஷ்ண பாரதி – இப்படிச் சொல்கிறார்:

“கொட்டமடிக்கும் புலந்தொழில் நீக்கி
கோடி காலம் செய்த பாவங்கள் போக்கி
வெட்ட வெளியிலே, நெட்டென தூக்கி,
வேதம் பணிந்திட தென் முகம் நோக்கி (ஆடிய பாதத்தை)

இல்லோரு பாடலில் – இருவினைப் பிணிகளை கருவறுத்திடுகிறேன்-பயப்படாதே !!! (வருவாரோ)
என்கிறார்

இந்த மூன்றாவது விஷயத்தில்.... சிதம்பரம் இல்லாது, அருணகிரிநாதரும் பல பாடகளின், நம் பேதமையை வெளிப்படுத்துகிறார்:

அவர் "செவிட்டில் அறைந்து போல" பல பாடல்களில் சொல்லி இருக்கிறார். ஒரே ஒரு உதாரணம்:

சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் - “சுருதி முடி” என்று “ஹரி காம்போதியில்” ஒரு திருப்புகழ் பாடி இருக்கிறார். அது யூ ட்யூப் ல் இன்று கூட பார்க்கலாம். அதில் அவர் முதல் சரணத்தையும், கடைசி சரணத்தையும் பாடி முடித்திருப்பார். நடுவில் ஒரு சரணம் இப்படிப் போகிறது

“கலகமிடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் – என
உழலு மாயஞ் செனித்த குகையே உறுதி – கருது அசுழம் ஆம்
இத்த மட்டை தனை ஆள உனதருள் தாராய்”

“அசுழம் – நாய்” – மட்டை – மூடன்

உற்றுப் படித்தால், அர்த்தம் புரியும். “பகீர்” என்று இருக்கும்

இதற்கெல்லாம் "மசிவோமா" என்ன, நாமெல்லாம். ....

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

சிவ சிவ

Post by grsastrigal »

இந்த வார்த்தை சிவன் கோவில் உள்ளே போகும்போது நியான் விளக்கில் பின்னே எழுதப்பட்டிருக்கும் “சிவ சிவ வோ” அல்லது சிவனைப் பற்றி உபன்யாசத்தின் தொடக்கமோ இல்லை.

இது ஒரு ஆச்சர்யமான “சிவ சிவ”. நாம் பல நேரங்களில் ஒரு அதிர்ச்சியான/ஆச்சர்யமான ஒரு செய்தியைக் கேட்டவுடன் நாம் உடனே காதைப் பொத்திக்கொண்டு “சிவ சிவ போறும், சொல்லாதே” என்று சொல்வோமே, அது,
இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது ? என்று கேட்டால் மூன்று முக்கியமான நூல்களில்/புராணங்களில் இந்த வரிகளைக் கையாண்டிருக்கும் அழகு. அதை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

ஒன்று மூக பஞ்ச சதியில்

இரண்டாவது அப்பய்ய தீக்ஷிதரின் ஆத்மார்பண ஸ்துதியில்

மூன்றாவது, ஆச்சர்யமாக- நாராயணீயத்தில்.

அ) நாராயணீயத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.

நாராயணீயததைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஸ்ரீ மத் பாகவதத்தின் ஸாரத்தைப் பிழிந்து கொடுத்து இருக்கும் இந்த அற்புதமான் கிரந்தத்தில், ஸ்ரீ. சுந்தர் குமார் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் சொல்கிறேன்.

வால்மீகி ராமாயணத்தில் “சுந்தர காண்டத்தில் எத்தனை பகுதிகளோ (chapters) அத்தனை பகுதிகளை வார்த்தைகளாக (ஒவ்வொரு பகுதியும் ஒரு வார்தையாக) ஒரு 4 வரியில் (35 வது சதகம், 3 வது செய்யுள்) முடித்து இருக்கிறார்.

இதெல்லாம் குருவாயூரப்பன் அருள் இல்லாமல் எப்படிச் செய்ய முடியும் ?

அவர் கடுமையான வயிற்று வலியில் இதை எழுதி இருக்கிறார், அதுக்கே நாம் ஒரு "சிவ சிவ"
போடலாம்

இதில், ராமாயணத்தைப் பற்றி நாராயண பட்டத்ரி சொல்லும்போது, ஒரு இடத்தில் சிவ சிவ வருகிறது.
நா.ப. சொல்கிறார்: (35 வது சதகம், 9 வது ஸ்லோகம்)

உத்தர காண்டத்தில், ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, பதினாராயிரத்திற்க்கு அதிகமான வருடங்கள் சுகமாக ஆட்சி செய்தீர்கள். பிறகு சீதாதேவி விஷயமான அபவாதச் சொல்லைக் கேட்டு, கர்ப்பிணியான அவளை பரித்யாகம் செய்தீர்கள் அல்லவா ? “

சிவ சிவ -என்ன கொடுமை இது”

“மைதில்யாம் பாபவாசா....ஷிவ ஷிவ் கில தாம்” என்று சம்ஸ்க்ரித பதம் வருகிறது.

ஆ) இரண்டாவது அப்பய்ய தீக்ஷிதரின்- ஆத்மார்பண ஸ்துதி

தீக்ஷிதர் பற்றி முன்னுரை தேவையில்லை. அவரைப் பற்றி, காஞ்சி பெரியவர், ஒரு ஆடியோ ஒன்று வெளியீட்டு யூ ட்யூப் ல் இன்றும் இருக்கிறது. செம்மங்குடி மாமா “மௌளம் கங்கா, ஷஷாங்கௌ.......” என்று மாயமாளவ கௌளையில் ஒரு விருத்தம் பாடுவார், அது இவரது தான்.

அவர் தேவி மகாத்மியத்தை சுருக்கி, ஸாரமாக, ‘துர்கா சந்திர கலா ஸ்துதி” என்று ஒன்று எழுதி இருக்கிறார். உத்தமமான ஒரு கிரந்தம் இது.

அவர் “பைத்தியம் ஆக இருந்தபோது” ஒரு 50 ஸ்லோகங்களை இயற்றி உள்ளார். ஏன்/எதற்க்கு பைத்தியம் ஆனார் என்பதை மஹா பெரியவா இந்த "லிங்க்" ல் விளக்கி உள்ளார்.

https://www.youtube.com/watch?v=u0aJAkpMxic

இந்த ஆடியோவைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இது “உன்மத்த பஞ்சாஷத்” என்றும் அழைக்கப் படுகிறது. இப்படி ஒரு அற்புதமான கிரந்தத்தை எழுதிவிட்டு, கடைசி ஸ்லோகத்தை இப்படி முடிக்கிறார்.

“இறைவா, ஒருமுகப்பட்ட மனதுடன், இந்த ஆத்மார்ப்பண ஸ்துதியை நான் இயற்ற வில்லை. கருணைக் கடலே ! இந்த அற்பமானவன் வார்த்தை அளவிலாவது சரணம் அடைந்துள்ளான்’ என்று நினைத்து என்னை ரக்ஷிப்பாயாக !!!!

இந்த வரிகளை “உன்மத்த” நிலையில் எழுதி இருக்கிறார்.....!!!!! (நாம் சாதாரணமாக இருக்கும்போதே "உன்மத்த" நிலையில் தான் இருக்கிறோம் என்பது வேறு விஷயம்)

இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு தூக்கி வாரிப் போடுகிறது.

இதில், 8 வது ஸ்லோகத்தில் இப்படிச் சொல்கிறார்

“காமனை எரித்தவனே, எருக்கு, தும்பை முதலான மலர்களால், உன்னை அர்ச்சனை செய்து, அத்ன் பலனாக மோக்ஷ சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம் என்பதை அறிந்தும் கூட

“சிவ சிவ”

எனது காலத்தை வீணாக்கி, ! ஓ ஆத்மரூபியே ! ஆத்மத்ரோஹியாகி, இந்த்ரியங்களுக்கு அடிமையாகி, உன்னை மறந்து, நான் மேல் மேலும் அதோ கதியை அடைகிறேன்”

“எதத் ஜாநன் அபி “சிவ சிவ” வியர்தயன் காலம் ஆத்மன்”

இ) இது மூக பஞ்ச ஸதி- இதுவும் காஞ்சி பெரியவா சொன்ன ஆடியோ தான்.

ஆர்யா சதகத்தில் 48 வது ஸ்லோகம் – இதன் அர்த்தம் இப்படிப் போகிறது.

“ஸ்ரீ காமக்ஷி தேவியின் கடாக்ஷத்தினால் அனுக்ரஹிக்கப்பட்ட மகா புருஷன், காட்டையும், அரண்மனையும், சத்ருவையும், ஸ்நேகிதனையும், ஒட்டாஞ்சல்லியையும், யுவதிகளின் கோவைக்கனி போன்ற உதடுகளையும் சமமாக பார்க்கிறார்கள்.

சிவ சிவ

என்ன ஆச்சார்யம், என்ன ஆச்சர்யம்..... “ என்று முடிக்கிறார்.

“ஷிவ ஷிவ பஷ்யந்தி சமம்.......” என்று ஆரம்பிக்கிறது இந்த ஸ்லோகம்.

