Garuda

Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Garuda

Post by satyabalu »

Hindukkalin Prasad
பெரிய திருவடி கருட பகவானே உந்தன் திருவடி சரணம் சரணம்

"நான் பறவைகளில் பட்சிராஜனான கருடனாயிருக்கிறேன்' என்று கீதையில் கூறியுள்ளான் கண்ணன். நித்யசூரிகளில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார். பொய்கையாழ்வார் கருடனை போற்றுகையில் "அனந்தனாகிய ஆதிசேஷனைப்போலவே கருடனும் திருமாலுக்குப் பலவித சேவைகளைச் செய்கிறார்' என்று குறிப்பிடுகிறார். அனந்தன், கருடன், விஸ்வக்சேனர் என்ற வரிசையில், அனந்தனான ஆதிசேஷன் இலக்குவனாகவும், பின்னர் ராமானுஜராகவும், பின்பு பெரியஜீயர் மணவாள மாமுனிகளாகவும் அவதரித்தார். விஸ்வக்சேனர் நம்மாழ்வாராக அவதரித்தார் என்பதை அறிவோம். கருட பகவானோ வேத ஸ்வரூபி. ஆளவந்தார் கருடனை "வேதாத்மா விஹகேஸ்வரர்' என்று போற்றுகிறார்.

இவரை பெரிய திருவடி என்றும் போற்றுவர்.

ஸ்வாமி தேசிகனுக்கு அவருடைய ஆசார்யர் கருட மந்திரத்தைதான் உபதேசித்தார். அதை ஜெபித்ததால் அவருக்கு ஹயவதனின் அருள் கிடைத்தது. கருடனை "கருத்மான்' என்றும் அழைப்பார்கள். தீரன் என்பது அதன் பொருளாகும். யாருக்கும் அஞ்சாதவர். இவர் ஒருசமயம் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை எடுத்துவந்தாராம். (அது தனிக்கதை). அவரை தேவர்களாலும்- ஏன் தேவேந்திரனாலும் தடுக்கமுடியவில்லை. தன் இறகுகளை வீசி இந்திரனையே மயக்கமடையச் செய்தார். இதைக்கண்ட தேவர்கள் கருடனை "ஸுபர்ணன்' என்று புகழ்ந்தார்கள். இவரின் வீரத்தில் மகிழ்ச்சிகொண்ட திருமாலே, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, "நானே உமக்கு வரம் தருகிறேன்; என்ன வரம் வேண்டும்?' என்று திருப்பிக்கேட்டாராம்.

புன்னகைத்த திருமால், "நான் எப்போதும் உன் தோளுக்குமேல் இருக்கவேண்டும்' என்று கேட்டாராம். "அவ்வாறே ஆகட்டும்' என்றார் கருடன். பிறகு திருமால் கருடனிடம் "நீ வரம் ஏதும் கேட்கவில்லையே?' என்று வினவ, "நான் உமது தலைக்குமேல் இருக்கவேண்டும்' என்று கேட்க, திருமாலும் அருளினார்.

அதனால்தான் நாரணன் அவர் தோள்மீதேறி தம் வாகனமாகக் கொண்டார். கருடனைத் தன் கொடியாக ஏற்று, தன் தலைக்குமேல் பறக்கும் கொடியில் இருக்கச்செய்தார். இதுதான் நாம் திருக்கோவில்களில் பார்க்கும் கொடிமரத்தின் தத்துவம். கொடிமரத்தின்கீழ் கருடன் சந்நிதியும் அமைந்திருக்கும்.

தட்ச ப்ரஜாபதியின் பெண்களான வினதை, கத்ரு ஆகியோரை மரீசி மகரிஷியின் குமாரரான கச்யப முனிவருக்கு மணம்முடித்தனர். கத்ருவைவிட வினதை அழகானவள் என்பதால், ஒருவருக்கொருவர் பொறாமை இருந்துவந்தது. கத்ரு கர்ப்பம் தரித்து ஆயிரம் விஷப்பாம்பு முட்டைகளை ஈன்றாள். வினதைக்கு முதலில் ஓர் முட்டை பிறந்தது. பலநாட்களாகியும் முட்டை வெடிக்காத தால் அவசரப்பட்டு அதைப் பொரித்தாள். அதனால் அதிலிருந்து தோன்றிய அரு ணனுக்கு இடுப்பின்கீழ் உறுப்புகள் இல்லாமல் போய்விட்டது. அவனை சூரிய பகவான் தன் தேரோட்டியாக ஏற்றுக்கொண்டான். இரண்டாவது முட்டை மூலம் பிறந்தவர் கருடன். அதனால் அவருக்கு வைனதேவயன் என்ற பெயரும் உண்டு. கருட பகவானின் அவதார தினம் ஆடி சுவாதியாகும்.

