KavithaigaL by Rasikas

Post Reply
vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

கேள்வியொன்று, பதிலில்லை

Post by vgovindan »

தெரு நாயொன்று என்னைப் பரிதாபமாக நோக்கியது.
குரைக்கக்கூடத் தெம்பில்லையோ, என்றேன்
ஏழு நாட்களாயிற்று உணவுண்டு என்றது - உண்மைதான்.
கொரோனா கொரோனாவென்று ஊளையிட்டது.
பத்தடிக்கோர் உணவுக் கடை, தெருவெல்லாம் எச்சில்.
இப்படி அமோகமாக வாழ்ந்த எங்களை எப்படி பட்டினி போட்டுவிட்டீர்கள்?
ஆண்டவனை வேண்டுவதுதானே, என்றேன்.
மனித இனம்தான் ஆண்டவனை வேண்டும், எடுத்ததெற்கெல்லாம்.
நாங்கள் யாரும் அவனை யாரென்றறியோம் இன்றுவரை.
நான் யார், ஏன் பிறந்தேன், எப்படி வாழவேண்டுமென
இன்றுவரை அறிந்ததில்லை, அறிய வேண்டியதுமில்லை
உணவிருந்தால் போடு, உபதேசம் வேண்டாம் என்றது.
ஊமையாகத் திரும்பினேன் என் அபார்ட்மெண்ட்டுக்கு.
மிஞ்சிய உணவை நாய்க்குப் போடும் பழக்கம் மறந்து ஆண்டுகளாயிற்று.
குளிர்சாதனப் பெட்டி வந்து எத்தனை காலமானது?
ஆமாம், ஆண்டவனை, ஆண்டவனென்று இறந்த காலத்தில் ஏன் அழைக்கின்றோம்?
கேள்வியொன்று தொக்கி நிற்கின்றது, பதில் தேடுகின்றேன்.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

இன்னுமோர் அவகாசம்

Post by vgovindan »

கண்ணுக்கும் தென்பட இயலா கொரோனா - உனது
கண்ணில் விரலைவிட்டு ஆட்டுதல் கண்டாயா?
கண்மூடித் தனமாக உலகில் ஆட்டம் போடுகின்றாயே,
கண்மூடித் திறப்பதற்குள் உன் கதியென்னவாகிறது, காண்.
விண்வெளியில் ராக்கட் ஏவி உலகாளும் திமிரோ - அன்றி,
மண்ணைத் தோண்டிப் பொன் குவித்துக் கொழுத்த இறுமாப்போ,
எண்ணற்ற உயிரினங்களை உன் கேளிக்கைக்காகவும்,
தணிக்க இயலாத உன் ஃபேஷன் பேராசைக்காகவும்,
உணவென்ற பெயரினிலே உன் தீராத பசிக்கும் இறையாக்கி,
மண் முதலாக ஐம்பூதங்களையும் மாசுபடுத்தி,
திண்ணமாயிவ்வுலகில் இருப்போமென்ற உனது
எண்ணத்திலின்று மண்ணை வாரிப்போட்டது கண்டாயோ? உனது
காமாலைக் கண்களைத் திறந்திட, இயற்கையன்னையளித்த,
கடைசி அவகாசம் இதுவென்று இப்போதாவது உணர்வாயோ, அன்றி,
பிடிவாதமாக நான் இப்படித்தான் இருப்பேனென
முடிவோடிருந்தால், முடிந்திடும் உன் கதை நொடியினில்.
ஊருக்கு உபதேசம் செய்யும் நீ யாரெனக் கேட்கின்றாயா?
உன்னினத்தின் மனச்சாட்சியெனும் மூலையினின்று ஓர் தீனக் குரல்.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

எந்த சிவனைப் போற்றுவேன்?