மகான்கள் கஷ்டப்பட்டு, நமக்காக சொன்ன விஷயங்கள்

நான் கொஞ்சம் யோசித்தேன். இதை தவிற, புராணங்களிலும், இத்காசங்களிலும், பல இடங்களில் “சிவ சிவ”பிரயோகப் பட்டு இருக்கலாம். உங்களுக்கும் பல இடங்கள் தோன்றலாம். எனக்கு தோன்றிய சில

1) திரௌபதி மான பங்கப் படுத்தப்பட்ட போது

2) கர்ணன் அடிபட்டு குற்றுயிரும், குலையுயிரும் ஆக இருக்கும்போது, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ! கர்ணா ..... என்று பாடிக்கொண்டே “உன் தர்மத்தை தானம் பண்ணு” என்று கிருஷ்ணர் கேட்பாரே – அப்போது

3) இறப்பே கிடையாது, நான் எப்போது இறப்பேன் என்று நான் தான் முடிவு செய்வேன் என்று ஒரு வரம் பெற்ற பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கும் போது, அந்த வலியிலும், நமக்குக் கொடுத்த விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

4) ராமாயணத்தில் பல இடங்களில்

5) எல்லாவற்றிற்க்கும் மேலாக, அரிச்சந்திரன் கதைதான். வஷிஸ்டருக்கும், விஷ்வாமித்தருக்கும் நடந்த போட்டியில், பெரிய ராஜாவாக இருந்த ஹரிச்சந்த்ரனை, பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று கங்கணம் காட்டிக்கொண்டு, இந்த விஸ்வாமித்ரர் அவனை படுத்திய பாடு, ராஜாவை, கடைசியில், சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்ய வைத்து, இறந்து போன மகனையே, தன் மகன் என்று தெரியாமல், மனைவியை பிரிந்து பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா.

இப்பவும் காசிக்குப் போய், அந்த “ஹரீஷ்சந்திர காட்” என்ற இடத்திற்க்கு போய் நின்று ஒரு நிமிடம் அரிச்சந்திரனை, நினைத்துப் பார்த்தால், கண்ணீர் விடாமல் இருக்க முடியாது.

முடிவில், மும்மூர்த்த்திகளும் அரிச்சந்திரனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க- “வஷிஸ்டர் தான் ஜெயித்து விட்டோம் என்று, விஷ்வாமித்ரரை “அவமதிக்கக் கூடாது” என்று ஒரு வரம் கேட்டார் பாருங்கள்- அதுதான் எனக்கு சிவ சிவ.

நானாக இருந்தால், மினிமம், விஷ்வாமித்ரரை “ணங்” என்று ஒரு குட்டாவது குட்டி இருப்பேன்.

நிகழ் காலத்தில், நம்பி நாராயணன் உண்மைக் கதை கூட எனக்கு சிவ சிவ தான்.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: என் எண்ணங்கள்

Post by arasi »

Gsastrigal,
I have read your concert reviews over the years, liked them, but now I look at your "en eNNangaL' posts every now and then. I like your fresh look at what you gain by reading and hearing pravachanams which you share with us. The appeal is in that when there are so many 'sat vishayangaL' in many discourses that come our way, thanks to the internet--yours is one individual's response to them. Your impressions and feelings are spontaneous. They are not stilted. Nor do they contain references which try to establish your scholarship. The basis of this seems to be your feeling which is: yAn peTRa inbam ivvaiyagamum peruga. I gain a lot here, not being well-read as you are. While I can't retain all this as I should, I still benefit by being in the proximity of your search. Please continue and share...

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

பெருமாள் கோவிலில் “ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம்”

Post by grsastrigal »

கோகுலாஷ்டமி இன்னும் 10 நாட்கள் வரும் நிலையில் இந்தக் கோவிலை பற்றி எழுதலாம் என்று.......

பொன்னியின் செல்வன் “டீசர்” வெளி வந்த பிறகு, ஹரியும் ஹரனும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயிலே மண்ணு, என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி விட்டது. தஞ்சாவூர் பற்றிய ஒரு கணிப்பு மிகவும் உச்சத்தில் சென்று விட்டது. அதே தஞ்சை மாவட்டத்தில் வாயளவில் பேசாமல், நிஜமாகவே ஒரு கோவில் ஹரி ஹர பேதமில்லாமல் இருக்கிறது என்பது தான் ஆச்சர்யம்.

இந்த சிறிய கோவிலில் பல ஆச்சர்யங்கள் அதிசயங்கள்”

1) எந்தப் பெருமாள் கோவிலிலும் , ஸ்ரீ ருத்ரம், சமகம் சொல்லி, பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதை யாரும் பார்த்திருக்க முடியாது. வீபூதி இட்டுக்கொண்டு பெருமாள் கோவிலுக்குப் போனாலே, நம்மை “ஒரு மாதிரி” பார்க்கும் பட்டாச்சார்யார்களை மைலாபூரிலேயே நான் பார்த்து இருக்கிறேன்.

அது மட்டுமில்லை நான் சொல்லப்போகும் இந்தக் கோவிலில் பட்டாச்சார்யார்களே, ஸ்ரீ. ருத்ரம் சொல்ல ஆரம்பித்த பிறகுதான், மற்றவர்கள் சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்ல.

2) பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு இருந்தால் தான் “சடாறி” வைப்பார்கள்.

3) கிராமமே காலியாகி மடிப்பாக்கத்திலும், நங்கநல்லூரிலும், வெளி நாடுகளிலும் குடியேறிய பிறகும் கூட, பல பிராமண குடும்பங்கள் இன்றும் இந்த் கிராமத்தில் இருந்து அந்தக் காலத்தில் சொன்ன ஸம்ப்ரதாயங்கள், பூஜை, ஸ்வாமி புறப்பாடு எல்லாம் இன்றும், ஒன்று விடாமல் நடந்து கொண்டு இருப்பது ஆச்சர்யத்திலும், ஆச்சர்யம்.

4) வரும் காலத்தில் கோவிலில் “ஸ்வாமிக்கு விளக்கு” ஏற்றுவதற்க்குக் கூட பணம் இருக்காது என்று அன்றே கணித்த முன்னோர்கள் “கட்டளை” என்று ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு உற்சவத்திற்க்கும், ஒரு குடும்பம் பொறுப்பு எடுத்துச் செய்வது என்று முடிவு செய்து, இன்றும் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள், “அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும்”, அந்த நாளில் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்வது, இன்னும் ஆச்சர்யம்.

இந்தக் கோவிலில் உறியடி உத்சவம் மிகவும பிரசித்தம். அந்த உறியை, சிறுவர்களும், இளைஞர்களும் ஒரு நீளமான குச்சியால் முதலில் வேகமாக தட்டுவார்கள். பிறகு “பிரமிடு” போன்று நின்று உயரே தூக்கப்படும் உறியை பிடிக்க முயல்வார்கள். இதை முதலில் ஒரு நீளமான குச்சியால் ஒரு அடி அடி அடித்து ஒரு வயதானவர் துவக்கி வைப்பார், அவரும் ஒரு கட்டளைக்காரர். அவர் குடும்பம் தான் முதலில் அடிக்க வேண்டும்.

இப்படி உறியை அடித்து விளையாடும் நபர்களின் மீது தண்ணியை மூஞ்சியில் அடிப்பார்கள். அப்போது அவர்கள் நிலை தவறி கீழே விழுவார்கள். அந்த தண்ணீர் முதலில் அடிக்கும் நபர் ஒரு கட்டளைக்காரர்கள் தான்.

5) இன்றும் இந்த ஊரில் பிறந்தவர்கள், இந்த ஊர் பெருமாளைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள், தன் முதல் சம்பளத்தை அப்படியே பெருமாளுக்குக் கொடுத்து விடுவார்கள்.

6) திருப்பதிப் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு இங்கே பிரார்த்தனையை முடிக்கலாம். ஆனால் இங்கே
வேண்டிக்கொண்டு, திருப்பதியில் செய்ய முடியாது.

இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட ஊர் பூபதிராஜபுரம் என்று அன்று அழைக்கப்பட்டு, வராஹபுரி என்று பிறகு அழைக்கப்பட்டு, வரகூர் என்று அழைக்கப்படும் கிராமம் தான் இது.

சங்கீத மும்மூர்திகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ. தியாகராஜர், ஸ்ரீ. முத்துசாமி தீக்ஷிதர், ஸ்ரீ. ஸ்யாமா சாஸ்த்ரிகள் போன்ற மகான்கள் அவதரித்த சோழநாட்டில், ஆந்திராவில் பிறந்த ஸத்குரு நாராயண தீர்த்தர் என்ற மகான், இங்கு வந்து, கிருஷ்ணனின் பிறப்பு, பால லீலைகள் மற்றும் ருக்மிணி கல்யாணம் வரை கூறும் “கிருஷ்ண லீலா தரங்கிணி” என்ற அற்புதமான பாடல்களை, எழுதி, அவரே பாடி, அதற்க்கு, பரமாத்மா நடனம் ஆடி, அவருடனேயே ஐக்கியமான புண்ய க்ஷேத்ரம் இது. இதற்க்கு ஆஞ்சநேயர் தாளம் போட, இப்போதும் அந்த "ஆஞ்சநேயர் தாளம் கொட்டி" ஆஞ்சநேயர் என்று அருள் பாலிக்கிறார்.

வரகூர், திருவையாறு – திருக்காட்டுப்பளி மார்க்கத்தில் செந்தலை அருகே உள்ள ஒரு சிறிய கிராமம். வரகூர் பாதை என்று ஒரு பஸ் ஸ்டாப் உண்டு. அங்கிருந்து 2 கிலோமீட்டர் நடந்தால் கிராமத்தை அடையலாம். நடந்து சென்றால் பசுமையான புல் வெளிகளும், வயல் நெல் குருத்துகளும் அதன் பச்சை வாசனையும், வாழை தோப்பும் நம்மை சொக்க வைக்கும்.