ஏற்கெனவே வினதை, கத்ரு இருவருக்கும் பகைமையிருந்ததால், அவர்கள் பிள்ளைகளான கருடனுக்கும் பாம்புகளுக்கும் பகை தொடர்ந்தது. இந்த நிலையில் ஒரு சூழ்ச்சி மூலம் வினதையை தன் அடிமையாக்கிக் கொண்டாள் கத்ரு. இதையறிந்த கருடன் தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கத்தான் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தைக் கொண்டுவந்தார்.

கருடன் நாகங்களைக் கொன்றுவந்தார். இதற்கு ஒரு முடிவுகட்ட எண்ணிய பிரம்மா, தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சூரியன் தன் தேரின் லகானாக ஒரு பாம்பை ஏற்க, சிவபிரான் ஒரு பாம்பைத் தன் ஆபரணமாகக் கொள்ள, திருமாலானவர் ஆதிசேஷனை தன் அரவணையாக (படுக்கை) ஏற்றுக்கொள்ள, சில நாகங்களை கருடனே தன் ஆபரணங்களாக ஏற்றுக்கொண்டார். கருட பகவானுக்கு ருத்ரா, ஸுகீர்த்தி என்ற இரண்டு தேவிகள். இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம்.

கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் எப்படி சம்பந்தப்பட்டுள்ளார் என்றறியலாமா?

கஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கல்வியிழுக்க, அந்த ஆபத்திலிருந்து காக்க திருமாலை "ஆதிமூலமே' என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயுவேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்குமிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தார். அதனை பெரியாழ்வார், "உதவ புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த' என்று தன் பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.

இராமாயண காலத்தில் போர்க்களத்தில் இராம- லட்சுமணர்களை இந்திரஜித் நாக பாசத்தால் கட்டிப்போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளியவைத்தார்.

கிருஷ்ணாவதாரத்தில், சத்யபாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டுவந்ததாகவும் கூறுவர்.

கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் அவரை பெருமைப்படுத்த எண்ணி, பெரியாழ்வாரை யானைமீதேற்றி ராஜவீதிகளில் பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டுமகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தார்.

திருமாலின் திவ்யகருடசேவை காட்சி யைக் கண்ட பெரியாழ்வார், அவனுக்கு யாரேனும் கண்ணேறு (கண்திருஷ்டி) வைத்துவிடுவார்களோ என்று மனம் பதறி, "பல்லாண்டு பல்லாண்டு' என்று பாடுகிறார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு? அவனின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும், அவன் திருக்கரங்களிலே ஜ்வலிக்கும் சங்கு சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார். "அவன் இறைவன்; நாம் சாதாரண மானிடன். அவனை வாழ்த்துவதற்கு தனக்கு என்ன தகுதியிருக்கிறது' என்றெல்லாம் பார்க்கவில்லை. அவர்மீது ஏற்பட்ட பரிவு அவரை பரந்தாமனுக்கு பல்லாண்டு பாடவைத்தது. அதனால்தான் பூமிப்பிராட்டியை அவரின் திருமகளாய் அவதரிக்கச் செய்து, அவளையும் தன் நாயகியாய் ஏற்றுக்கொண்டு அவருக்கு மாமனார் ஸ்தானத்தையும் கொடுத்தார்- பரவையேறு பரமபுருஷனான பரந்தாமன். அதனால்தான் ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள். ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி யளிக்கிறான் அக்கருணா காகுத்தன்.

கருட பகவானைத் வணங்கினால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிட்டும்.

Post Reply