Sanjay in Navarathri Mandapam

Post Reply
kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Sanjay in Navarathri Mandapam

Post by kvchellappa »

From FB:
By Anuradha Kannnan who went from Chennai to Thiruvananthapuram for the concert:

Navarathri Mandapam Concert - 2017 - Sri Sanjay Subrahmanyan
ANURADHA KANNAN·TUESDAY, SEPTEMBER 26, 2017
Vocal : Sri Sanjay Subrahmanyan
Violin : Sri S Varadarajan
Mridangam : Nanjil Sri S Arul
Ghatam : Perukkavu Sri P L Sudheer

திருவனந்தபுரம்... தென்னையும், பாக்கும், பார்க்கும் இடமெங்கும் பசுமையும் நிறைந்த கேரள மாநிலத்தின் தலைநகரம். அந்நாளில் சேர நாடு என்ற பெயருடன் 'பத்மநாப தாசன்' என்ற அடைமொழியைக் கொண்ட சேர மன்னர்களால் ஆளப்பெற்ற தேசம். இன்றும் ராஜ வம்சத்தை சேர்ந்த சந்ததியினர், அரண்மனையில், மக்களின் நலனுக்குக்காக ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியை ப்ரார்தித்தபடி வாழ்ந்து வருகின்றனர்.

பொதுவாக கேரளத்தில் நவராத்திரி என்பது துர்காஷ்டமி, மஹாநவமி மற்றும் விஜயதசமி ஆகிய கடைசி மூன்று தினங்களே கொண்டாடப்படுகிறது. இது தேவி ஸரஸ்வதியை துதிக்கும் விதமாகவும், விஜய தசமி வித்தைகளை கற்க ஆரம்பிக்க ஹேதுவான தினமாகவும் கருதப்படுகிறது. ஆனால் திருவனந்தபுரத்தில் இது ஒரு முக்கியமான திருநாளாக ஒன்பது நாளும் கொண்டாடப்படுகிறது. இதன் பின்னே ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திர நிகழ்வு உண்டு...

சேர அரசர் ஒருவர் கவிச்சக்ரவர்த்தி கம்பரின் சீடராக இருந்தார். அவரின் கலையார்வத்தினால் கவரப்பட்ட கம்பர், அவருக்கு ஒரு ஸரஸ்வதி விக்ரஹத்தை வழங்கினார் - கூடவே நவராத்திரி ஒன்பது நாளும் அந்த தேவியை பூஜிக்க வேண்டும் என்ற வாக்கையும் பெற்றுக்கொண்டார். அன்று முதல் அன்றைய சேர நாட்டின் தலைநகரான பத்மநாபபுரத்து அரண்மனையில் அந்த தேவியின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வந்தது. 1835 ஆம் ஆண்டு, மஹாராஜா ஸ்வாதித்திருநாள் தன்னுடைய புதிய தலைநகரமான திருவநந்தபுரத்து அரண்மனையில் நவராத்திரி மண்டபத்தை நிர்மாணித்து, அங்கு அந்த ஒன்பது நாளும் பூஜைகள் நடத்தத் தொடங்கினார்.

நவராத்திரி தொடங்குவதற்கு முன் கோலாகலமான புறப்பாட்டுடன் தேவியின் விக்ரஹம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்டு திருவனந்தபுரம் அரண்மனையின் நவராத்திரி பூஜாமண்டபத்தில் வைக்கப்படும். அங்கு ஒன்பது நாளும் ஸ்வாதித்திருநாள் மஹாராஜாவால் இயற்றப்பட்ட நவராத்திரி க்ருதிகளை அவரால் நியமிக்கப்பட்ட 'முல்லமூடு பாகவதர்கள்' அந்தந்த நாளுக்கான க்ருதிகளை பாடி தேவியை வழிபடுவர். விஜயதசமிக்கு பிறகு தேவியின் விக்ரஹம் மீண்டும் பத்மநாபபுரத்து அரண்மனையை சென்று அடையும். இந்த வழக்கம் இன்றளவும் ராஜவம்சத்தவரால் கடைபிடிக்கப்படுகிறது. ஒன்பது நாளும் கர்நாடக சங்கீதத்தில் கைதேர்ந்த இசைக்கலைஞர்கள் இந்த மண்டபத்தில் அமர்ந்து ஸ்வாதித்திருநாள் மஹாராஜாவின் க்ருதிகளையும், குறிப்பாக அந்த நாளுக்கான நவராத்திரி க்ருதியையும் பாடுகின்றனர்.

