நாராயணீயம் - தசகம் 55 - காளிங்க நர்த்தனம் - தமிழாக்கம்

Post Reply
prabhu53
Posts: 134
Joined: 04 Jun 2020, 00:07

நாராயணீயம் - தசகம் 55 - காளிங்க நர்த்தனம் - தமிழாக்கம்

Post by prabhu53 »

நாராயணீயம் - தசகம் 55 - காளிங்க நர்த்தனம்


நதிவாழ் நச்சுடை நாகம்தனை வெருட்டிட உறுதியிட்டு
நச்சுக்காற்றினால் நதிக்கரையில் நலிந்து மக்கிய இலையுடை
கதம்ப மரம் ஏறினான் எந்தன் மாயக்கண்ணன்

கொழுந்திலைத்தளிரென ஒளிமிகு கமலமலர்ப் பாதமுடன்
காழ் மர உச்சிக்கொம்பேறி எழும்பித் குதித்து
சுழிர்நிறை நதியில் வெகுஆழம் சென்றான் பாலகிருஷ்ணன்

மூவுலகுச்சுமைதாங்கும் முகுந்தன் முக்குளித்ததும்
முழுநீரும் சுழன்று பொங்கி ஆர்பரிக்கும் ஓசையுடனே
மூழ்கடித்தே நதிக்கரையை நூறுவில் அம்புசெல் தூரம்

ஆழ்சுழி நீர் பொங்கி எட்டுத்திக்கும் கரைபுரண்டோட
ஆர்ப்பரிக்கும் ஒசைகேட்டு எழு அரவரசன் காளிங்கன்
அடைந்திட்டான் நிலைகலங்கி சீற்றமுடன் கடுஞ்சினம்

முகடுபல நிறை கருமலைத் தொடரென பன்னாயிரம் படம்எடுத்து
திரள்வந்திழியுஞ்சாரலென அனல்மிகு தீப்பிழம்புடன் விடநீரும் கக்கும் சினமிகு காளிங்கனை முன்நின்று கண்டான் மாயவன்

கண்கள் அனல்கக்க கொடுவிடக்காற்று வெளிமூச்சாய்வர
கடும்வெப்பம் சூழ கடித்திட்டான் காளிங்கன்! கடுவிடம் பயனற்றிடவே,
மறுகனம் சிக்கெனப்பற்றி சுற்றிவளைத்தான் சின்னக்கண்ணனை

கண்ணனைக் காணாமல் கடுந்துயர் கொண்டு
ஆநிரையும் ஆயர்ரபாலகரும் நதிக்கரை சென்றனர்
ஆயர்பாடியில் இழிசகுனம் பலகண்டு
ஆயரும் விரைந்தனர் யமுனை நதி நோக்கி

மாயவனைக் காணாமல் மாளாத்துயர் கொண்டு
மாண்டிடுவோமென மக்கள் உறுதியிட்ட நேரம்தனில்
மின்னலென அரவுப்பிடிவிடுத்து குறுநகைதனை கொண்டு
யமுனைநீர் உள்ளிருந்து உதயமானான் மேகவண்ணன்

சின்னஞ்சிறுபதங்களின் சிலம்பொலியுடனே
கைவளை காப்புகள் குலுங்கொலி கலந்து
அழகிய மென்மலர் பாதகங்களுடன்
நாக மகுடமேறி நாட்டியம் ஆடினான் நாராயணன்.

ஆயர்குழாம் ஆனந்தநடனமாடி, முனியோர் கரியவனின் துதிபாடி,
விண்ணோர் மலர் சொரிந்து, மகிழ்ந்தனரே அந்நடனம் கண்டு!
என்னுள் உறைமாளாத் துயர்நீக்கி அருள்வாயே குருவாயூரப்பனே!


Post Reply