Post by vgovindan »

மலை மகளை மணந்து, அழகெனும் முருகனையும்,
முதற்கடவுளெனும் தொந்தியானையும் பெற்று,
முதற்தொழிலோன் செருக்குத் தலையரிந்து,
இரண்டாமவனின் மோகனப் பெண்ணுருவம் கண்டு மோகித்து,
என்றும் பிரம்மசாரியான சபரி மலையோனுக்கும் தந்தையாகி,
ஊரெங்கும் தனிப் பெயர் கொண்டு, கோயில் கொண்டு,
மூன்றாம் தொழிலான சுருட்டலைச் செய்யும் சுடலையானையா - அன்றி

பிரமனும், மாலும் அடி முடி காண்பதற்கரிதாகி,
தனக்கென்றோர் பெயரின்றி, தந்தை தாயின்றி,
அனைத்திலும் நிறைந்து, அனைத்துக்கும் அப்பாலாகி,
அத்தனாகி, அம்மையாகி, உளதாகி, இலதாகி,
முத்தொழில்வருக்கும் மூத்தோனாகி, பித்தனாகி,
சித்தெனும் பேரரங்கில் களி நடனம் புரிந்து, என்
சிற்றறிவுக்குத் தூர நிற்கும் பரம்பொருளென்பவனையா?

விடை கண்டோரிடம் வேண்டினேன், ஐயம் தெளிவிப்பீரே.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

574
கொரோனா - தட்டுப்பாடு

பசிக்கு உணவு வேண்டும் ! பாட்டு கிடக்கட்டும்.
இசையெங்கே கேட்கும் பஞ்சடைத்த காதில் ?

ப்ரத்யக்ஷம் பாலா
15.04.2020

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

575
பரமன் !

பரமனுக்குப் பாரிலே பலப்பல பெயருண்டு
பரவலாக நாமதிலே மூன்றைக் கொள்வதுண்டு
சிவன் ப்ரம்மா மாலனென்று செபிக்கும்போது
அவன் தானே மூன்றும் ! அதை மறந்திடலாமோ ?

ப்ரத்யக்ஷம் பாலா
22.04.2020

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

576
போர்

பாருக்குள் ஒருசில மாக்கள்
பேருக்கு அலைவது அறிவோம்.
யாருக்கும் இடம் உண்டெனவே
போரையும் சகித்துக் தொலைப்போம்.

ப்ரத்யக்ஷம் பாலா
10.04.2020

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

145
வெல்லும் வழி

மல்லுக்கு நிற்காதே தொல்லை அளிக்காதே
சில்லறைச் சிந்தனைப் புல்லரைக் கொள்ளாதே
பொல்லாத உலகம் இல்லை எனத்தெளி
நல்லோர்கள் மிக உண்டு உண்மை.

மெல்லத் தொடக்கி நீ மெல்லிய பாட்டினை
சில்லெனப் பாடிடு சிரித்து மகிழ்ந்திரு
நல்லதை நினைத்திடு அல்லல் மறந்திடு
வெல்லும் வழி இங்கே தெரியும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
31.05.2006.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
The one presented as a tinypic image at Post#54 (08.12.2010) and lost, is re-presented here :-

009
திறமையைக் கூட்டு

பத்திரங்கள் என்ன செய்யும்
        போட்டிகள் வந்திடும் போது ?
எத்திப் பறித்திட்ட விருதால்
        ஏற்றங்கள் ஏதும் உண்டோ ?
தொத்திச் செல்வது எளிதே ;
        தருமம் உண்டோ அதிலே ?
கத்தியின் கூர்தனை ஒட்டி
        வகுக்கும் திறனும் இருக்கும்.
சுத்தியின் எடைதனை ஒட்டி
        சிதைக்கும் பலமும் இருக்கும்.
புத்தியை வலிதாய் மாற்று !
        புரட்சி முயற்சியை நாட்டு !
தித்திக்கும் சொற்களை ஈட்டு !
        திறமையை நாளும் கூட்டு !
எத்திசையும் புகழ் நாட்ட
        ஒத்திகை நித்தமும் தேவை !