நவராத்திரி நான்காம் நாள்.... மாலை நாலரை மணிக்கு நீண்ட நெடு வரிசையில் நின்று மண்டபத்தின் உள்ளே நுழைந்தோம். வாழைத்தார்களும், இளநீர் குலைகளும் கட்டப்பட்டு, பூக்களாலும், வெட்டிவேர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், சந்நிதியின் உள்ளே முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிம்மாசனத்தில் சிறிய மூர்த்தியாக நடுவே அமர்ந்திருந்தாள் சகல வித்தைகளுக்கும் அதிபதியான தேவி ஸரஸ்வதி. மாலை ஐந்து மணியுடன் தரிசன நேரம் முடிய, ஐந்தரை மணிக்கு 'முல்லமூடு பாகவதர்களின்' சங்கீதம் தொடங்கியது.

பொதுவாக ஸாவேரி ராகத்தில் அமைந்த பரிபாஹி கணாதிப மற்றும் நாட்டை ராகத்தில் அமைந்த ஜய தேவகி கிஷோர போன்ற ஸ்வாதித்திருநாள் மஹாராஜாவின் கீர்த்தனைகளை மட்டும் பாடும் வழக்கத்தை கடைபிடிக்கும் இவர்கள் அன்னமாச்சாரியார் இயற்றிய நாராயணதே நமோ நமோ என்ற கீர்த்தனையையும் மத்யமாவதி ராகத்தில் பாடுகின்றனர். இது ஸ்வாதித்திருநாள் மஹாராஜாவின் ஆசைப்படி அன்றுமுதல் இன்றுவரை தொடர்வதாக அறிந்துகொண்டோம்.

சரியாக மாலை ஆறு மணிக்கு தொடங்கியது திரு. சஞ்சய் அவர்களின் கச்சேரி. முதலாவதாக வனஜாஷா என்ற ஸாவேரி ராக அடதாள வர்ணம். ஸ்வாதித்திருநாள் பல அரிய ராகங்களில் ஆதி தாளம், அடதாளம் மற்றும் பத வர்ணங்களை இயற்றியுள்ளார். ஒவ்வொரு முறையும் அவற்றிலிருந்து புதியதாக ஒரு வர்ணத்தை எடுத்து பாடுவது சஞ்சய் அவர்களின் தனிச்சிறப்பு. சஞ்சய் அவர்கள் இந்த ஸாவேரி வர்ணத்தை மிகவும் அழகானதொரு காலப்ரமாணத்தில் பாடினார். குறிப்பாக ஸ்வரங்களை பாடிய பொழுது, அவர் அனுஸ்வரங்களை கையாண்ட விதம் அலாதியான அழகு. குழைந்து குழைந்து அவர் ஸ்வரங்களைப்பாட, அந்த அந்தி மயங்கும் வேளையில் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஒரு மோனநிலைக்கு சென்றனர்.

தொடர்ந்தது ஜய ஜய பத்மநாப என்ற மணிரங்கு ராக க்ருதி. அந்த க்ருதியில் ஜயக்ருபா பரித்த என்ற வரியில் தான் எத்தனை சங்கதிகள். ஒவ்வொன்றாக விதம்விதமாக அவர் பாட, சபாஷ் சபாஷ் என்று தலையாட்டிய வண்ணம் வரதராஜன் அதற்கு மெருகு சேர்த்தார். க்ருதியை தொடர்ந்து ஜய ஜய பத்மநாப என்ற இடத்தில் ஸ்வரம். ஒவ்வொரு முறையும் ஸ்வரம் பாடி முடித்தவுடன் ஜய ஜய பத்மநாபா என்று நிறுத்திய விதம் தனி அழகு.

அடுத்ததாக பேகடா ராக ஆலாபனை. அற்புதம், பிரமாதம் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த ஆலாபனை. Plain swarms என்று சொல்லக்கூடிய அசைவற்ற நேர் ஸ்வரங்களை பயன்படுத்தி ஒரு ராக ஆலாபனையை எப்படி மேம்படுத்த முடியும் என்பதை சஞ்சய் அவர்களிடமிருந்து தான் கற்க வேண்டும். அத்தனை அழகு. ஒரு பட்டை தீட்டப்படாத வைரத்தை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பட்டை தீட்டி அதை மெருகேற்றும் லாவகம் அந்த ஆலாபனையில். எந்த இடத்தில் எத்தனை அழுத்தம் குடுக்க வேண்டுமோ, அத்தனை அழுத்தம், அத்தனை லாவகம். ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒரு சபாஷ் விழுந்து கொண்டே இருந்தது.

