NAARAAYANEEYAM- VAAMANA AVATHAARAM AND MAHAABALI

Post Reply
RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

NAARAAYANEEYAM- VAAMANA AVATHAARAM AND MAHAABALI

Post by RSR »

30-1
பரந்த மனம் கொண்ட மகிமை மிக்க மஹாபலி சக்கரவர்த்தி ( பக்த பிரகலாதனின் வம்சத்தில் உதித்தவன்), இந்திரனுடன் நடந்த யுத்தத்தில் உயிர் இழக்க நேர்ந்தாலும், அவனது குரு சுக்ராச்சார்யரின் சஞ்சீவினி என்ற சிகிச்சையால், மீண்டும் உயிர் பெற்றான். பின்னர் ' விஸ்வஜித்'என்ற பெரும் யாகம் செய்து, மிகுந்த ஆற்றல் பெற்றான். தேவர்கள் அனைவரும் தோல்வியுற்று , ஒளிந்து கொண்டனர்
.
30-2
தேவர்களின் தாயாராகிய அதிதி தேவி, இதனால் துயருற்று தனது கணவர் காஷ்யபரிடம் முறையிட்டாள். அவர் அறிவுரைப்படி,
' பயோவ்ரதம்' என்ற பூஜையை பன்னிரண்டு நாட்கள் இடைவிடாது செய்தாள் .

30-3
அந்த விரத பூஜையின் முடிவில், தங்கள் பக்தையான அதிதிக்கு, பகவான் மஹாவிஷ்ணு, ஷ்யாமள வண்ணமும், நான்கு திருக்கைகளும் கொண்டு , தர்சனம் தந்து அருளினார். அப்போது ' நான் உனக்கு மகனாகப் பிறந்து உனது மனக்குறையை நீக்குகிறேன்' ஆனால், இதைப்பற்றி நீ யாருடனும் கூறாமல் ரஹஸ்யம் காக்கவேண்டும் ' என்று கூறி மறைந்தார்.

30-4
அவ்வாறே ஸ்ரீ ஹரியானவர், காஸ்யபருக்கும் அதிதிக்கும், புதல்வனாக அவதரித்தார். பிரமதேவர் துதிக்க, சங்கு சக்ரம் முதலிய தெய்வ அம்சங்களுடன், ஒரு வளர்பிறை துவாதசியும் திருவோணமும் கூடிய நன்னாளில் அதிதி குழந்தையை ஈன்றெடுத்தாள்.

30-5
தேவகணங்கள் ஆனந்தம் பொங்க முரசினை முழங்கிக்கொண்டு, புண்ணியம் மிக்க அந்த ஆஸ்ரமத்தில் மலர்மாரி பொழிந்தனர். தாயும் தந்தையும் கைகூப்பி 'ஜய -ஜய ' என துதிக்க , அதே நொடியில், அழகு மிக்க ப்ரம்மச்சாரியின் வடிவெடுத்தார் ஸ்ரீ ஹரி!

30-6
அப்போது தந்தை காச்யபர், அந்த பிரம்மச்சாரிக்கு உபநயனம் செய்து வைத்தார் புல்லால் செய்யப்பட மேகலை, மான் தோல் ,
ருத்ராக்ஷ மாலை , கங்கணம் முதலியவற்றை அணிந்து கொண்டு , அக்னி பூஜை செய்துவிட்டு, ஒளி வீசும் தேஹத்துடன், அந்த வாமனர் , மஹாபலிச் சக்கரவர்த்தி, அஸ்வமேத யாகம் நடத்திக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து தோன்றினார்.

30-7
விரைவில் நிகழவிருந்த விஸ்வரூபம் பற்றிய முன்னோடியாக,
அவர் நடக்கையில், பூமியும் அதற்கேற்ப அசைந்தது. பகைவர்களின் வெம்மையை மறைக்கும் விதமாக குடை அமைந்தது. அசுரர்களைத் தண்டிக்கும் வண்ணமாக கையில் ஒரு கோலும் கொண்டு அந்த வாமன மூர்த்தி அஸ்வ மேத யாக சாலைக்கு சென்றார்.