ப்ரத்யக்ஷம் பாலா,
02.06.2006

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
The first song in this thread - Post #1, 30.11.2010 - not available now as it was posted as tinypic image. Posting it again :-

001
திருமண நினைவுகள்

கட்டுக் குடுமியும், கல்யாண கோஷமும்,
பட்டு வேஷ்டியும், 'பல்லாண்டு' முழக்கமும்,
கொட்டும் மேளமும், கும்மாளக் கூட்டமும்,
சிட்டும் சிறாரும், சிங்காரப் பெண்டிரும்,
பொட்டும் பூவும், பொங்கும் சிரிப்பும்,
நட்டும் நகையும், நலங்குச் சிவப்பும்,
லட்டும் முறுக்கும், 'லாலி' பாடலும் -- மனதில்
ஒட்டியே இருக்கும் ! விட்டு அகலாவே !

ப்ரத்யக்ஷம் பாலா,
11.02.2006

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

வள்ளிக் கிழவனுக்கோர் மலர்

Post by vgovindan »

வள்ளி மலரே, வள்ளி மலரே! உன்னைக்
கிள்ளியெடுத்துக் கொண்டையில் வைத்துக்
கொள்ள யாரும் இல்லையென்று ஏக்கமா? குற
வள்ளி அன்று தினைப் புனம் காத்திருக்க,
பிள்ளையாரெனும் தன் மூத்தோனை ஏவி, அவள்
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்டு,
கள்ளத்தனமாகக் கடிமணம் புரிந்த அந்தக்
கள்ளழகன் தணிகைக் குமரன்தன் புகழ்
பிள்ளைத் தமிழில் நான் பாடி, நித்தமோர்
வள்ளி மலரை அவன் மலர்த் திருவடிதன்னில்
மெள்ள வைத்துப் பணிந்தேன், குறை தீர்ந்ததா?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

ஆதிமூலத்திற்கோர் விண்ணப்பம்

Post by vgovindan »

முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திரன்,
முழுமுதற் கடவுளேயென அன்று முறையிட, நீ
கருடன் மேல் வந்து, காத்தது கேட்டேன். இன்று,
கோடரியேந்துவோனாய் நீ அவதரித்த, அந்த
கேரளமெனும் பரசுராம க்ஷேத்திரத்தினிலே,
காட்டு யானையொன்று ஊருக்குள் வந்ததென, ஊரார்
கருணை சிறிதுமின்றி, பழத்தில் பட்டாசு வைத்து, உண்ணத் தந்ததும், உண்மையறியாது, அதனை
உண்ட அந்த சூலுற்ற யானை, வாய் வெடித்து,
உன்னை அழைக்கவும் இயலாது, அழவும் தெரியாது,
நீரில் நின்றபடியே மாண்டதும் அறிந்திலையோ?
நீதி செய்வாயென முறையிட்டேன், ஆதி மூலமே!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

577
திருமண அறிவிப்பு

அங்கயற் கண்ணி அங்கம் சிலிர்க்க
ஆங்கோர் எழிலன் பொங்கி மகிழ்ந்தான் :

"மங்கல நிலவோ ? இங்கித மயிலோ ?
பங்கய மலரோ ? பைங்கிளி மாதே !
சங்கொலி முழங்க, கிண்கிணி பாட,
'மாங்கல்யம் தந்து' என மந்திரம் ஒலிக்க,
திங்கள் நன்னாளில் திருமணம் முடிப்போம் !"

ப்ரத்யக்ஷம் பாலா
08.09.2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

578
நல்வழி

அறிஞர்களை நாடு
அவர் நட்பைக் கூடு
அது எது எனத் தேடு
அடைவாய் திரு வீடு.