சஞ்சய் அவர்கள் பட்டை தீட்டிக்கொடுத்த வைரத்தை எடுத்து வரதராஜன் தன் பங்கிற்கு, ஒரு தங்க ஆபரணத்தில் பதித்தது போல் பதித்துக் கொடுத்தார். அற்புதமான வாசிப்பு. சஞ்சய் அவர்கள் பாடியதில் எங்கேயாவது ஏதாவது விட்டு போயிருந்தால் அதையெல்லாம் தேடியெடுத்து இவ்வளவுதான் பேகடா இதற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல் வாசித்தார். தொடர்ந்தது கலையாமி ரகுராமம் என்ற க்ருதி. இந்த க்ருதியும், கலையாமி என்ற இடத்தில் நிரவலும், பேகடாவிற்கு ஒரு முழுமையை அளித்தது. ஸ்வாதித்திருநாள் மஹாராஜா மட்டும் இன்று இருந்திருந்தால் இந்த மாதிரியான ஒரு பேகடாவிற்கு, தன் ராஜ்ஜியத்தில் பாதியை எடுத்து இந்தாரும் பிடியும் என்று சஞ்சய் கையில் குடுத்திருப்பார்.

தொடர்ந்தது ஹமீர் கல்யாணி ஆலாபனை. பேகடாவிற்கு பிறகு பாடுவதற்கு ஏற்ற ஒரு ராகம். பேகடாவின் நேர் எதிரானதொரு வண்ணத்தை, உணர்வை, கொடுக்கக்கூடியதான ஒரு ராகமாக இது விளங்கியது. ஹமீர்கல்யாணி மிகவும் குழைவானதொரு ரக்தி ராகம். அந்த மாலை வேளையில், ஓரிரு எண்ணை விளக்குகள் மட்டுமே ஏற்றப்பட்ட அந்த அரங்கில், சஞ்சய் அவர்களின் குரலில் அந்த ஆலாபனை அனைவரையும் மதி மயங்கச்செய்தது. சஞ்சய் அவர்களின் ஆலாபனையும், வரதராஜன் அவர்களின் ஆலாபனையும் சேர்ந்து ஹமீர்கல்யாணி அனைவரின் மனதிலும் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டாள். தொடர்ந்தது காங்கேய வசனதர பத்மநாப என்ற க்ருதி. காங்கேய என்ற இடத்தில் ஸ்வரம் அபாரம்.

சஞ்சய் அவர்களின் இசையைப்பற்றி ஒரு வரியில் கூறவேண்டும் என்றால்... you expect the unexpected என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல நாம் எதிர்பாராத இடங்களில் நாம் எதிர்பாராத விதமாக நமக்கு ஆச்சரியங்களை அள்ளி வழங்குவார். ஹமீர்கல்யாணி ராக ஆலாபனையும் சரி, க்ருதியைத்தொடர்ந்த ஸ்வரமும் சரி மிகவும் வித்யாசமாகவும் புதுமையாகவும் இருந்தது. ஹமீர்கல்யாணி த்விமத்யம ராகம் என்று அழைக்கப்படும் ராகம். இந்த ராகத்தில் சுத்தமத்யமம் மற்றும் ப்ரதிமத்யமம் இரண்டும் பிரயோகிக்கப்படும் ஆனால் இரண்டு மத்யமங்களையும் அடுத்தடுத்து பாடி கேட்டதில்லை. சஞ்சய் அவர்கள் மமம என்று சுத்தமத்யமத்திலும் உடனே மமம என்று ப்ரதிமத்யமத்திலும் அற்புதமாக பாடினார். அன்றைய ஹமீர்கல்யாணி உண்மையில் ஒரு 'அமீர்' கல்யாணி தான் என்று எண்ண வைத்தது. அத்தனை உயர்வான, மேன்மையானதொரு படைப்பு. இதுவே வேறு ஒரு சபையாக இருந்திருந்தால் கரகோஷம் விண்ணைப்பிளந்திருக்கும். நவராத்திரி மண்டபத்தில் பாடப்படும் இசை, தேவிக்கு சமர்ப்பணமாக கருதப்படுவதால் அங்கு கைதட்டும் வழக்கம் கிடையாது.