மிகச் சிறந்த பாகவதோத்தமர்கள் பிறந்து, வளர்ந்து, மிகப் பெரிய பதவியை அடைந்து, காஞ்சி மஹா பெரியவர்களின் கையால் சன்மானம், ஏன், ஜனாதிபதி கையால் பரிசு பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். சில பெயர்களைக் கீழே கொடுத்து இருக்கிறேன்

ஸ்ரீ கோபால பாகவதர், இன்று நாம் பாடும் ஸம்ப்ரதாய பஜனைக்கு வித்திட்டவர். ஸ்ரீ. எஸ். வீ குருஸ்வாமி சாஸ்த்ரிகள் ஸத்குரு ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணியை எளிமைப் படுத்தி, எல்லோரும் இன்றும் பாடும்படியாக செய்த பெரிய மகான். வரகூர் aஸ்வாமிகள் என்று சொல்லப்படும், ஸ்ரீ. அச்யுத கிருஷ்ண சரஸ்வதி இங்கு பிறந்து, திருவாரூர் அருகே அரசவனங்காடு கிராமத்தில் சமாதி ஆனவர். இன்றும், அங்கு, அவரது அதிஷ்டானம், அரசவங்கட்டில் தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக இருக்கிறது. ஸாம வேதத்தில் கரை கண்டவர்கள் இந்த ஊரில் இருந்தார்கள் என்பது இன்னொரு சிறப்பு.

கிராமத்திற்க்கு உள்ளே நுழையும்போது இரட்டைப் பிள்ளையார் நம்மை அன்புடன் வரவேற்பார்கள். இவர்கள் மாமனார்-மாப்பிள்ளை பிள்ளையார் என்று தொன்று தொட்டு அழைப்பார்கள். அதன் எதிரில் அருமையான குளம். அதைக் கடந்து வந்தால், ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை, மகா கைலாச நாதர் கோவில் இருக்கிறது. ஸத்குரு ஸ்ரீ. நாராயண தீர்த்தர் அவர்களின் அதிஷ்டானம் இங்கு உள்ளது என்பது இன்னொரு பெருமை. இதை ஏணிப்படிகளில் மாந்தர்கள்” என்ற நூலில் “சிவன் ஸ்வாமிகள்” மிக அழகாக எழுதி இருக்கிறார்

அதை தாண்டி அழகான கிராமம், கிராமத்தின் நடுவே மிக அழகான சிறிய கோவில். இங்குதான் ஸ்ரீதேவி உடனுறை ஸ்ரீ. வெங்கடேச பெருமாள். சத்குரு நாராயண தீர்த்தருக்கு, கிருஷ்ணனாக காட்சி கொடுத்து, ஸ்ரீ. கிருஷ்ண லீலா தரங்கிணி பாடிய இடம். முடிவில் காவல் தெய்வமாக “பெரமனார்” இருந்து கிராமத்தை இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ விட்டல் தாஸ் மகாராஜ் அடிக்கடி சொல்லுவார் - ஜெயதேவர் பாடிய அஷ்டபதியை அவர் எங்கு பாடினார். பூரி ஜேகன்னாதர் கோவிலிலா இல்லை கொஞ்சம் தூரத்தில் அவர் பிறந்த கிராமம் இருக்கிறது அங்கேயா ? என்று. ஸ்ரீ நாராயணீயம் பாடிய பட்டத்ரீ கோவிலில் ஸ்வாமி எதிரில் பாடினாரா ? என்றும் தெரியாது. இன்றும் குருவாயூர் கோவிலுக்குச் சென்றார், ஸ்வாமி சன்னதியில் எதிரில் பாராயணம் செய்ய அனுமதி இல்லை.

ஆனால் வரகூரில் ஸ்வாமி சன்னதி எதிரில் மிக அருகில் தரங்கம் பாடலாம். இன்றும், பாகவதர்கள், ஸத்குரு பாடிய இடத்தில், தரங்கம் பாடுவது கண் கொள்ளாக் காட்சி.

ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். அந்த ஜெயதேவர் கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, அவரே நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின் லீலைகளைப் பாடினார் என்றும் இங்கு கூறப்படுவதுண்டு

தரங்கம் பாடல்கள் மட்டும் இல்லை. அது உபநிஷத் அடங்கிய ஒரு வேதம். "க்ஷேமம் குரு கோபால, மற்றும் வீக்ஷேகம் கதா" போன்ற பல அருமையான பாடல்கள் அடங்கிய தரங்கம், கலியைப் போக்க வந்த பொக்கிஷம்.

கிருஷ்ண லீலா தரங்கிணி பற்றி ஒரு அற்புதமான விளக்கம் சொல்வதுண்டு:

"ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'

இந்தக் கிராமத்தில், உறியடி உத்சவம் மிகவும் பிரபலம். ஆவணி அவிட்டம் முடிந்து எட்டாம் நாள், கிருஷ்ண ஜனனம் என்ற ஜன்மாஷ்டமி யை ஒட்டி நடக்கும் அற்புதமான வைபவம். இந்த எட்டு நாளும், வரகூர் கிராமம் “கோகுலம்” போல கோலாகலாமாக இருக்கும் பூலோக வைகுண்டம் என்று கூட சொல்லலாம். நிதம் வேறு வேறு அலங்காரம், பாகவதர்கள் பஜனை, சதுர் வேத பாராயணம், ஸ்ரீ மத் பாகவத பாராயணம், தரங்கிணி பாடல்கள் என்று ஊரே அமர்க்களம் தான்.

ஸ்வாமி வெண்ணைத் தாழியில் வீதி உலா வந்து, வெளி மண்டபத்தில் வைத்து, இரவு, அபிஷேக அலங்காரங்களுடன் “புறப்பாடு” மிகவும் விமரிசையாக இருக்கும், ஸ்வாமி பாதையில் அங்கப் பிரதக்ஷிணம் செய்யும் பக்தர்கள் எல்லாம் பக்தியின் உச்சம். “உறியடியோ கோவிந்தோ” என்று பக்தர்கள் கூக்குரல் எங்கு காண முடியாத அதிசயம். வழுக்கு மரம் ஏறுவது என்பது, மனிதர்களுக்கு ஏற்றத் தாழ்வு என்று இருந்தாலும், இறைவனின் அருள் இருந்தால், எந்த்த் தடைகளையும் சர்வ சாதாரனமாகத் தாண்டலாம் என்பதற்க்கு ஒரு உதாரணம்..

எத்தனை எழுதினாலும் போறாது. உறியடி உத்சவத்தை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும்.

வாருங்கள், வந்து ஒரு முறை வரகூர் பெருமாளைப் பாருங்கள். அவர் பயத்தை மட்டுமல்ல, பயத்தின் காரணத்தையும், வேரோடு அழிக்கக் கூடிய அற்புத தெய்வம்.

இதில் இன்னும் சில சிறப்புகளை பார்ட் – 2 ஆக எழுத ஆசை.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

T.V சங்கரநாராயணன் (TVS) – “எப்போ வருவாரோ”

Post by grsastrigal »

.வாஷி=நவி மும்பை- நான் திருமணம் ஆகி மும்பையில் முதல் வேலை கிடைத்து செட்டில் ஆகிக் கொண்டிருத்த நேரம்

அப்போது. அணுசக்தி நகரில் என் சித்தி சித்தப்பா இருந்ததால் வாரக் கடைசியில் அங்கு போய் எப்போவாவது நடக்கும் கச்சேரியை கேட்பதுண்டு. அப்படித்தான் ஸ்ரீ ஓ எஸ் தியாகராஜன், ஸ்ரீ. டி.என் சேஷகோபாலன், ஸ்ரீ. டி.வீ சங்கரநாராயணன், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் கச்சேரி கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்கள் எல்லோரும், மும்பை வந்தால், அணுசக்தி நகர், செம்பூர் பைன் ஆர்ட்ஸ், முலண்டு, மாடுங்கா என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு சென்னை திரும்பிப் போவார்கள்.

அப்படி ஒரு நாள் TVS அவர்கள் பாடினார். நான் அவரின் பரம ரசிகன், பல கச்சேரிகள், திருச்சி, பெங்களூர், மும்பை, சென்னை என்று கேட்டு இருக்கிறேன்.

அவர் ஒரு நிரவல் “புன்னகை முகம் ஆறு, அருள் வரம் தேடி வந்தேன், பன்னக சயன, மருகா, முருகா, குகா” என்று (கந்தன் என்ற பெயர் –பாடல்). அது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. “அம்மாடி. என்ன ஒரு நிரவல். மிக பிரமாதம்” என்று சொன்னால் நான் நரகத்துக்குத்தான் போவேன். மிக மிக அதற்க்கும் மேலே ஒரு வார்த்தை போட ஆசை. எனக்கு இன்று வரை அந்த வார்த்தை தெரியவில்லை.

இன்னொரு நிரவல் ..அன்னை காமாட்சி போலே அருள் வடிவாக வந்தார். என்று காமகோடி ஆச்சார்யா பெயரில் பெரியசாமி தூரனின் (புண்ணியம் ஒரு கோடி) கீரவாணியில் - ஒரு பாடலில் ஒரு வரி அது. இப்படிப் பல பாடல்கள்.
12 வயதில், மணி ஐயருடன் கூடப் பாடியது, 1968 ல் முதல் கச்சேரி, மணி அய்யர் மறைந்த வருடம். 77 வயது மறைவு. எந்த ராகம் பாடினாலும் அதில் கோலோச்சியவர். எத்தனை கச்சேரி, எத்தனை இடங்கள், எத்தனை கோவில் கச்சேரிகள்..