ப்ரத்யக்ஷம் பாலா
08.09.2016

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

579
அழகிய சிங்கன்

சுற்றும் விளக்கெரிய
மேற்றிசை நிலைத்திட்ட
முற்றிய முதல்வன்
சீற்றமுடைச் சிங்கன் -- போற்றி, போற்றி !

ப்ரத்யக்ஷம் பாலா,
24.06.2006

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

580
பகவத் கீதா (2.55)

கிருஷ்ணர் கூறியது :-
ஆசைகளைக் களை; ஆத்மாவைப் போற்று.
நிம்மதி கிடைத்ததா ? இப்போது நீ ஒரு ஞானி !

மொழியாக்கம்:
ப்ரத்யக்ஷம் பாலா,
29.01.2007

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

581
முகில்வேகம்

கருமேகம் புடைசூழக் கதிரவன் வந்தான்.
தருவெலாம் தழைத்தோங்க ஒளிஅள்ளித் தந்தான்.
நற்காற்று விரைந்தோடிக் கொணர்ந்த கருமேகம்
நெற்காய்க்கக் கொட்டியது ஆர்த்து வெகுநேரம்.

ப்ரத்யக்ஷம் பாலா,
02.05.2003

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

582
மன வீரம்

தனம் மிக வேண்டுமெனில்
மன வீரம் வேண்டும் ஐயா !
அது மிக எளிது;
கற்றிடுக !

ப்ரத்யக்ஷம் பாலா
31.03.2003

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

583
குறி

எய்தவனை விடுத்து
அம்பை நீ நோகாதே.
செய்தவனைப் பிடித்து
செம்மை செயச் செய்திடு.

ப்ரத்யக்ஷம் பாலா
03.04.2003

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

584
வாரிசு

நெற்றியிலே திலகமிட்டு
மத்தாப்பூ கதை சொல்லி
கண்மூடித் திறக்கையிலே
தெருக்கோடி தாண்டிவிட்டான் !

ப்ரத்யக்ஷம் பாலா
27.01.2005

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

585
பூவழகி

காதோரம் கொத்துப்பூ
இதழோரம் மத்தாப்பூ
நதியோரம் சந்திப்பு
நினைவெல்லாம் தித்திப்பு !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.01.2005

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

586
கவிதை நேரம்

காலை குளிர்ந்த வேளை
பாலைச் சொரியும் ஆவும்
பாலைச் சுவைத்த கன்றும்
சோலை நிறைந்த பூவும்
ஓலை அசையும் அழகும்
கோலை எழுத வைக்கும் !

ப்ரத்யக்ஷம் பாலா
09.02.2007

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

587
திருமண உறவு
(காண்க குறுந்தொகை 40)


என் தாய் யாரோ? உன் தாய் யாரோ ?
தந்தைகள் இருவரும் உறவா என்ன ?
என் வழி வேறு; உன்னது வேறு -- செம்
மண்ணில் கலக்கும் மழைநீர் போல
அன்பினால் கலந்தோம் இல்வாழ்வினிலே !

ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2006



-------------------------------------------
குறுந்தொகை 40
செம்புலப் பெயல் நீர்

யாயு ஞாயும் யாராகியரோ?
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்?
யானு நீயு மெவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே!
-------------------------------------------

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

588
இருத்தலைக் கொள்ளி

இருத்தலைக் கொள்ளி எனில் இடையிலே இருக்கலாமே!
திருநாடு போகும் வரை தெம்மாங்கு பாடலாமே!

ப்ரத்யக்ஷம் பாலா,
30.09.2006

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

589
கோடை

சுடும் வெய்யிலில்
வரண்டது தேகம்
இருண்டன கண்கள்.

சுடும் மணலிடை
சுரந்தது தண்ணீர் !
தெரிந்தது சுவர்க்கம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.02.2015

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

590
தைப்பொங்கல்

குளம்பொலிக்க கறவையினம் தறிகெட்டுத் துள்ள
இளஞ்சிறுவர் எக்காள கோஷமிட்டுக் குதிக்க
மதுகொண்ட பூச்சூடி மாக்கோலம் மிளிர
புதுப்பானை மணம்வீசப் பால் சிலிர்த்துப் பொங்கும் !