தொடர்ந்தது தோடி ராக ஆலாபனையும், அன்றைய நாள் க்ருதியான பாரதி மாமவ என்ற க்ருதியும். கேரளத்து வழக்கப்படி அன்றைய ப்ரதான க்ருதியாகப்பாடப்படும் க்ருதிக்கு தானமும் பாடினார் சஞ்சய். ஹமீர்கல்யாணியின் அமைதிக்கு நேர் எதிராக சபையை நினைத்தது தோடியின் கம்பீரம். கொஞ்சம் கொஞ்சமாக தோடியை விஸ்தரித்துக்கொண்டே போக, வரதராஜனும் அற்புதமாக அவருடன் பயணித்துக்கொண்டே போக, ஆலாபனை, நிதானமாக தானத்தை அடைந்தது. தானத்தில் கனகம்பீரமாக ம்ருதங்கத்தில் நாஞ்சில் அருளும், கடத்தில் திருக்காவு சுதீரும் இணைய, பாரதியாம் வாணியின் புகழ்பாடும் பாரதிமாமவ அவையை வலம்வரத்தொடங்கினாள்.

ஜதிக்கோர்வைகளும், ஸ்வரங்களும் அமையப்பெற்ற அழகான க்ருதி பாரதி மாமவ. இந்தக்ருதியில் மஹாராஜா ஸ்வாதித்திருநாள் அந்த பாரதியை " அழகான பொன்விரல்களால் தான் மீட்டும் வீணையிலிருந்து பிறக்கும் ஒலியில் சுகித்திருப்பவளே" என்று வர்ணிக்கிறார். அந்த பாரதி தன் வீணையையும் மறந்து அதன் ஒலியையும் மறந்து சஞ்சய் அவர்களின் இசைக்கேட்க எழுந்தோடி வந்தாள், 'பாரதி மாமவ' வில் சுகித்திருந்தாள்.

தொடர்ந்தது மின்னாமல் பூமியில் இறங்கிய இடியும் மழையும். அருள் அவர்களும், சுதீர் அவர்களும் இணைந்து தனி ஆவர்த்தனத்தில் புயல் மழையை தருவித்தனர். பாட்டுக்கு வாசிப்பதானாலும் சரி, தனியாவர்தனமானாலும் சரி இந்த இருவர் கூட்டணி வெளுத்து வாங்கினார்கள். அற்புதமான நாதம், அனாயாசமான வாசிப்பு.

தனியாவர்தனத்தை தொடர்ந்தது ஜபத ஜபத ஹரிநாம என்ற ராகமாலிகை கீர்த்தனை. மாண்ட ராகத்தில் துள்ளலுடன் தொடங்கி, சுஷாமா என்ற ராகத்தில் ( நீலமணியை போலவே இருந்த இந்த ராகத்தின் பெயர் சுஷாமா என்று போட்டிருந்தது) மனதை நெகிழச்செய்து, பெஹாக்கில் இதயத்தை வருடி, சிந்துபைரவியில் சிந்தையில் நின்று மீண்டும் மாண்ட் ராகத்திற்கு வந்து சேர்ந்தது. மாண்டிலிருந்து லேசாக சுருட்டியை நோக்கிச்செல்ல, நாங்கள் சந்தேகத்துடன் கடிகாரத்தை பார்க்க நேரம் சரியாக இரவு 8.30. கச்சேரி நிறைவு பெறும் நேரம். இரண்டரை மணிநேரம் சென்றது கூட தெரியாமல், அனைவரும் சஞ்சய் அவர்களின் சங்கீதத்தில் கட்டுண்டிருந்ததை உணர்ந்தோம்.

நவராத்திரி மண்டபமும் அதில் சஞ்சய் அவர்களின் கச்சேரியும் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய அனுபவம்தான். அந்த அனுபவத்தையும் மன நிறைவையும் தந்த திரு. சஞ்சய், திரு. வரதராஜன், திரு. அருள், திரு சுதீர் மற்றும் பிரின்ஸ் ராமவர்மா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டும், அடுத்த வருடமும் அந்த அனுபவம் கிடைக்கவேண்டும் என்ற பிரார்த்தனையை தேவியின் பாதத்தில் வைத்துவிட்டு, சேர பூமியை விட்டு பல்லவ பூமிக்கு புறப்பட்டோம்.

Post Reply