லயமும் பாவமும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை பரவசப்படுத்திய பாடல்கள் அவருடையது.

டி.எம். கிருஷ்ணா அவர்கள் சொன்னது போல், அவருடைய சங்கீதம் “filled with passion, romance, flourish and unrestricted flow” அவர் பாடல் விளக்கு என்றால் நம்மை வீட்டில் பூச்சியாக விழ வைப்பார்.

அந்தக் காலத்தில் ஆடியோ டேப் மிகவும் பிரபலம் என்பதால் அவருடைய பல லைவ் கசேரிகளின் ரெகார்டிங் நான் வாங்கி ஒரு பொக்கிஷம் போல வைத்துக் கேட்பேன். இங்கிலீஷ் நோட்டுக்கும், எப்போ வருவாரோ பாடல்களுக்கு ஏங்கும் மக்களிடையே, நான் ஒரு வாசஸ்பதியோ (சகஸ்ரா), கன்னட கௌளையோ (சொகசு ஜூட) ஸ்வரங்கள் எப்படி பிரளயமாக வருகிறது என்று அவர் வாயையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

பெங்களூர் சேஷாத்ரிபுரம் ஒரு கச்சேரி, “ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே” என்ற ஒரு தாசர் பாடலை சாரங்காவில் ஆரம்பித்து ராக மாலிகையில் பாடினார். குரல் அது மாத்திரம் குழைந்து கொடுக்க அள்ளிக் கொடுத்தார். அது தான் முதல் பாட்டு – அந்தக் கச்சேரியில்...

சாதாரணமாக அவர் வர்ணம் எல்லாம் பாடுவது கிடையாது. மாமா மணி அய்யர்வாள் மாதிரி நேரே பாட்டுதான். ஒரு ஹம்ஸத்வனி யோ நாட்டை யோ.. அதில் ஸ்வரம் நிச்சயமாக உண்டு. அதிலே அவர் குரலை சரி பண்ணிக் கொண்டு விடுவார். கற்பக விநாயகக் கடவுளே என்று ஒரு வரியை பாடி அதில் மேல், கீழ் எல்லாம் பாடிவிட்டு கசேரியை ஆராம்பித்து விடுவார். ஸ்வர மழை பொழிவார். சாதாரணமாக முதல் இரண்டு பாட்டு முடிந்தபிறகு போனால் பரவா இல்லை என்று நினக்கும் பல பாடகர்கள் இருக்கும் காலத்தில், முதல் பாட்டு மிஸ் ஸே பண்ணக் கூடாது என்று நான் நினைத்த ஒரே வித்வான் TVS தான்.

சங்கீத கர்வம், மிடுக்கு ஒன்றுமே கிடையாது. ஒரு சிரிப்பு, எனக்கு ரசிகர்கள் போறும், என்று ஒரு எண்ணம். மணி அய்யர்வாளிடம் இருந்து இவருக்கு வந்தது – இதெல்லாம்.

சென்னையில் நான் சி‌ஏ படித்துக் கொண்டிருக்கும்போது, டி‌வி‌எஸ் வெறியர்கள் என்று பல பேர் உண்டு. சாத்தூர் ஏ‌ஜி‌எஸ் அவர்களின் மாப்பிள்ளை ஸ்ரீ. சுந்தரம் என்று ஒருவர் இருந்தார். அவர் டி‌வி‌எஸ் ன், மிகப் பெரிய ரசிகர். அக்கு வேறு ஆனி வேறாக அலசுவார். மற்ற வித்வான்களை "ஒன்றுமே இல்லை" என்ற அளவுக்கு argue பாண்ணுவார். அவ்வளவு ஆர்வம்.

சாதாரணமாக மிடுக்குடன் ஜிப்பா என்ன சட்டை என்ன, அங்கவஸ்த்ரம் என்ன, காதில் தோடு, வெளியில் தெரியும் தங்கச் சங்கிலி, துண்டு என்ன, சென்ட் என்ன, “மீசைக்குக் கூட கருப்பு அடித்து” – என்று வரும் பாடகர்கள் இடையே, சாதாரணமாக ஒரு கதர் ஜிப்பா, போட்டுக் கொண்டு, லேசா ஒரு விபூதி கீற்று, ஏதோ தூங்கி எழுந்து மூஞ்சி அலம்பி, ஒரு காபி சாப்பிட்டு விட்டு வருவது போல், ஒரு மனிதர். ஆனால் உட்கார்ந்து பாட ஆரம்பித்தால், எவ்வளவு பெரிய கலைஞர், சரஸ்வதி கடாக்ஷம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, இசை மேதை- என்பது எனக்குத் தெரியும்.

கான கலாதரரின் முக்கியமான விஷயங்களை, அவர் எந்த எந்த விஷயங்களில் ரசிகர்களின் மனதை அபகரித்தாரோ, அதை அப்படியே தன்னுள் எடுத்துக் கொண்டு, தன்னுடைய பாணியையும் சேர்த்து, ஒரு ஜகஜ்ஜாலாம் செய்து, என்னை போன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

தான் இரண்டு முக்கியமான என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள். ஒன்று ஒரு மாதிரியான கலக்கமான (இப்போது நினைத்தாலும் பகீர் என்று இருக்கும்) நிகழ்ச்சி. இரண்டு நான் மிகவும் வருத்தப்படும் நிகழ்ச்சி.

வருத்தப்படும் நிகழ்ச்சி –

நான் இப்போது குடியிருக்கும் “ரமணியம் சுமுகம்” (ராஜா அண்ணாமலை புரம்) என்ற குடியிருப்பில், மொத்தம் 5 தளங்கள். நான் 4 வது தளத்தில் இருக்கிறேன். 5 வது தளம் “பெண்ட் ஹவுஸ்” மாதிரி. அந்தத் தளத்தை TVS மாமா 4 மாதம் முன்பு வாங்கி இருக்கிறார். அந்தத் தளத்தில், உள் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. 3-4 தடவை அவர் வந்து பார்த்ததாகவும் எனக்குச் செய்தி வந்தது. என் குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தோம். ஒரு சங்கீத கலாநிதி, பத்ம பூஷண். நான் மிகவும் நேசித்த, மிக உயர்ந்த மனிதர். என் தளத்துக்கு மேலே வருகிறார் என்பதும், அவருடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் சாதகம் பண்ண கேட்கலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். அது கனவாகப் போயிற்று.

பகீர் நிகழ்ச்சி:

அப்போது நான் “வாஷி கான்வ்” (vaashi village) ல் குடி இருந்தோம். அப்போது வாஷி ரயில் நிலையம் வரவில்லை. மான்கூர்ட் என்ற ஒரு station தான் கடைசி. வாஷி யிலிருந்து மும்பை போவதற்க்கு பஸ் தான். வாஷி பாலத்தைக் கடந்து மான்கூர்ட் வழியாக மும்பை யை அடைய வேண்டும்.

1982-83 வது வருடம்.. (வருடம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. 1983 யில் என் பையன் பிறந்தான்) அப்போது செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் ல் TVS கச்சேரி. நானும் என் மனைவியும் போய் வருவதாக பிளான் செய்து கிளம்பினோம். அப்போது என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். 6 மாதம் என்று நினைக்கிறேன். பஸ் ஏறி சென்று செம்பூர் செல்ல வேண்டும். வாஷி பாலம் வருவதற்க்கு முன்பு, ஒரு ஸ்பீட் பிரேக்கர் ஒன்று உண்டு. நானும் என் மனைவியும் பின்னால் ஏறி நின்று கொண்டு இருந்தோம். ஸ்பீட் பிரேக்கர் வரும்போது ஒரு பிரேக் போட்டு வண்டி ஏறி இறங்கியது. அது பின்னால் ஒரு தூக்கு தூக்கிப் போட, என் மனைவி கத்த, நான் பதறிப் போய், ஒரு நிமிடம் என் மூச்சு நின்று விட்டது. பஸ்ஸில் பல பேர் ஓடி வந்து என் மனைவியை பிடித்து உட்கார்த்தி வைத்து ஆஸ்வாஸப் படுத்தினார்கள. பிறகு மெதுவாக செம்பூர் ல் இறங்கி, மெதுவாக அரங்கத்திற்க்குப் போனால், மாடிக்கு தான் போக வேண்டும்’. கீழே ஃபுல் ஆகிவிட்டது. மெதுவாக படி ஏறி, (நிறைய படிகள்), ஏறி உட்கார்ந்து கச்சேரி கேட்டோம். அப்போது அவர் பாடிய RTP- பிருந்தாவன சாரங்கா- “ஸ்ரீ ரங்கா ஹரி ரங்கா, பாண்டு ரங்கா, பிருந்தாவன சாரங்கா” – இன்றும் என் மனதில் இருக்கிறது. அது ஒரு “அட்வெஞ்சர்”. இன்றும் அதை நினைத்தால் ஒரு பகீர் கலந்த சந்தோஷம் !!!!

ஒரு ஆடியோ காசெட் ரொம்ப வருடங்களாக நான் வைத்து இருந்தேன். அதில் ஆபோகி- “மனசு நில்ப”, அடுத்து கல்யாணி ராகம் பாடி “நம்பிக் கெட்டவறல்லரோ” அதற்க்குப் பிறகு பைரவி பாடி “தனயுனி ப்ரோவ”. அது என்னமோ நான் அடிக்கடி போட்டு கேட்ட பாடல். அதில் “இன குலோத்தம” – என்ற ஒரு இடத்தில் “ஒரு சொழட்டு சொழட்டுவார்” ஒவ்வொன்றும் அற்புதம். நான் பம்பாய் இருந்தபோதும் சரி ஆதற்க்குப் பிறகு துபாய் சென்று 6 வருஷங்கள் இருந்த போதும் சரி, பிறகு சென்னை – என் கூடவே இருந்தது.