ப்ரத்யக்ஷம் பாலா
19.07.2003

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

591
அடிப்படை

வற்றா நதி வறண்டது.
வெட்டிய ஊற்றில் தெளிந்த நீர்.
வரிசையில் நின்றன குடங்கள்.

ப்ரத்யக்ஷம் பாலா
2014

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

592
நிறைவு (1)

ஆற்றங் கரையோரம்
நேற்றுப் போகையிலே
வேற்றூர் வேடச்சி,
சலங்கைச் சிரிப்பழகி,
குறிச்சொல்லக் கைப்பிடிச்சா;
மனசுலே இடம் பிடிச்சா !
தூங்காமல் அடம் பிடிச்சா !

என் மனசு நிரம்பிடிச்சு !
இனி அங்கே இடமில்லை !

ப்ரத்யக்ஷம் பாலா
27.01.2005

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

593
நிறைவு (2)

இற்றைக்குக் காலையிலே
இன்னொருத்தி கண்பட்டா
வண்ண மலர்க் கொத்தோ ?
வண்ணத்துப் பூஞ்சிட்டோ ?
வானத்து தேவதையோ ? ...

'வாழ்க நீ' என்று சொல்லி
வீடு திரும்பிவிட்டேன்.

என் மனசு காலியில்லை -- வேறு
யாருக்கும் இடமில்லை !

ப்ரத்யக்ஷம் பாலா
27.01.2005

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

594
ஆசை

திரு மந்திரம் என்னும்
அரு மருந்தை உண்டு
கருமம் தொலைத்த பின்னும் -- ஆசை
இருப்பதேனோ இன்னும்?

ப்ரத்யக்ஷம் பாலா
24.06.2004

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

595
வாழ்க்கைப் போர்

வில்லெடுத்து வீரம் காட்டு - பசும்
புல்லெடுத்து சிலம்பம் ஆடு - ஒரு
கல்லெடுத்து பெரும் கனலாக்கு - சிறு
சில்லெடுத்து ஓர் சிகரம் வீழ்த்து !

ப்ரத்யக்ஷம் பாலா
05.01.2015.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

PB,
vAzhkaip pOril 'siRu chilleDuthu sigaram vIzhthuvadu' pidithirukkiRadu--in its intent and intensity...:)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

@arasi
Thanks !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

@thanjavooran
Thanks !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

596
குடத்திலிட்ட விளக்கு

சுடர்விடும் சுழல்விளக்கு சுற்றிலும் ஒளியளிக்கும்;
இடரில்லா வழிகாட்டி எல்லோர்க்கும் பயனளிக்கும்!
குடத்திலிட்ட சிறுவிளக்கோ குடத்துக்குள் ஒளி சிந்தும்;
நாடிவரும் உயிர்களையும் நசித்துவிடும் அன்றோ?

ப்ரத்யக்ஷம் பாலா
19.04.2003

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

597
வெற்றி வாகை

கட்டுப்பெட்டி என்று சொல்லி
கொட்டிக் குட்டிச் சாடினார்கள்.

கூட்டை விட்டு ஓடிப்போனேன்,
பட்டி தொட்டி சுற்றி வந்தேன்;
மூட்டை முடிச்சு தூக்கிப் பார்த்தேன்,
மேட்டு வீட்டு வேலை செய்தேன்.

தட்டு முட்டு சாமான் விற்றேன்,
புட்டு சுட்டு விற்று வந்தேன்;
ஆட்டுக்குட்டி மேய்த்து வந்தேன்,
மாட்டைக் கட்டி மாரடித்தேன்.

சொட்டுச் சொட்டா துட்டுச் சேர்த்து -- இதோ
குட்டி வீட்டைக் கட்டிவிட்டேன் !