30-8
நர்மதை நதியின் வடகரையில் இருந்த யாகசாலையை வாமனர் அடைந்தபோது, அவரது .தேஜோமயமான தோற்றத்தைக் கண்டு,
சுக்ராச்சார்யர் போன்றோர் ' இவர் யாராக இருக்கும்! ஸூர்யனா? அக்னிதேவதையா? யோகி ஸநத்குமாரரா ? ' என்று வியந்தனர்.

30-9
பெரியவர்கள் அனைவரும், இவ்வாறு வாமனரை வரவேற்பது கண்டு, மஹாபலி சக்கரவர்த்தி, வாமன மூர்த்தியின் பாத கமலங்களை நீர் கொண்டு கழுவி, அந்த நீரை தனது சிரசில் தெளித்துக்
கொண்டான்.

30-10
அசுரர் குலத்தில் பிறந்தாலும், ஸ்ரீ ஹரியின் ஸ்ரீபாத தீர்த்தம் , தனது தலையில் பட, அந்த மஹாபலி என்ன தவம் செய்திருப்பான்? சிவபெருமான் கூட தனது சிரசில் வைத்துக் கொண்டாடத்தக்க அந்த ஸ்ரீ பாத தீர்த்த பாக்கியம் , அவன் பிரகலாதனின் வம்சத்தில் வந்தவன் என்பதாலா ? அல்லது வேள்விகள் பல செய்ததாலா? அல்லது சிறந்த
ஞானிகளுக்கு சேவை செய்ததாலா? .. யான் அறியேன்!
குருவாயூரப்பா , என்னைக் காத்தருள வேண்டும்.

.




மஹாபலி சக்கரவர்த்தி
( தசாகம் -31)
-----------------------
31-1
வாமன ரூபத்தில், ஸ்ரீ ஹரியின் அற்புத ஒளியைக் கண்டு, மிகவும் பக்தி கொண்ட மஹாபலி, இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, ' அந்தணச் சிறுவனே! நான் உனக்கு , நீ வேண்டும் எதையும் தானம் அளிக்க விழைகிறேன். உனக்கு நான் தரக்கூடியது எது வேண்டும்? அன்னமா? வீடா? நிலமா? அல்லது இவை எல்லாமுமா? எதுவானாலும் கேள். தருகிறேன்.' என்று கூறினான்.

31-2
வாமனர் அப்போது, மகாபலியின் குல விசேஷத்தைப் புகழ்ந்து பேசிவிட்டு, ' ராஜனே! எனக்கு நீ என்னுடைய சிற்றடி மூலம் மூன்றடி நிலம் மட்டும் தந்தால் போதும், ' என்று கேட்டார்.

31-3
அது கேட்டு வியப்புற்ற மஹாபலிச் சக்கரவர்த்தி, ' குழந்தாய்! நீ இந்த உலகனைத்தையும் கேட்டாலும் என்னால் தர இயலுமே ! மூன்று சிற்றடி நிலத்தை வைத்து நீ என்ன செய்யக்க்கூடும்? ' என்று வினவினான். எவ்வளவோ சிறந்த குண நலன்கள் கொண்டிருந்தாலும், மஹாபலி தனது பராக்கிரம செல்வம் குறித்து பெருமை கொண்டு இவ்வாறு கூறினான்.

31-4
வாமன மூர்த்தி அப்போது. 'மூன்றடி மண்ணால் திருப்தி அடையாதவன், மூவுலகம் முழுதும் பெற்றாலும் மன நிறைவு பெற மாட்டான்' என்று கூறியதும், ' சரி! உன் இஷ்டம்' என்று கூறி , மஹாபலி நீர் தாரை வார்த்து வாமனர் வேண்டியபடியே தானம் செய்ய தயாரானான். அப்போது, அருகில் இருந்த குரு சுக்ராச்சாரியார், மஹாபலியைத் தடுத்து, 'வேண்டாம்! வேண்டாம்! இந்த வாமன பிரம்மச்சாரி ஸ்ரீ ஹரி என்று தோன்றுகிறது.
அனைத்தயும் கவர்ந்து கொள்வான்.' என்று எச்சரித்தார்.