யூ ட்யூப் காலத்தில் இதெல்லாம் காணாமல் போனால் கூட அந்த நினைவுகள் பசுமையானவை.

சங்கீதக் கடவுள் என்று நான் கருதும் மணி அய்யர் அவர்களின் மருமான், அவருடன் மறுபடி உடன் பாடச் மேலே சென்று விட்டார். நமக்கு அதில் உடன் பாடில்லை. இருந்தாலும் அவருடைய பாடல்கள், கச்சேரிகள், கொட்டிக் கிடக்கின்றன -You tube ல்.

அவருடைய பேட்டியில், 1984 ல் கல்கியில் வந்தது, இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது

1. முக்கியமான தவறுகள் வீத்துவான்களிடம் தான் இருக்கின்றது. ரசிகர்களிடம் அல்ல
2. நாம் நன்றாகப் பாடினாலே போரும். ஜனங்கள் நிச்சயம் வருவார்கள்.

இங்கிலீஷ் நோட் பாடுங்கள் என்று மியூசிக் அகாடெமியில் உட்கார்ந்த எல்லோரும், ஒரு சேர எழுந்து கேட்டுக் கொண்டது, மறக்க முடியாத அனுபவம் என்கிறார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவர் இசை என்றும் அழியாது.
Last edited by grsastrigal on 19 Sep 2022, 09:25, edited 2 times in total.

rajeshnat
Posts: 9906
Joined: 03 Feb 2010, 08:04

Re: என் எண்ணங்கள்

Post by rajeshnat »

GRS
Very well written in thamizh. Can you copy your post and put it in TVS obituary thread please....
viewtopic.php?p=377468#p377468

Also just a mention of the year say atleast where you had that memorable mankhurd chembur bus speed breaker and ending with brindavana saranga RTP.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: என் எண்ணங்கள்

Post by arasi »

grs,
Knowing you through your writing has been a pleasure over the years.Your homage to TVS here (thanks to Rajesh) is moving. His music and simplicity are brought out so touchingly in your writing. nanRi.

I can hear his kunRamEndik kuLir mazhai kAthavan pAsuram now...

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: என் எண்ணங்கள்

Post by RSR »

ref-11
krushNa leelaa tharangini....and Naarayana Theertha and about varakoor
--
wonderful writing Sir. Thank you.
-
I am searching for the full text of KrushNa leelaa tharangini - with word-by-word translation and gist. I am able to locate the sanskrit text only but I need translation preferably in Thamizh.
Kindly add images too to illustrate your visit to the temples.
Can I have your help and guidance please? Your hread is absolutely wonderful.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: என் எண்ணங்கள்

Post by RSR »

ref-p-8
about Thillai
-
ஆரம்பத்தில் பல்லவியில், “வேலைத்தூக்கும் பிள்ளை, தனைப் பெற்ற தெய்வமே” என்று முருகனையும் கூப்பிடுகிறார்.

காலைத் தூக்கி, பாட்டில் உள்ள வரிகளை கொஞ்சம் பார்ப்போம்

செங்கையில் மான் தூக்கி
சிவந்த மழுவும் தூக்கி
அங்கத்தில் ஒரு பெண்ணை அனு தினமும் தூக்கி
திங்களை, கங்கையை, கதித்த சடையில் தூக்கி

அடுத்த சரணம்”

நந்தி மத்தளம் தூக்க
நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று அய்யன் ஸ்ருதியும் தாளமும் தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க

இந்த சரணம், பக்தர்களின் உணர்ச்சி பெருக்கான நிலை.

இந்தப் பாடல், எம். எஸ். அம்மா பாடி, அந்தக் காலத்தில், வெகு பிரசித்தம், என் பாட்டி, கொள்ளு பாட்டி முதற்கொண்டு, அனுபவித்துப் பாடுவார்கள்
-----
https://sites.google.com/site/homage2ms ... -nindradum
----

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: என் எண்ணங்கள்

Post by grsastrigal »

Sri RSR
Since this is one to one discussion, please send a mail in grsastrigal@gmail.com. We will discuss in detail

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: என் எண்ணங்கள்

Post by RSR »

@grsastrigal
Yes.Sir. I will send email. Thank you.
..
just now located the thread on Naaraayana Theertha in composers section.

@Rajani Won't it be very nice if you and Sri.Govindan give us a blog site similar to yours on Sadasiva BrammendraaL, DEVANAGARI script and translation in English and Tamil. ?
A fine website
http://sangeetasudha.org/narayanateertha/
Gives English translation for quite a few songs.
--------
http://www.ibiblio.org/guruguha/skl_tarangini.pdf
sanskrit
-------------------------------------------------
http://www.ibiblio.org/guruguha/skl_eng.pdf
english transliteration
----------------------------------------

Rajani
Posts: 1193
Joined: 04 Feb 2010, 19:52

Re: என் எண்ணங்கள்

Post by Rajani »

RSR Sir, the blog with Sadashiva Brahmendra kritis and Stotras with lyrics (in various scripts) and translations is already done by Govindan Sir and me.

https://sadasivabrahmendra.blogspot.com ... havam.html

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: என் எண்ணங்கள்

Post by RSR »

ref-p-19-@Rajani
Madam,
Yes. I have read , benefitted and used it in my websites. Thank you.
What I requested in my post at ,is that you please creatte a similar blog/site for all the kruthis of Naaraayana Thhertha. giving devanaagari lyrics, word-by-word meaning and English/ Thamizh translation.
.
From the few that I have resd of that saint-poet-philosopher, his poems -taranginis- are great in sweet sounding prosdy and very close to Bhaagavatham . and best in treatment.

Kindly place the links as you proceed in the sacred task step by step in the thread for Naaraayana Theertha at
viewtopic.php?p=377605#p377605
.
I find about 12 kruthis have been rendered by leading lady vocalists of the previous generations. and some of them have been uploaded by kaartheek sharma. Kindly help .

Rajani
Posts: 1193
Joined: 04 Feb 2010, 19:52

Re: என் எண்ணங்கள்

Post by Rajani »

Oh thank you for explaining, I realize I did not understand properly.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

“காந்தாரா” வும் எங்கள் ஊர் அய்யனாரும்.

Post by grsastrigal »

இந்தக் கதை நம்மூர் அய்யனார் பற்றிய கதை. நம் ஒவ்வொருக்கும் இதில் சம்பந்தம் இருக்கும்- என்பது உண்மை.

எத்தனை ஆழமாக, நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு படம் எடுக்கப்படுகிறதோ, அது உலக அளவில் பேசப்படும். – என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

ஒரு சினிமா என்பது நாம் கடந்து வாழ்ந்த வாழ்க்கையின் சில சம்பவங்களை ஞாபகப்படுத்தும் போது, நாம் அந்த சினிமாவுடன் ஒன்றிப் போகிறோம். சில சமயம் நெகிழ்ந்து கூடப் போகிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் மிகவும் மதித்த ஆன்மீக ஆச்சர்யங்களை கொண்டு போய் சேர்க்காமல் இருந்துவிட்டோமோ என்ற ஒரு குற்ற உணர்வு கூட நம்மை சூழ்ந்து கொள்கிறது

இந்தக் கன்னட படம், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது பெரிய விஷயமல்ல. தமிழ் நாட்டில் லேசில், ஒரு வெளி மாநிலப் படம் ஓடாது. அதில் எனக்குத் தெரிந்தவரை, இரண்டு படங்கள் விதி விலக்கு. ஒன்று சங்கராபரணம், இரண்டு, காந்தாரா. நான் சொல்வது கதை அம்சம் உள்ள படங்கள். Fantasy படங்கள் அல்ல.

சினிமா படங்களைத் தவிர்த்து பல வருடங்கள் ஆகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வனையும், காந்தாராவையும் பார்க்க நேர்ந்தது. முதலில் பொன்னியின் செல்வனைப் பற்றித்தான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் காந்தாராவைப் பார்த்தவுடன் நான் “ஆடிப்” போனேன். 2 நாள் நான் சரியாக பேச முடியவில்லை. கிராபிக்ஸ் படங்களும், மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், துப்பாக்கி, தோட்டா, கத்தி என்று, படம் பார்க்கும் நமக்கு ரத்தம் வரும் வரை சண்டை போட்டுக்கொள்ளும் படங்களும் வரும் இந்தக் காலத்தில், நாம் மண்ணை நேசித்து, மிகவும் யதார்த்தமாக, என் இளமைப் பருவத்தில், என் கிராமத்தில் நான் பார்த்து ரசித்த, அந்த அழகை வெளிப்படுத்திய அந்த பெயர் தெரியாத அந்த “காந்தாரா” ஹீரோ வுக்கு ஒரு “சபாஷ்”

“வராஹ ரூபம்” – என்ற ஒரு பாடல் பிலஹரியிலும், பைரவியிலும், தோடியிலும், மிகவும் பிரபலமாகி நம்மை மயக்க, படமோ நம்மை நெகிழ வைக்கிறது

இந்தக் கட்டுரையை மூன்று பாகங்களாக பிரிக்கலாம்:

1. ஒன்று படம் நமக்குச் சொல்லும் பாடம்;

நிலம் (இயற்க்கை) சார்ந்த வாழ்க்கை நாம் வாழாமல் போனால், இயற்கை, (பெருமாள்) எப்படி வராஹ உருவம் (பன்றி) எடுத்து, அசுரரை அழித்தாரோ (ததோ), அதுபோல், வேறு ஒரு உருவம் கொண்டு நம்மை அழித்துவிடும் – இதுதான் காந்தாரா படத்தின் கதை.