ப்ரத்யக்ஷம் பாலா
01.06.2006

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

kUTTu vAzhvu kUDAdena ninaindu paRandu--pin vITTaik kaTTik kuDi pugundu magizhndadE.

kUTTu and kUDAdu: each of these words can have two meanings!

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

PB,
What I meant was, there's scope for interpretations here...

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

598
பிறவி

பதுமையாய் இராதே எழு;
புதுமையாய் இனிதே உழு.
மதமாச்சரியம் விடு;
நிதமாச்சரியம் கொடு.

துன்ப வினைகளைத் தடு;
அன்பு விதைகளை நடு.
மனமொன்றி தினம் தொழு;
மனநிறைவுடனே விழு !

ப்ரத்யக்ஷம் பாலா
19.11.2013

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

599
அருள்வாய்

சொல்லாதிருப்பேனோ சொக்கனின் நாமங்களை ?
கொல்லாதிருப்பேனோ குவிந்திடும் ஆசைகளை ?
வெல்லாதிருப்பேனோ விடைத்திடும் பொய்மைகளை ?
கல்லாயிருப்போனே கண்திறந்து எனக்கருள்வாய் !

ப்ரத்யக்ஷம் பாலா
10.11.2008

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

600
சித்தி விநாயகா

சித்தி விநாயகா ! சற்றே குதித்தாடு !

அன்னை வியந்து மகிழ்ந்து கலங்கிட
ஆடல் அரசனும் ஆர்த்து முழங்கிட
நந்தி மருண்டிட அரவு எழுந்தாட
பக்தர் கூட்டம் பரவசம் பொங்கிட

சித்தி விநாயகா ! நீ சற்றே குதித்தாடு !

ப்ரத்யக்ஷம் பாலா
04.01.2011

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

PB,
This can be sung too, in a kIrtanai mode, it seems.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

601
பெம்மான்

செந்தழலைக் கரத்தில் ஏந்தி
சந்திரனின் பிறையைச் சூடி
செம்மானை விரலில் தூக்கும்
பெம்மானைத் தினமும் போற்று !

ப்ரத்யக்ஷம் பாலா
08.12.2013

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

602
கூத்தாடும் கைலாசா

தில்லைச் சரம் ஒத்த செஞ்சடைமீது
ஆகாச கங்கையொடு பிறையும் தாங்கி
இடியோசை டமரொடு மானும் தூக்கி
அண்டங்கள் அதிர அடியார்கள் குளிர
குஞ்சிதம் தூக்கிக் கூத்தாடும் கைலாசா ! -– போற்றி போற்றி !

ப்ரத்யக்ஷம் பாலா
04.02.2011

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

603
கண்ணா நீ கதை சொல்லாதே !

கண்ணா நீ கதை சொல்லாதே -- மோகனக்
கண்ணா நீ கதை சொல்லாதே

(1)
உரியிலே வைத்திருந்த
வெண்ணையெல்லாம் விழுங்கிவிட்டு
எனக்கொன்றும் தெரியாதென்று -- கண்ணா நீ

(2)
கோபியரின் மனம் புகுந்து
வெகுவாகக் கலங்க வைத்து
எனக்கேதும் தெரியாதென்று -- கண்ணா நீ

(3)
குசேலரின் குடிலுக்குள்ளே
பொற்காசு நிரப்பிவிட்டு
நான் ஏதும் அறியேனென்று -- கண்ணா நீ

(4)
பாட்டுப் பாடும் பக்தருள்ளே
பரவசத்தைப் புகுத்திவிட்டு
எதுவுமே தெரியாதென்று -- கண்ணா நீ

ப்ரத்யக்ஷம் பாலா
03.02.2011

rajeshnat
Posts: 9906
Joined: 03 Feb 2010, 08:04

Re: KavithaigaL by Rasikas

Post by rajeshnat »

PB
Wow the above one has prasa like structure so it can be tuned and sung in concert like a ovk krithi.... well done . Has pb sr - rajagopalan sir seen all your poems

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

@rajeshnat

Basically, my line of business was Project Finance Consultancy for export oriented industries, and most of the clients were at Maharashtra, Gujarat and Delhi. In 1998 we added the business of publication starting with an English magazine. Years later we started another magazine in Tamil. To fill a page in the new Tamil monthly, I started writing poems.