31-5
' அப்படியே இருக்கட்டுமே! பகவான் மகாவிஷ்ணுவே இவ்வாறு ஒரு பிரமச்சாரி பாலகனாக வந்து, என்னிடம் தானம் பெற நான் பெரும் பேறு பெற்றவன்! கொடுத்த வாக்கிலிருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன்'என்று கூறினான்! அவன் தங்கள் பக்தனல்லவா!

31-5
அசுர குல அதிபதியான மஹாபலிச் சக்கரவர்த்தி இவ்வாறு வாமன மூர்த்திக்கு தானம் செய்தபோது, தேவர்களும், முனிவர்களும், மலர்மாரி பொழிந்தனர். உலகோர் அனைவரும் காண, அந்த வாமன உருவம் மேலும் மேலும் மேலும் உயர்ந்து, மண்ணையும் விண்ணையும் அடக்கிக் கொண்டது.

31-7
தாமரை மலரில் தோன்றிய பிரமதேவர்,தனது சத்ய லோகத்தை
அடைந்த மஹாவிஷ்ணுவின் பாத கமலத்தை கமண்டல நீரால்
அபிஷேகம் செய்தார். அந்த நீர் ஆகாச கங்கை என புகழ் பெற்று வையமனைத்தயும் புனிதமுறச் செய்தது. விண்ணவர் அனைவரும் பலபடியாக ஆனந்த நடனம் ஆடினர் இந்தப் பெரு விழாவில், ஜாம்பவான், ஜயபேரிகை முழக்கிக் கொண்டு உலகைச் சுற்றி வந்தார்.

31-7
அப்போது தங்களது தலைவன் மஹாபலி வழி நடத்தாமலேயே அசுரர்கள், தேவர்களுடன் சமர் புரிந்து தோல்வியுற்றனர்.
அதை அறிந்த மஹாபலி, ' எந்த பகவானின் அருளால், நாம் முன்பு வெற்றி கண்டோமோ , அதே பகவான், இப்போது எதிர் தரப்பில் உள்ளார். இவ்வாறிருக்க நாம் சமர் செய்து என்ன பயன்' என்று கூறியவுடன், அசுரர்கள் அனைவரும் பாதாள லோகம் சென்றடைந்தனர்.

31-9
அப்போது கருட பகவான் , 'வர்ண பாசம்' என்று மந்திரம் கொண்டு, மகாபலியின் உடலைப் பிணித்தான். ஸ்ரீ ஹரியானவர் ' ராஜனே ! எனது ஒரு காலடியால், இந்த மண்ணையும், இன்னொரு காலடியால், விண்ணையும் . அளந்து விட்டேன்! நீ தானம் அளித்த மூன்றாவது அடியை நான் எங்கே வைக்கட்டும்? ' என்று கேட்டார். அப்போது மகா தர்மவானான மஹாபலி, ' விஸ்வரூப வாமன ஸ்வாமியே! தங்களது அந்த மூன்றாவது திருவடியை எனது சிரசில் வைத்து அனுக்கிரஹம் செய்யுங்கள் ' என்று பணிந்து, தனது தலையில் மஹாவிஷ்ணுவின் வாமனாவதார விஸ்வரூப பாதகமலத்தை ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக பாதாள லோகம் சென்றான். அங்கு வந்து இந்த அற்புத காட்சியைக் கண்ட பிரஹலாதன், தனது சந்த்தியில் வந்த மஹாபலி பற்றி பெருமை கொண்டு , ஸ்ரீ ஹரியின் பெருமைதனை புகழ்ந்து ஸ்தோத்ரம் செய்து மகிழ்ந்தான்.

31-10
' மஹாபலி சக்ரவர்த்தியே! நீ எனக்கு என்றும் பிரியமானவன்தான். நல்ல புண்ணிய காரியங்களினால், ஒரு சித்தனாக மாறிவிட்டாய்! ஸ்வர்கத்திற்கும் மேலான புண்ணிய உலகம் உனக்கு கிட்டும். அதன் பின்னர் என்னிடம் சாயுஜ்ய பதவியும் அடைவாய். ' என்று ஸ்ரீ ஹரி , மஹாபலிக்கு அனுக்கிரஹம் செய்தார்.

Post Reply