நம் இயற்கை என்பது கடவுள் போட்ட பிச்சை. நாம் ஒவ்வொரு முறை இயற்கையை அழிக்கும்போது நம்மை எச்சரிக்கிறது. அப்படியும் நாம் உணரவில்லை என்றால்- சுனாமி தான்.....என்பதும் இந்தக் கதையில் சொல்ல வரும் முக்கியமான விஷயம்.

இந்தப் படம் முழுக்க ஆன்மீகப் (தெய்வ) படம் அல்ல. தேவர்களின் படமும் அல்ல. சிவ பெருமான் அனுப்பிய பூத கணங்கள், அய்யனார் வடிவில் வந்து நம்மையும, நம் நிலத்தையும் காப்பவர்கள். அதனால் நாம் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை, நிலத்திற்கும் கொடுப்போம். அந்த பூத கணங்களுக்கு மரியாதை செய்வது போல், கர்நாடகாவில்- “கோலா நடனம்’ என்று ஒன்று இன்றும் உண்டு. நம் கிராமத்தின் தெருக்கூத்து போல இருக்கும்.
நம்மூர் அய்யன்னாரிலேயே, பல வகை உண்டு, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ண சாமி போல. நல்ல அய்யனாரும் உண்டு, எதிர் மறையும் உண்டு. கர்நாடாகாவில், பஞ்ஜூரிலி, குலிகா – என்று இரண்டு தெய்வங்கள் பிரசித்தம், முதல் சாது, இரண்டாவது உக்ரமான சாமி’.

பஞ்ச பூதங்களை நாம் வணங்காவிட்டால் அது திருப்பி நம்மைத் தாக்கும்போது எங்கே செல்வோம் ? என்ற கருத்து தான் இந்தப் படம்.

படத்தின் கதையை, சில வரிகளில் சொல்லி விடலாம். தான் மிகவும் நேசித்த நிலத்தையும், அந்த நிலத்தை காலம் காலமாக காத்து வரும் “அய்யனாரையும்” பயந்து போற்றி வணங்கும் அந்த கிராமத்து மக்கள். கிராமத்தில் Forest ஆபிசர் வந்து, நிலத்தை அபகரிக்க முயல்கிறார், மறு புறம், அந்த கிராம ஜமீன்தார், நிலத்தை ஒரு புறம் அபகரிக்க முயல்கிறார். அந்த கிராமத்தில் உள்ள ஒரு ஹீரோ- வந்து அதற்க்கு ஒரு முடிவு கட்டுகிறார், அது எப்படி ? என்ன என்ப்துதான் ? - இது சினிமாத்தனமாக எடுத்திருந்தால், தெலுங்குப் படம் ரேஞ்சுக்குப் போயிருக்கும்.. யதார்த்தமாக, ஒரு துளி கூட சினிமாத்தனம் இல்லாமல், ஆன்மீக நெடியுடன் எடுக்கப்பட அற்புதமான படம்.

டைரக்டர் ஒரு பேட்டியில் “இந்த பட வெற்றிக்கு, இந்த படத்தில் உள்ள ஆன்மீகம் தான் காரணம்” என்றார். அதான் உண்மை.

இந்தப் படத்தில், காதை கிழிக்கிறாற்போல் ஒரு சத்தம் போடுவார், அந்த சத்தம் கேட்கும் வரை உள்ள நிலம் எனக்குச் சொந்தம் – என்று நிம்மதியையும் சந்தோஷத்தையும் தர வல்ல- எல்லை சாமி சொல்லுவது மாதிரி கதை போகிறது.
அந்த சத்ததை இப்போது நீங்கள் செய்ய முடியமா ? என்று ஒரு நிருபர் கேட்க, “அது இப்போதும் எங்கள் கிராமத்தில், புனிதமாக கருத்தப்படும் அந்த ஓசை, அது நாங்கள் வெளியில் சொல்லி, அந்த சப்தத்தின் புனித்ததை கெடுக்க விரும்பவில்லை” என்றார். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

“பூத காலா” நடனம் என்று இந்த படத்தில் ஒன்று வரும். ஒரு மாதிரி கதகளி நடனம் போன்று. அதிகமான மேக்கப் போட்டு, இந்த நடனம் பார்க்கும்போதே நமக்கு ஒரு தெய்வீக உணர்வு வரும். ஹீரோ ஒரு பேட்டியில் சொல்கிறார்- “இந்த உடையுடன் ஷூட்டிங் நடக்கும்போது நான் சாப்பிடவில்லை, ஏனெனில், இந்த வேடம், எங்கள் கிராமத்தில் பக்தியின் உச்சம்”

2. எனக்குத் தெரிந்த அய்யனார்:

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அய்யனார் மேல் மிக உயர்ந்த பக்தி, மரியாதை உண்டு. இந்தப் படத்தை பற்றி நான் நினைத்து எழுதும்போது, எனக்கு ஒரு ஆச்சர்யமான விஷயம் நடந்தது.

என் மனைவி ஆச்சர்யமாக சௌந்தர்யலஹரியில் மூன்றாவது ஸ்லோகத்தை எனக்குச் சொன்னாள். அது, “தம்ஶ்ட்றா முரரிபு வராஹஸ்ய பவதி” என்று “ஸம்ஸாரக் கடலில் மூழ்கியவனுக்கு, எப்படி, பூமியை, ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் தள்ளியபோது, நாராயணன்ன் வராஹ அவதாரம் எடுத்து, தனது தெற்றுப் பல்லால் மேலே கொண்டு வந்தாரோ, அப்படி அம்பாள் ரக்ஷிப்பாள்” என்கிறார்.

பூமித்தாயை போற்ற வேண்டும் என்பது என் சின்ன வயதிலேயே நான் கற்ற பாடம். எங்கள் கிராமத்தில், தைப்பொங்கல் பொது எங்கள் வயல் நிலத்திற்க்குச் சென்று நமஸ்காரம் செய்வோம். நெல் விதை தெளிப்பதற்க்கு முன்பு, ஆட்கள் நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் செய்வார்கள். சூர்ய வழிபாடு, பஞ்ச பூதங்கள் வழிபாடு என்பது நாம் வழி வழியாக வரும் வழக்கம். நானும் நிலத்தில் நமஸ்காரம் செய்திருக்கிறேன். கதிர் அறுத்து நெல் மூட்டை கட்டும், அந்த இடத்தில் நடக்கக் கூட மாட்டோம். அவ்வளவு மரியாதை.

செம்மங்குடியில் நான் குழந்தையாக இருந்தபோது, ஊருக்கு வெளியே காவல் தெய்வமாக இருக்கும் அய்யனார், மதுரை வீரன், கருப்பண்ண ஸ்வாமி போன்ற பல தெய்வங்களை பார்ப்பேன். சற்று தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில், ஒரு பெரிய குதிரையும், பெரிய யானையும் இருக்கும். பயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். என் தாத்தா, அந்தக் கோவிலின் வழியாக நடந்து போகும் பொது, செருப்பை கையில் எடுத்துக் கொண்டு நடப்பார். நாம் ஊரைக் காப்பாற்றும் தெய்வம் என்பதும், அம்மை போன்ற கொடும் வியாதிகள் வரும்போது, மந்திரிக்க நான் அந்தக் கோவில்
பூசாரியிடம் சென்று வீபூதி வாங்கி வருவேன்.

இதை விட ஆச்சர்யம் காஞ்சி மகா பெரியவா, செம்மங்குடிக்கு விஜயம் செய்த பொது, அவருக்கும், அம்மை போட்டி 3 மாதம் அங்கேயே தங்க நேர்ந்ததாம். அது அம்பாள் பிரசாதம் என்றாராம். இன்றும் செம்மங்குடி உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மகாமாயீ கோவில் கல்வெட்டில் இந்த விஷயத்தைப் பார்க்கலாம்.

செம்மங்குடியில், கரும்பாயிரம் ஸ்வாமி, மகமாயீ என்று எல்லை காவல் தெய்வங்கள் உண்டு. வருடா வருடம், அரிச்சந்த்ரா நாடகம் உண்டு. என் சித்தி சொல்லும்போது “ ஒரு முறை அரிச்சந்திர நாடகம் பதில், ராமர் நாடகம் போடப்பட்டபோது, கிராமத்தில், அம்மை நோய், மிகவும் உக்ரமாக தாக்க, சாமி வந்த பூசாரியிடம் கேட்க, நாடகத்தை மாத்தக் கூடாது என்று சொல்ல பிறகு அரிச்சந்த்ரா நாடகம் தான் வருடா வருடம் போட்டார்களாம்.

என்னுடைய குல தெய்வமான வரகூரில் உள்ள பெரமனார் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு. கேரளாவில் உள்ள ஒரு பெரியவர், மாந்த்ரீகம் தெரிந்தவர், அவர் கூடவே அய்யானாரை, நமது மந்த்ர பலத்தால் அழைத்து வர, அய்யனார் வரகூர் கிராமத்து எல்லையில் தங்கிவிட, அந்த பெரியவர் வரகூரில் தங்கியதாக சொல்வார்கள். இன்றும் அது காவல் தெய்வமாக அந்த கிராம மக்களை ரக்ஷித்து கொண்டு இருக்கிறார் என்பதும் உண்மை.