In the Tamil magazine, we had also allotted one page for Art/Music, and coverage was given to local art exhibitions and music programmes. The then Secretary of Bhairavi approached us seeking regular coverage to the music programmes of Bharavi. Accordingly we included regular reviews of the Bhairavi music programmes, and also provided free advertisement support. In addition, we also sponsored a few music programmes. Shri Rajagopalan, the ex-Secretary of Bhairavi, wanted to meet us to thank for the support, and that was how we came to know each other. From then on we looked forward to once-a-month meeting at Bhairavi.

Shri Rajagopalan had another common interest – Translation; he enjoyed translating French poetry. My interest was translating books from English/Tamil, in addition to minor translations from Hindi, Marathi, Rajasthani and Nepali. So, he requested me to review his fifth book of Translation of French poetry at the book release function held at Alliance Francaise. He was elated and thankful for my presentation.

In 2010, when I attended the Rasikas forum at Chennai, he was happy to give company.

Thus, our interactions were sporadic, but they were intense and cordial. He had admirable devotion to carnatic music, and his sense of humour was remarkable.

Now, coming to the query, his exposure to my poems was limited to what appeared in Agni magazine and in Rasikas.

rajeshnat
Posts: 9906
Joined: 03 Feb 2010, 08:04

Re: KavithaigaL by Rasikas

Post by rajeshnat »

Wow PB , i did not expect such a lovely reply , Thank you. I do recollect when both of you came to our Global Rasikas meet chaired by Nageswaran Sir. From that meet on i assumed both PB's are very close , certainly Pondicherry is lucky to have you both.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Rajesh,
Was it that long ago?
I remember their being late in arriving at the meet in T.Nagar (car trouble?). I left early for an afternoon concert at MA and missed them. Then, was surprised to meet them as I came out of the hall. They introduced themselves, two active Rasikas members from Puduvai. PB looking spiffy and Ponbhiravi in black garb, ready for his pilgrimage to Sabari malai.

PBala is quite a surprise package. Entrepreneur, poet, artiste (the family too) and art gallery owner too?

Rajesh, the treasures Dr. Pasupathy has been bringing, from literary pieces to humor to the tamizh language section are invaluable. Pundits to casual readers can derive joy from them and keep their tamizh sensibilities alive.

P Bala keeps the Poetry thread alive, bless him. No doubt, we miss Ponbhairavi whose writing kept us amused, let alone his thought-provoking writings.

Yes, along with knowledge about tamizhisai, tamizhArvam (zeal for the language) can also be cultivated here at Rasikas.org :)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

802
பூஜை
(கலி விருத்தம்)

துடைத்த தடத்தில் தூயகோலம் எழுதி
உடைத்த காயில் ஓரினிப்பு செய்து
கிடைத்த மலரில் கோலமாலை தொடுத்து
படைத்து வேண்ட பாவங்கள் கரையும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
02.01.2023.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

801
படையல்
(கலி விருத்தம்)

குறிவைத்து வான்மேகம் குலுக்கிக் களம் உயிர்த்திடுவேன்.
வெறிகொண்டு பூஞ்சோலை வெண்ணிலத்தில் சமைத்திடுவேன்.
சிறிதென்றும் பெரிதென்றும் சிங்காரபூ தெரிந்தெடுத்து
தறிகொண்டு வளம்செய்த தூய ஆடையொடு உனக்களிப்பேன்.

ப்ரத்யக்ஷம் பாலா,
01.01.2023.

Post Reply