எருமைத்தலை அய்யனார் என்று சேங்காலிபுரத்தில் (குடவாசல் அருகே) ஒரு கோவில் உண்டு. ஆனந்தராம தீக்ஷிதர் “திரயம்பாக புராதீசம்” என்று ஒரு ஸ்லோகம் சொல்வார். அது இந்த அய்யனார் தான்.

கல்லில் செய்து, காவல் தெய்வமாக, இன்றும் மயிலாபூரில், முண்டககன்னியம்மன், இருக்கிறாள் என்பதும் உண்மைதானே. !

3. கொஞ்சம் அய்யப்பன்:

அய்யப்பன் ஒரு அவதாரமா, அல்லது அய்யனார் தான் அய்யப்பனா என்று பல கேள்விகள் எழுகிறது. ஏனென்றால். பாற்கடல் கடையும்போது, விஷ்ணு மோஹினி அவதாரமாக வந்த்தும். சிவபெருமானுக்கும், மோகினி அவதாரத்திருக்குமாய் பிறந்தவர் தான் சாஸ்தா- என்றாலும். இந்த சரித்திரம், ஸ்ரீ மத் பாகவத்தில் இல்லை.
பகவத்பாதாள், சிவ பாதாதி கேச ஸ்தோத்ரம் என்று ஒரு கிரந்தம் அருளிச் செய்து இருக்கிறார். அதில் ஆரம்ப ஸ்லோகத்தில் அய்யப்பனைப் பற்றி ஒரு ஸ்லோகம் வருகிறது. எனக்குத் தெரிந்து இதுதான் ஆதாரபூர்வமான அத்தாட்சி”

“ஆரூடப் பிரௌட வேக ப்ரவிஜிதபவனம் துங்க துங்கம் துரங்கம்.......மாமகீனே” – இதன் தமிழ் அர்த்தம் இப்படி இருக்குறது.

“மிகவும் உயரமான குதிரையில், ஆரோகணித்து, காற்றை விட வேகமாக செல்பவரும், கருப்பு வஸ்த்ரம் அணிந்து இருப்பவரும், கையில் வில், அம்பு, வேல் வைத்து இருப்பவருமான தர்ம சாஸ்தா, நம், மனதில், பொறாமை, காமம், லோபம் போன்ற பலவிதமான விஷ ஜந்துக்கள் இருந்து, பீதியக் கிளப்பும் இந்த நேரத்தில், என் மனதில் நிரந்தரமாக தங்கி இருந்து, இந்த விஷ ஜந்துக்களை வேட்டை ஆடட்டும்.” என்கிறார்

அய்யப்பன் தான் அய்யனார்.

இருந்தாலும் அய்யப்பனை தெய்வமாக பாவித்து, சபரிமலைக்குப் போகும்போது, திருச்சியில் உள்ள இரட்டை மலை அய்யனாருக்குச் சென்று, வணங்கி விட்டுச் செல்வதும், புது வருடம், திருச்சி, மேலூரில் உள்ள அய்யனாரை வணங்கி செல்வது, சர்வ சாதாரணமான ஒன்று.

சபரிமலை செல்லும்போது, கரிமலை இறக்கத்தில், பகவதிக்கென்று, (காளி) கல்லில் செய்து ஒரு சிலை வைத்திருப்பார்கள். அது கோவில் இல்லை. கோபுரம் இல்லை. போகிற போக்கில் கல்லோடு கல்லாக இருக்கும். அதற்கு நிறைய குங்கும், மஞ்சள் அர்ச்சனை செய்து, வழித்துணையாக வர வேண்டும் என்று வணங்கிச் செல்வார்கள். அய்யப்ப பக்தர்கள். – இதுவும் ஒரு பக்தி.

முடிவுரை:

சினிமா கடைசியில், ஹீரோ, வராஹ அவதாரம் (சாமி வருவது போல்) ஒன்று எடுத்து, எதிரியை த்வம்ஸம் பண்ணுவார் பாருங்கள்- எச்சிலைக் கூட முழுங்காமல் பார்த்தேன்.

இப்படி என் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஒரு கதையை, அழகாக காட்டிய இந்த நடிகருக்கு என் உளங்கனிந்த நன்றிகள்.

இந்தப் படம் நன்கு ஓடுவதில் இருந்தே எத்தனை பேர் இந்த அனுபவத்தை அடைந்து இருக்கிறார்கள் என்பது தான்.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

சஞ்சய் சுப்ரமண்யன் என்கிற “இசை அதிசயம்”

Post by grsastrigal »

தியாக ப்ரம்ஹ கான சபாவில் சஞ்சய் கச்சேரி. சில விஷயங்கள் அலுக்கவே அலுக்காது என்பதற்கு, பெரியவர்கள், கடல் அலை, யானை என்றெல்லாம் சொல்லுவார்கள். அதில் சஞ்சய் கச்சேரியை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். கால் பந்து ஃபைனல் – ஒரு புறம் சென்றுகொண்டிருக்க, இங்கு அருமையான இசையை தந்து கொண்டிருந்தார்.

பல முறை நான் இந்த கலைஞனைப் பற்றி எழுதி இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை நரசுஸ் காபி மாதிரி, நிறம், மணம், குணம் மாறாமல் சூடான இசையை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இவர் strict ஆ சில வரை முறைகளை வைத்து இருக்கிறார்.

இப்போது எல்லாம் கச்சேரி எப்படி என்றால், பக்க வாத்யக்காரர்கள், யார் வேணும் னாலும், எங்க வேணும்னாலும் உட்கார்ந்து கொள்ளலாம். வயலின் காரர், பாடுபவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். கடம் காரர் முன்னால், அப்படி...... இஷ்டத்துக்கு.

வயலின் காரர், பாடுபவரின் கண்ணை குத்துவது போல ஒரு முறை வாத்தியத்தை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார். பயந்தே போய் விட்டேன் !!

ஆனால், சஞ்சய் கசேரியில் அப்படி கிடையாது.

இரண்டாவது, டிரஸ் கோடு, இந்த குர்தா போடுவது, கலர் காலராக டிரஸ் போடுவது, மாடு முட்டிவிடுமோ என்று பயம் எல்லாம் வேண்டாம். இதெல்லாம் இங்கு கிடையாது. வெள்ளை டிரஸ் தான்.

விம்பிள்டன், கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் –டிரஸ் கோடு- இவையெல்லாம் நமக்கு தரும் பாடம் இது. எத்தனை விஷயங்கள் புதிது புதிது ஆக வந்தாலும், பழமை தான் நிலைத்து இருக்கும்.

அனாவசிய பேச்சு கிடையாது. மைக் சிஸ்டெம் சரியில்லை, “இத ஏத்து, இத குறை”- sharp வை.என்று அனாவசிய “பொங்கல்” கிடையாது.

சிஷ்யர்கள் புடை சூழ உட்காருவது, இரண்டு தம்பூரா, முன்னாடி எலக்ட்ரிக் தம்பூரா. 4 பாட்டு பாடுவதற்க்கு, 10 புஸ்தகம், மினி லேப்டாப்......அதை அடிக்கடி தடவி தடவி தள்ளுவது..... ..
ம்ஹூம்...

பழமை மாறாமல், சங்கீத மழை பொழியும் வித்தகர்.

எனக்கு கசேரியில், லேட் ஆக வருவது பிடிக்காது. கூடிய வரையில் முடியும் வரை இருப்பேன். பாதியில் எழுந்து செல்பவர்களைப் பார்த்தால் எனக்கு கோபம் வரும். அவர்களுக்கு, பசி இருக்கலாம். சுகர். இத்யாதி.

ஆனால் ஒரு நாளைக்கு இந்த அற்புதக் கலைஞனுக்காக தியாகம் செய்தால் தான் என்ன. ? ஒரு மூன்று மணி நேரம், ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்காமல், கடைசி பாட்டு வரை 100% அர்ப்பணிப்புடன் செய்யும் அற்புத பாடகர் – இவருக்காக நாம் செய்யும் மரியாதை உட்கார்ந்து இருப்பதுதான். – என்பது என் எண்ணம்.

முதலில் இந்தக் கச்சேரியில், மோர்சிங் வாசித்த பாக்யலக்ஷ்மி கிருஷ்ணா அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் பக்க வாத்யம் வாசித்த கச்சேரிகளை நான் கேட்டதே இல்லை. இப்போது தான் முதல் முறை. மோர்சிங் வாத்யமே அரிதாகி விட்ட இந்த காலத்தில், ஒரு பெண்மணி, கடினமான இந்த வாத்யத்தை சிறப்பாக வாசித்து, அதுவும் தனி ஆவர்தனத்தில், பின்னினார். மிக அழகாக இருத்தது. அவருடைய கச்சேரிகளை “மிஸ்” பண்ணிவிட்டேனே என்று மிகவும் வருத்தப்பட்டேன்.

நான் தாளத்தில் expert கிடையாது. தனி ஆவர்த்தனதை சுமாராகத்தான் ரசிப்பேன். ஆனால் என் கண்ணையும், காதையும் எடுக்க விடாமல் செய்த அந்த பெண்மணிக்கு, இதயம் கனிந்த வாழ்துக்கள்.
மோர்சிங் வாசிப்பவர்கள், முகத்தை குனிய முடியாது. பாடுபவரோரோ, மிருதங்க காராரோடு போடும் தாளத்தை பார்க்க முடியாது. வாயில்வைத்து வாசிக்கும்போது நாக்கு காயப் படக் கூட வாய்ப்பு உண்டு. ஒரு பெண்மணி இதை வாசிப்பதற்க்கு ஒரு தைர்யம் வேண்டும்.

பக்க வாத்யம் வாசிக்கும் பெண்மணிகளுக்கு சில சங்கடங்கள் உண்டு. கச்சேரி ரசித்தாலும், சிரிக்கவோ, பேஷ் என்று சொல்லவோ முடியாது. சிரித்தாலும் சங்கடம், சோகமாக உட்கார்ந்தாலும் சங்கடம். ஆனால் அவர் அமைதியாக உட்கார்ந்து அப்பப்போ ஒரு புன் சிரிப்புதான். அவர் முகத்தில் ஒரு தெய்வீக அழகு இருந்தது.

மோர்சிங் வாசிக்கும் குடும்பத்தில் வந்தவர் போலும். வாழ்க அவரின் சங்கீதம்.

கர்நாடக சங்கீதம் என்பது ஒரு அதிசயம். அரியக்குடி காலத்தில் இருந்து, இன்று முளைத்து இரண்டு இலை விடும் பாடகர்கள் வரை, தோடியையும்,, பைரவியையும் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நமக்கு அலுப்பதே இல்லை.

சஞ்சய் என்ன பாட்டு என்று நாம் யூகிக்க விடுவதில்லை. அவருடைய முக நூலில் எழுதி விடுகிறார். இருந்தாலும்

பாடல் லிஸ்ட்:

வாரண முகவா- ஹம்ஸத்வனி – பாபநாசம் சிவன் – நிரவல்- “முன்னவனே நீ முன் நின்றால், முடியாதது ஒன்றுமில்லை”- ஸ்வரம்

ச ரி க ப நீ..... முடியாதது ஒன்றுமில்லை என்று வரதராஜனையும், நெய்வேலி வெங்கடேஷையும் கையை காட்டி ஒரு ஸ்வரம்... “நீங்கள்” முடியாதது ஒன்றுமில்லை என்று ரசிகர்களைப் பார்த்து. ஒரு ஸ்வரம் பாடினார்.

கச்சேரி களை கட்டிவிட்டது:

இரண்டாவதாக பௌளி ராகத்தை கொஞ்சம் காட்டி. “பார்வதி நாயக பாஹிமாம்” என்ற ஸ்வாதி திருநாள் கிருதியை எடுத்து பாடினார். 3 சரணங்கள் கொண்ட அற்புதமான பாடல். “பானு ஷஷி” என்ற இரண்டாவது சரணத்தை எடுத்து உருகி பாடினார்.

மூன்றாவதாக, கானடா ராகத்தை எடுத்து, பாடிவிட்டு, “காந்திமதி அன்னை நீ கதி” என்ற பாபநாசம் சிவன் அவர்களை பாடினார். இந்தப் பாடல், நெல்லை கோவிலைச் சுற்றியும், தாமிரபரணியயும், அழகாகச் சொல்லி இருப்பார். கானடா ராகத்தில் ஒரு 5 பாடல்களை எடுத்தால், அதில் ஒன்று இந்தப் பாட்டு என் லிஸ்ட் ல் நிச்சயம் வரும். கும்ப முனி என்றால் அகத்தியர் என்று நினைக்கிறேன்.

பூர்ணசந்த்ரிகா ராகம் கொஞ்சம் கோடி காட்டி- ஜி‌என்‌பி அவர்களின் “வரத நிபுண” பாடினார்

“கள பேடா, கொள பேடா” என்று அவரே கோபிகாதிலகம் ராகத்தில் அமைந்த பாடல் ஒன்று பாடினார். கேட்பதற்க்கு கொஞ்சம் பயமாக இருந்தது.

தோடி நான் நினைத்தபடி அமையவில்லை. வயதாகிறது சஞ்சய்க்கு- என்று புரிந்தது. ராகத்தில் மேலே கொஞ்சம் கஷ்டப்பட்டார். வரது அதை வயலினில் சரி கட்டினார். தியாகராஜரின் “சேசினதெல்ல மரசிதிவோ ஓ ராம ராம”. அருமையான பாட்டு. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்னி எடுத்தார். எவ்வளவு முறை தோடியைக் கேட்டாலும் அலுக்காது.

ராகம் தாளம் பல்லவி - நா.கு. ஆலத்தூர் சகோதரர்கள், அந்தக் காலத்திலேயே பாடி பிரபலப் படுத்திய – “எங்களது நாட்டை குறிஞ்சி என்பார்” பல்லவியை தூசி தட்டி பாடினார். இதை டி.என் சேஷகோபாலன், நாட்டை, குறிஞ்சி, நாட்டை குறிஞ்சி என்று 3 ராகத்தில் பாடிஒரு காசெட் வெளியீட்டு, அது போடு போடு என்று போட்டது. சேஷூ சங்கீதம் எல்லாம், குறிஞ்சி மலர் போல.

துர்காவையும், சிந்து பைரவியையும் பல்லவியோடு வருடி முடித்தார். முதலில் பாடிய ராகம் என்னவென்று தெரியவில்லை.

ஸ்ரீ. வேணுகோபால என்ற மன்னார்குடி ராஜகோபால் ஸ்வாமி மேல் தீக்ஷிதர் எழுதிய பாடலை பாடினார். இதில் தீக்ஷிதர் குறிஞ்சி ராகத்தை மிகவும் லாவகமாக பாடலின் உள்ளே நுழைத்து இருப்பார். “ஸ்ரீ குரஞ்சித காம ஸ்ரித சத்யபாம” – இதன் அர்த்தம் “ஸ்ரீதேவி பூமிதேவி அவர்களால் மனம் குளிர விரும்பப்படுகிறவன், சத்யபாமையினால் ஆஸ்ரயிக்கப் பட்டவன்”- மிகவும் அழகு. எனக்கு ஏனோ சந்தானம் பாடிய “கிஷீராப்தி கன்னிகே, ஸ்ரீ மகாலக்ஷ்மி” என்ற குறிஞ்சி (ராக மாலிகை) பாட்டு நினைவுக்கு வந்தது

பண் படுதல். பண் பாடுதல்

இந்த வருடம் சங்கீத கலாநிதி விருது பெறும், நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் தன்னுடைய நன்றியுரையில் “பண் படுதல், பண் பாடுதல்’ இரண்டும் ஒன்று என்று சொன்னார். நான் மிகவும் ஆச்சர்யப்பட்ட வார்த்தை இது. பண் பாடினால் மனது பண் படுமா ? இல்லை எப்போதெல்லாம் மனது பண் படும். என்ற ஒரு கேள்வி எழுப்பினால், என் பதில் படும்...... சிலரின் சங்கீதம் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தும்.

எனக்கு, ஒரு மதுரை சோமு, மதுரை மணி அய்யர், மகாராஜபுரம் சந்தானம், இப்போது சஞ்சய். இவர்கள் இசை கேட்கும்போது.

கண்ணதாசன், சர்வர் சுந்தரம் படத்தில் “தத்தை நெஞ்சம் பாடலில், பண் பட்டதா ? இல்லையா ? என்ற ஒரு கேள்வி எழுப்பி இருப்பார். பாட்டை கேளுங்கள்.

பிறகு எத்தனை கோடி இன்பம் வைத்தாய்- என்ற பாரதியாரின் தேஷ் ராகப் பாடல். இதை ராஜகுமார் பாரதி ஒரு தடவை இதே ராகத்தில் பாடி கேட்டு இருக்கிறேன்.

திருமழிசை பிரான் எழுதிய பாசுரம் “ஊனின் மேய ஆவி நீ. உறக்கமோடு உணர்ச்சி நீ -பாடி ராமனை பஜித்தால் என்ற மாண்ட் ராகப் பாடலோடு, “பவமான” சொல்லி முடித்தார்.

கடைசியாக"

“கமர்ஷியல்” ஆக சஞ்சய் போய் விட்டார் என்று ஒரு சாரார் பேசுகிறார்கள்.

சித் ஸ்ரீராம் க்கு, செம்மங்குடிக்கும், மணி அய்யருக்கும் வாசித்த, உமையாள்புரம் சிவராமன் வாசிப்பது, எதில் சேர்த்தி. ஆத்மார்த்தமா, கமர்சியலா....... இப்படியெல்லாம் ஒரு புறம் சீரழிந்து கொண்டிருக்கும் கர்நாடக சங்கீதத்திற்க்கு நடுவே, சஞ்சய் மாதிரி “ரசிகர்கள் சம்ப்ரதாயமான நல்ல இசையைத்தான் விரும்புவார்கள்”, என்று ஆணித்தரமாக நம்பி, கச்சேரி செய்யும் இவர், எனக்கு அதிசயம் தான்.

எனக்கு என்ன ஆசை என்றால், சஞ்சய் ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரி, மதுரை சோமு மாதிரி பண்ண வேண்டும். அவர்தான் பண்ண முடியும். கடைசி வரை எழுந்து போகாத ரசிகர் கூட்டம் அவரிடம் தான் இருக்கிறது.

rajeshnat
Posts: 9906
Joined: 03 Feb 2010, 08:04

Re: என் எண்ணங்கள்

Post by rajeshnat »

Beautifully written grs. Your thamizh is so crisp. If possible do write for others too in thamizh.

Vanimahal must have given 3 hours atleast for this concert.

In ngs karthik fine arts he started 5 mins before itself which is nice. Sound adjustments are done by battery of folks....all said professionalism of starting on dot time is lovely......

Post Reply